Thursday, December 25, 2014

என்றும் போல அன்றும் ஒரு நாள்


என்றும் போல அன்றும் ஒரு நாள் 
அழகாய் விடிந்தது ,
ஆனால் பூமித்தட்டு 
மட்டும் சற்று அதிர்ந்தது ,
கடலும் தன் முகம் மாறி 
நிலம் வந்து புகுந்தது ...
அன்று மட்டும் 
கடலின் ஒவ்வொரு  அலைகளிளும்  
ஏனோ கொலைகள் விழுந்தன ,
பல உயிர்கள் மடிந்தன ..
உயிரற்ற உடல்களாக 
உயிர் மட்டும் கொண்ட பிணங்களாக
உணவற்ற ஜனங்களாக
உறவற்ற வெற்று மனங்களாக 
பல மக்கள் ..
ஆழிபேரலை வந்து ஆனது 
ஆண்டுகள் பத்து ,
அதன் துன்பியல் நினைவுகள் 
தொலைத்து போக முடியாத 
சோக சொத்து ..

Sunday, December 21, 2014

நான் யார்?
நான் யார்?

தான் ஒரு முட்டாள்
என்ற உண்மையை உணர்ந்த புத்திசாலி ..

பல நினைவுகளை மென்று தின்று
அதை சீரணிக்க முடியாமல்
இன்னும் மென்றுகொண்டிருப்பவன் ..

சில கவிதைகள் போல் சமயங்களில்
எத்தனை முறை படித்தாலும் புரியாதவன் ..

சோம்பலை துரத்தி துரத்தி
காதலிப்பவன் ..

இணையத்தில் மட்டும்
அநியாயம் கண்டு பொங்கும் போராளி ..

தன் மன-சன்னலை
சில கொசுக்களுக்கு பயந்து சாத்திவைப்பவன் ,
ஆனால் காற்றும் வருவதில்லை ..

Wednesday, November 5, 2014

தவிப்பு ..!பகலுடன்
ஓய்வெடுக்க
விடியலுக்காக
இரவெல்லாம் காத்திருக்கிறது
இருள்  ..

இரவுடன்
சேர்ந்துரங்க
இரவுக்காக
பகலெல்லாம் காத்திருக்கிறது
வெளிச்சம் ..

இரண்டும்
ஒன்றை ஒன்று சந்திக்கையில் ,
ஒன்றோடு
மற்றொன்று
தொலைந்து போகிறது ..
காத்திருப்பும்
தவிப்பாய்
தொடர்ந்து போகிறது ..

Friday, September 12, 2014

நிறம் மாறிய நிமிடங்கள்…சில உண்மைகளின் உண்மை முகம்
பொய்யென தெரிகையில் ,
நான் கடந்து வந்த தருணங்களை
என்னை கடந்து போன தருணங்களாக உணர்கையில் ,
மணமேடையில் வேற்றொருவனுடன்
அவளை கண்ட ஒற்றை நொடியில் ,
துரோகம் என் முகத்தில்
கருமை நிறம் பூசிய அந்த நொடியில் ,
பணமெனும் கண்ணாடியில்
உறவுகளின் உண்மை குணம் காண்கையில் ,
கடந்துவந்த, கடந்துபோன
காதல், பாசம், நட்பு, மனிதம்
என பல நிமிடங்களின் நிறம் மாறிப்போகிறது..

அலைகளாக மனதின் எண்ணங்கள்
அதன்  கரைகளாக  காலங்கள் ..
போகிறபோக்கில் கரைகளின் வண்ணங்களை
அலைகள் அடிக்கடி மாற்றிப்போகிறது..

Tuesday, September 9, 2014

மிருகங்கள் ஜாக்கிரதை ...


வயிரின் பசி தீர்க்க
உடலை வேட்டையாடும் மிருகங்கள்
காட்டில் உண்டு ..
காமப்பசி தீர்க்க
உடல் வேட்டையாடும் மனித - மிருகங்கள்
இங்கு நாட்டில் உண்டு ..

மது உண்டு - மதி கெட்டு
குடி உண்டு - குடி கெட்டு
விழியிருந்தும் குருடாகி
போலியாய் முரடாகி
காம பசி தீர்க்க
வேட்டையாட போகிறது மனித மிருகம் ..

பெண்பால் வேட்டையாடும்
மிருகம் மறந்து போனது
தான் தாய்பால் ருசித்தது
ஒரு பெண்பாலிடம் என்று ..

கருவில் இருந்தாள்
-சிசுவை அழித்தீர் ..
குழந்தையை கூட ,
ருசிக்கு புசிக்க நினைத்தீர் ..

ஏனோ பெண்ணை மட்டும்
கருவறை முதல் பிணவறை வரை
நிம்மதியாய் விட்டு வைக்கவில்லை ...

தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
என்னழகி ...

கார் மேகத்து நிறத்தழகி
மண்வாச சொல்லழகி ..
வெள்ளந்தி சிரிப்பழகி
மஞ்சல் பூசிய திங்கள் முகத்தழகி ..
குழந்தையா பழகும் அகத்தழகி..

இடமா உச்சியெடுத்த கூந்தல்,
என் உயிரை பிச்சியெடுக்கும்
இதழ் செங்காந்தல் ..

அவள் வளை பாடும்
இன்னிசை அலைகள் ..
அவள் முகபாவம்
ஒவ்வொன்றும் புது கலைகள் ..

மையிட்ட கண்ணால்
பேசாமலே பல வார்த்தை சொல்வாள் ..
மௌனத்தை ஆயுதமாக்கி
பல நேரம் எனை கொல்வாள் ..

அவள் தொடுத்ததால்
அக்கூடையில்
மீண்டும்பூக்கள்  பூத்தன ..
"போய் வா மச்சான் " , என
அவள் விடைகூறிய வார்த்தைகளே
எனை இன்றும் உயிரோடு காப்பன ..

பிழைப்புக்காக,
என்னவள் பிரிந்தேன்
வானம் பறந்தேன்
நாடு கடந்தேன் ..

எட்டா தூரம்
நீ இருந்தாலும் ,
பட்டுடுத்தி வாசல் வந்து
நீ வழியனுப்பிய காட்சி மறந்து போகல ..
மோனலிசா புன்னகையா
அப்போ உன்னோட சிரிப்பிக்கும் அர்த்தம் புரியல ..

விருப்பக்கவிதை 

மிருகங்கள் ஜாக்கிரதை ...!

வயிரின் பசி தீர்க்க
உடலை வேட்டையாடும் மிருகங்கள்
காட்டில் உண்டு ..
காமப்பசி தீர்க்க
உடல் வேட்டையாடும் மனித - மிருகங்கள்
இங்கு நாட்டில் உண்டு ..

மது உண்டு - மதி கெட்டு

குடி உண்டு - குடி கெட்டு
விழியிருந்தும் குருடாகி
போலியாய் முரடாகி
காம பசி தீர்க்க
வேட்டையாட போகிறது மனித மிருகம் ..

பெண்பால் வேட்டையாடும்

மிருகம் மறந்து போனது
தான் தாய்பால் ருசித்தது
ஒரு பெண்பாலிடம் என்று ..

கருவில் இருந்தாள்

-சிசுவை அழித்தீர் ..
குழந்தையை கூட ,
ருசிக்கு புசிக்க நினைத்தீர் ..

ஏனோ பெண்ணை மட்டும்

கருவறை முதல் பிணவறை வரை

நிம்மதியாய் விட்டு வைக்கவில்லை ...


Friday, August 22, 2014

ஆறுதல் ...

பற்றி எரிந்து கொண்டிருக்கும் 
அந்த வீட்டின் கூரையிலிருந்து 
தற்கால ஓவியம் போல 
நெளிந்து வளைந்து 
வெளிவருகிறது கரும்புகை ...

இரவை சூழ்ந்திருக்கும்  
இந்த இருட்டை விரட்டி விட்டபடி ,
அந்த வீட்டு  குடும்பத்தை 
மேலும் இருளில் தள்ளி விடுகிறது ..

ஒரு குடும்பத்தின் ஜீவனை
எரித்துக்கொண்டிருக்கும் அத்தீ ,
அந்த குடும்பத்தின் கண்ணீரால் 
அனையுமென தோன்றவில்லை ...

 "உதவி செய்ய யாரேனும் 
நிச்சயம் வருவார்கள் " என 
அவர்களுக்கு ஆறுதலை 
என் மனதிற்குள் சொல்லிக்கொண்டு ,
நாளிதழில் கடந்து போகும் 
செய்தி போல் ,
நேரில் கண்ட இதை  
கடந்து போய்க்கொண்டிருக்கிறேன் ....

Tuesday, March 25, 2014

ரௌத்திரம் பழகுவோம்


ஆத்திரம் பிறக்கட்டும் 
ரௌத்திரம் பழகுவோம் ..

அரசியல் காட்டில் 
ரூபாய் நோட்டு போட்டு 
வோட்டு வேட்டையாடும் 
மூடர் பாத்திரம் கண்டால் ..

ஆத்திரம் பிறக்கட்டும் 
ரௌத்திரம் பழகுவோம் ..

கொள்கைகளை நோட்டில் 
மட்டும் ஏற்றிவைத்து 
காந்தியமும் 
காந்தி நோட்டில் பூட்டிவைத்து 
வீதியெங்கும் கொள்கைவீரர் 
பேசும் சாத்திரம் கேட்டால் ..

ஆத்திரம் பிறக்கட்டும் 
ரௌத்திரம் பழகுவோம் ..

கோடிகளை 
அந்நிய மண்ணில் விதைப்பார் 
ஆட்சி அதிகாரத்தில்
 ஊறித் திளைப்பார் ..
நியாங்கள் பேசும் 
விசித்திர தலைவர் கண்டால் ..

ஆத்திரம் பிறக்கட்டும் 
ரௌத்திரம் பழகுவோம் ..


ரூபாய் நோட்டுக்கு 
கல்வி நோட்டு 
தரும் பள்ளிக்கூடம் ..
லட்சங்களை 
லட்சியமாய் கொண்ட 
பல்கலைக்கழகம் ..
கல்வியை வியாபாரமாக்கிய 
கல்வித்தந்தைகள் கண்டால் ..

ஆத்திரம் பிறக்கட்டும் 
ரௌத்திரம் பழகுவோம் ..

சாதியம் பேசி 
சங்கங்கள் வைத்து 
ஓட்டு வங்கி கூட்டி 
தங்கள் காரியம் சாதிப்பார் 
சண்டை சச்சரவுகளை 
பெருமையாய் போதிப்பார் 
சாதித்தீயில் குளிர்காயும் 
வீணர்கள் கண்டால் ..

ஆத்திரம் பிறக்கட்டும் 
ரௌத்திரம் பழகுவோம் ..
Friday, March 21, 2014

ஏரி ..


அமைதியை தன்னுள் நிரப்பி வைத்து 
அமைதியாக காற்றோடு 
சலசலத்துக் கொண்டிருக்கிறது எரி ...

ஊரின் ஓரம் 
அழகாக அமர்ந்திருக்கிறது 
தவம் செய்யும் ஒரு 
முனி போல ..

கடலோடும் 
காதலில்லை 
அமர்ந்த இடம் தாண்டி 
போவதில்லை ..

மண் மீதும் 
மழை மீதும் 
தீராக்காதல் ..

மண்ணை 
மணம் கொண்டு 
படிதாண்டாய்  ..

பெரு மழையின் 
பெருங்காதலில் 
மனம் மயங்கி 
படி தாண்டி 
நிலம் பூண்டாய்
பெருவெள்ளமாய்  ..

இரவில் 
நிலவின் சிறு 
கைக்கண்ணாடியாய் ...

ஊரின் மழை 
அத்தனையும் குடிக்க முயன்று  
குடிக்க முடியாததை 
வெளியே துப்ப முயன்று 
தோற்றுப்போய் 
தன்னுள் தேக்கி வைத்திருக்கிறது ..

Saturday, March 15, 2014

கடந்து போகமுடியாத தருணம் ...இதுவும் கடந்துபோகும் என 
கடந்து போகமுடியாத 
ஒரு தருணத்தை 
கடந்துகொண்டிருக்கிறேன் ..

அந்த தருணங்கள் யாவும் 
தொடங்கியது முதலே  மனதில் 
வேரூன்ற தொடங்கி விட்டது ..

அதன் ஒவ்வொரு கணமும் 
ரணம் தருகிறது  
அந்த வலிகள் யாவும் 
புத்தியை கிலி பிடிக்கவைக்கிறது 
புரிந்ததை 
புரியாததை போல் நடிக்கவைக்கிறது 

இறுதியில் 
நியூட்டனின் மூன்றாம் விதியின் 
தழை கீழ் விதியை 
இந்த தருணம்காட்டியது ..

சுற்றி இருக்கும் 
பிறரின் வாழ்கை மாறிப்போனதால் 
அந்த தருணங்களை 
நான் கடந்து போனதாக தோணலாம் 

உண்மையில் 
நான் அந்த தருணங்களை 
கடக்கவில்லை 
தருணங்கள் தான் 
என்னை கடந்து சென்றது ..

காலம் கடந்து போனது 
காட்சி மறைந்து போனது 
மனம் மட்டும் ஏனோ தன்னுள் 
தருணங்களை ஆயுள் கைதியாக்கி 
எனக்கு உயிரோடு மரண தண்டனை விதித்தது 

Sunday, February 2, 2014

சில கேள்விகள் ..வாசம் ,
பூவின்  இருப்பிடம் பிடிக்காமல் 
காற்றுடன் ஓடிபோகிறதா ?
இல்லை ,
வழுக்கட்டாயமாக 
காற்று பூவை திறந்து 
வாசத்தை கவர்ந்து செல்கிறதா ?

கண்ணீர்,
கண்களை விட்டு வெளியே வந்து 
தற்கொலை செய்துகொள்ள விரும்புகிறதா ?
இல்லை 
பிறர் விரல் வந்து தன்னை 
காப்பாற்றும் என்று விரும்பி குதிக்கிறதா ?

மழை ,
பூமியின் அழகை கண்டு 
உருகும் மேகம் மழையாகிறதா ?
இல்லை 
உலகின் நிலை கண்டு 
அழும் மேகம் மழையாகிறதா ?

நிலவு ,
வானில் தவழ்கிறதா ?
இல்லை 
மேகத்தில் மிதக்கிறதா ?

Friday, January 31, 2014

வறுமையின் நிறம் கருப்பு

இது  
மனிதன் முதலில் 
ஜனித்த கண்டம் 
இங்கே உயிர் வாழ்வது 
ஒவ்வோர் நொடியும் கண்டம் ..

கண்ணீரும் இல்லை எங்கள்
அழுகைக்கு ..
புன்னகை இல்லை எங்கள்
சிரிப்பிற்கு ..
 
உயிரோடு எங்கள் உடல் அழுகுகிறது ..
உயிரும் அதை கண்டு அழுகிறது ..
 
ஈக்களும் 
புழுக்களும் என்னை மொய்க்க ..
கடவுளும் 
மனிதனும் இங்கே பொய்க்க ..
 
வறுமை என்ற வார்த்தை போதாது 
எங்கள் துயரம் சொல்ல ..
பசி வந்து எங்களை தின்று 
போகிறது நிதமும் மெல்ல மெல்ல ..

அழுகை எங்கள் 
தாய் மொழி ...
நாங்கள்  இக்கண்டத்தின் 
தேசிய விலங்கு ...

உணவு தினசரி 
எங்கள் கனவு ..

இது  
மனிதன் முதலில் 
ஜனித்த கண்டம் 
இங்கே உயிர் வாழ்வது 
ஒவ்வோர் நொடியும் கண்டம் ...

Friday, January 24, 2014

உறவுகள் ..
சிலருக்கு நாம் வழியில் 
சாலையில் கடந்து போகும்
மரங்கள் 
நமக்கு சிலர் வழியில் 
சாலையில் கடந்து போகும் 
மரங்கள் ..


Monday, January 20, 2014

குழந்தையின் ஒற்றைச் செருப்பு ...சாலையின் நடுவில் விடப்பட்ட 
குழந்தையின் ஒற்றைச் செருப்பு 
தனித்து 
தனிமையில்
தவித்து கிடக்கிறது ...

பிஞ்சு பாதங்களை 
கடிக்க மனமின்றி 
விழுந்து தற்கொலை
செய்து கொண்டதா ?
இல்லை 
பிஞ்சு பாதங்களின் 
வாஞ்சையில் மயங்கி 
விழுந்ததா ?

Monday, January 13, 2014

பொங்கல் வாழ்த்துக்கள் ..


மணல் எடுத்தோம் 
நதியை அழித்தோம் ..

செயற்கை உரம் தெளித்தோம் 
வயல் வெளி அழித்தோம் ..
அதில் பணக்கார பயிரான 
அப்பார்ட்மெண்ட் விதைத்தோம் ..

மேய்ச்சல் போக 
புல்வெளி இல்லை ,
குப்பைவெளியில் 
மாடுகளும் காகிதம் 
திங்க பழகிப்போகிறது ..

போகிப்பண்டிகையில் 
பிளாஸ்டிக் கொளுத்தி 
பூமிப்பந்தும் 
கரும்புகையால் 
இரும்பிப்போகிறது ..

நரகாசுரன் அழித்து 
தீபாவளி கொண்டாட்டம் ..
விவசாயம் கெடுத்து ,
விவசாயி அழித்தா 
நம் பொங்கல் கொண்டாட்டம் ???

பொங்கல் வாழ்த்துக்கள் ..

Saturday, January 11, 2014

காய்ச்சல்காய்ச்சல் ,
அது ஒரு அழகிய 
அனுபவம் ..

குளிரில் 
கொதிக்கும் உலோகம் 
இந்த தேகம் காய்ச்சலில் ..

போர்வைக்குள் குடியிருப்பு 
காற்றை கண்டால் வெறுப்பு ..

போர்வைக்கும் வியர்க்கும் 
அனலாய் உடல் கொதிக்கும் ..

எப்போதும் குளிரில் நடுக்கம் 
கண்மூடி பல பிரச்சனை மறக்கும் 
நோயோடு மட்டும் உறக்கம் ..

நுண்ணுயிர்கள் உடலுக்குள் 
கபடி ஆடும் ..
மருந்து மாத்திரை 
அதை எதிர்த்து விளையாடும் ...

நோயுற்ற போது 
தாய் வந்து நெற்றியில் 
கைவைக்கும் போது 
மீண்டும் குழந்தையாகலாம் ..

தாய் வந்து ஊட்டும் 
ரசம் சோற்றுக்காக 
எத்தனை முறையும் 
நோயோடு உறவாடலாம் ..

இப்போது சொல்லுங்கள் 
காய்ச்சல் ஒரு அழகிய 
அனுபவம் தானே ..