Wednesday, December 25, 2013

காத்திருப்பேன் என் கண்ணீருடன் ...!


தினமும் உன்னை தேடி ,
நீ தரும் செல்வத்தை நாடி ..
 உயிரை பணயம் வைத்து 
படகில் பயணம் வைத்து வருவோம் ,
உன்னிடம் பிச்சை கொண்டு திரும்புவோம் ..

தினமும் எனை மட்டும் பார்த்தது ,
எனக்கு தந்த செல்வம் போதாது 
என என்னை காண வந்தாயே 
என்னை காத்துவந்த தாயே ..

நீ தாய் தான் ,
தெய்வத்தாய் தான் ,
அதனால் தான் 
என் வீட்டை காண வந்தாயோ ?
என் பிள்ளைகள் பிடித்துப்போய் 
என் குடும்பத்தையும் உடன் கொண்டு சென்றாயோ ?
எப்போது என் குடும்பத்தை திரும்பி அனுப்புவாய் ?

அனுப்பும் வரை இங்கே காத்திருப்பேன் 
என் கண்ணீருடன் ...!

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..!சிலுவையில் அறையப்பட்ட 
தேவனிடத்திலிருந்து சிதறிய  இரத்தால் 
பாவம் கழுவிய 
எங்கள் பாவத்தை எங்கே கொண்டு  கழுவ ..

தேவாலயத்தில் 
மெழுகுவத்தியை அழவைத்து 
நாங்கள் கேட்ட மன்னிப்புக்கு 
எங்கே சென்று மனிப்பு கேட்க ...

பிறரின் பாவங்களுக்கு ,
மனமுவந்து சிலுவை ஏற்கும்
ஒவ்வொருவரும் தேவன் மகனே ..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ..

Friday, December 13, 2013

இது மயிரைப்பற்றி ...!
மயிர் ,
அது கெட்ட வார்த்தையல்ல ...
என்றோ
யாரோ
ஒருவருடைய கோபத்தில்
விளைந்த வன்மத்தால் ,
தீந்தமிழ் சொல்
தீய சொல்லானது ..


மயிர் ,
ஆண்டவன் விளையாட்டாய்
தலையில் விளைவித்த
உயிரற்ற  பயிர் ..

ஆண்களிடம் அதிகமாய் இருந்தால்
அவன்  பொறுக்கி

பெண்களிடன் சிறிதாய் இருந்தால்
அவள் சிறுக்கி

நம் தலையில் நின்று
நம் பேச்சை கேட்காமல்
எங்கிருந்தோ வந்த காற்றின்
பேச்சை கேட்கும் ,
சில உறவுகள் போல..

பேன் போன்ற
சிறு உயிர்கள் வாழும்
சிறு கருங்காடு ..

இயற்கை மனிதனுக்கு
முதலில் அணிவித்த
மேலாடை ..

 மனிதனின் உண்மை வயதை
கண்ணாடி முன் காட்டும்
உண்மை கண்ணாடி நீ ..

கருப்பு அழகானது
உன்னிடம் தான் ..
வேண்டுதலுக்கு கடவுளை
ஏமாற்றுவது
உனை கொடுத்து தான் ...

பாண்டியன் சந்தேகத்தை
ஆண்டவன் தீர்த்த விளையாட்டின்
கரு நீ ...
இளமையின் உண்மை உரு நீ ..

உண்மையில் நம் தலையில் வைத்து
ஆடுவது மயிரை தான் ..

Sunday, December 1, 2013

நிலவின் கேள்வி ..!என் வீட்டு ஜன்னல் 
வழி வந்து பார்க்கும் நிலவு 
என்னைப்பார்த்து கேட்கிறது 
ஏன் உள்ளே சிறை பட்டாய் என ?
என்னிடம் பதில் இல்லை 

Saturday, October 26, 2013

நிழல்கள் ...!நின்று களைத்த 
மரங்கள் யாவும்
தரையில் படுத்து ஓய்வு எடுத்தன 
நிழலாக ....!

Wednesday, October 23, 2013

நாம் சிரிக்கும் நாளே தீபாவளி ...!


குழந்தைகள் குதூகலிக்கும் 
காகிதம் மறைத்திருக்கும் 
ஒளியும் ஒலியும் 
பொக்கே - பட்டாசு  தீபாவளி 

ஏழைகளின் வயிற்றெரிச்சலில் 
வெடித்து போகும் 
பட்டாசாலை -சிவகாசி  தீபாவளி 

தன் முதலாளி வீட்டின் 
பழையென கழிந்ததை 
புதுசென தன் பிள்ளைக்கு 
அழகு பார்க்கும் - ஏழை தீபாவளி ..

டாஸ்மாகின் வருமானம் 
புது இமையம் ஏற்றிடும் 
குடிமக்கள் தீபாவளி ..

திரைகடல் ஓடிய 
தனிமையில் வாடிடும் 
சில உறவுகள் -தனிமை தீபாவளி ..

தீபாவளி முந்நாள் இரவு 
தொங்களில் பயணப்படும் 
மண்வாசனை தீபாவளி ..

தொலைகாட்சியில் 
தொலைந்து போகிறது 
நவயுக குடும்ப தீபாவளி 

வேட்டுச் சத்தம் மறந்து 
சம்பள நோட்டுக்கு வேலை செய்யும் 
கார்ப்ரேட் தீபாவளி ..

ராவணன் வென்ற 
ராமன் கதை பேசும் 
ஆரிய தீபாவளி ..

நரகாசுரன் கொன்ற 
கண்ணனை பேசும் 
திராவிட தீபாவளி ..

மொத்தத்தில் 
சிரிப்பு வேட்டுச் சத்தம் கேட்க 
வாழ்வில் மகிழ்ச்சி ஒலி பூக்க 
நாம் சிரிக்கும் எந்நாளும் தீபாவளி ...

Thursday, October 17, 2013

தனிமை ...


 
வார்த்தைகளை கூட
தனது துணையாய் பயன்படுத்த முடியாத
சூழ்நிலையில் சில தனிமைகள் இருக்கிறது ...
 
இறவா
விடியற் பொழுதில்
கொக்கரிக்கும்
ஊமைச் சேவலாய்
இந்த தனிமையும் கொக்கரித்து போகிறது ..
 
தனது
கால்தடங்கள் தெரியாவண்ணம் இருக்க 
வந்த வழிநெடுக
புன்னகை சிந்தி  
அழித்து போகிறது ...
 
உடைந்து போன
கண்ணாடியின் பின்பங்களை
ஒன்றுசேர்க்க முடியாமல்
அந்த சிதறிப்போன கண்ணாடியிலேயே
தன முகம் பார்த்துக் 
வெறுமையில் சிரிகிறது தனிமை ...
 
சிறைபட்ட பூவிலிருந்து தப்பித்து
காற்றோடு போய்
கரைந்து
மறைந்து
தொலைந்து போன தன்னைத் தானே தேடும்
வாசம் போல
தன்னை தேடுகிறதிந்த தனிமை ....
 
பாலைவனத்தில்
ஒற்றையாய் நிற்கும்
பட்டுப்போன மரத்தில்
தேன் குடிக்க காத்திருக்கும்
வண்ணத்துபூச்சிக்கு
தனிமை சொல்லும் 
உண்மை புரிவதில்லை ..  
 
 தனது தனிமையை
போக்க துணையாக
மீண்டுமொரு தனிமையிடமே
சரணடைந்து
தனிமையில் வாடுகிறது தனிமை ...

Monday, October 14, 2013

இணையக்காதல்


நான் போடும் 
கிறுக்களுக்கு 
முகபுத்தகத்தில் 
நீ போடும் விருப்பத்துக்காக 
மடிக்கணினியை 
மணிகணக்கில் 
என் மடியோடு 
அணைத்தப்படி 
திரை மீது 
விழி வைத்து
காத்திருக்கிறேன்

Sunday, October 13, 2013

சத்தம்புரியும் 
சத்தங்கள் யாவும் 
மொழியாகிறது ,
புரியாத சத்தங்கள் யாவும் 
வலியாகிறது 

உண்மை அர்த்தம் ..!குப்பையில் 
எறியப்பட்ட காகிதத்தில்
எழுதிய கவிதையின் 
அர்த்தத்தில்
எந்த மாற்றமும் இல்லை ...

தூங்கா நினைவுகள் ..


சில நினைவுகள் மட்டும் 
வேண்டாதவையாக 
தீண்டாதவையாக 
இருந்தும் 
அடிக்கடி 
வந்து போகிறது 
சுகமாக ..


சில 
சொல்வதுமில்லை 
வெல்வதுமில்லை 
ஆனாலும் 
மனதை விட்டு 
விலகுவதுமில்லை ..

சில 
பார்வையிலே 
புன்னகை கோர்வையிலே 
மட்டும் இருந்திருக்கும் ..
ஆயினும் 
கண்மூடும் வரை 
உள்ளிருக்கும் ..

காரணமில்லை 
காரியமில்லை 
பருவத்தில் 
உருவான புயலால் 
உண்டான சேதத்தின் 
மிச்சம்..

தனிமையில் 
விழிக்கும் 
இரவினில் 
முழிக்கும் 
கனவினில் 
ரசிக்கும் ..

மழைச்சாரலில் 
மோட்டர் பயணமாய் ..

முதற்பதியம் 
போட்ட நிலமாய் 
அதன் பயிராய் 
அதன் நினைவுகள் 
பசுமையாய்   ..

இறுதியாய் 
கண்மூடும் போது 
இது தூங்கும் ..
வாழ்கை முழுதும் 
இதன் பாரம் தாங்கும் ..

தாய்க்கு 
தலைமகனாய் 
இந்த நினைவுகள் 
ஒவ்வொருவருக்கும் ..


Monday, October 7, 2013

நான் ஏன் எழுதுகிறேன் ?


எதையோ எழுதுகிறேன் 
காரணம் இல்லை ,
முடிக்க நினைக்கிறன் 
எழுத்துக்கள் விடுவதில்லை ..

முடிக்க எண்ணி 
முற்றுப்புள்ளி வைக்கிறேன் ..
என் எழுத்துக்கள்  பிடித்துப்போனதால் என்னவோ 
மீண்டும் ஒரு முறை பேனாவிலிருந்து குதிக்கிறது 
முற்றுப்புள்ளி
முடிந்ததை  தொடர்புள்ளியாக்குகிறது ..

நான் விரும்பினாலும் 
விருப்ப ஓய்வை 
என் சிந்தையும் பேனாவும் 
வெறுக்கிறது 
மீண்டும் மீண்டும் 
காகிதத்தில் எதையோ கிறுக்குகிறது ...

தனிமை..!அந்த வீட்டின் 
முற்புறத்தில் இருக்கும் 
ஊஞ்சலில் உறவாட யாரும் இல்லை ,
தினமும் காற்று வந்து 
ஊஞ்சலில் உறவாடி செல்கிறது ...

Sunday, June 30, 2013

சோம்பல்- நீ என் காதலி...!சோம்பல் 
நான் விரும்பி அணைக்கும் காதலி ..

உனை முதல்முதலில் எங்குசந்தித்தேன் ,
கருவறையில் விழிப்புக்கு ஓய்வு கொடுத்தபோதா ?

சொல்லப்போனால் 
என் முதல் காதலும் நீ தான் 
இன்றுவரை என்னோடு இருக்கும் ஒரே காதலி நீ தான் ..

எப்போது என நினைவில்லை ,
எப்போதும் என் நினைவில் இல்லாமல் இல்லை ..

என் வளர்ச்சிக்கு தடையாக நின்றாய் ,
என் முயற்சிக்கு குறுக்காய் நின்றாய் ,
என் பெற்றோர் கோபம் கொள்ள காரணமாக இருந்தாய் 
ஆயினும் உன் மீது 
சிறிதும் கோபம் வந்ததில்லை ,
என் காதலும் குறையவில்லை ....

பல நேரம் உனை கட்டி அணைத்தப்படியே  
கட்டிலில் உறங்கி இருக்கிறேன் ..
உனை சிந்தித்தபடியே 
எங்கும் கிறங்கிஇருக்கிறேன் ..
உனை வெறுக்கும் அத்தனை 
முயற்சியிலும் தோற்றிருக்கிறேன் ..
அதிகாலை விழிப்பில் 
முதலில் 
நினைவில் நீதான் ..
இரவில் 
உறக்கம் வருகையில் 
முதலில் நீதான் ..


யார் வெறுத்தாலும் 
யார் மறுத்தாலும் 
என்னுள் 
என் சிந்தையுள் இரண்டற கலந்த 
சோம்பல்- நீ என் காதலி ...

Monday, June 24, 2013

மழை...!மழையில் நனைந்தபடி
என் வீட்டு
ஜன்னல் கண்ணாடி வடிக்கிறது
ஆனந்த கண்ணீர் ..

Saturday, June 1, 2013

வீழாதே ..!
கண்ணீர் வற்றிப்போகும்
புன்னகை வற்றாது ..

துக்கம் கடந்து போகும்
வாழ்க்கை முடியாது ..

கண்ணீர் விழும்
கண்கள் விழாது ..

முயற்சியில் தோற்கலாம்
முயற்சி தோற்காது ...

அன்பு ஏமாற்றப்படலாம்
அன்பு ஏமாற்றாது ..

பகலும் முடியும்
இரவும் விடியும் ...

தோல்வியும் உரமாகும்
வெற்றியின் விதைக்கு ..

வெற்றியை வளர்க்க
தீ மூட்டு சோம்பலின் சிதைக்கு ..

வெளிச்சம் சுகம் காண
சிறிது இருளும் வேண்டும் ..

கனவின் முகம் காண
இரவும் வேண்டும் ..

இரவு விடியாமல்
முடியாது ..!
Friday, May 31, 2013

உணர்ச்சிக் கண்ணாடிஎன் கோபம் சில நேரம் 
மௌனமாய் அமைதி காக்கிறது ..

என் மகிழ்ச்சி சில நேரம் 
கண்ணீராய் உருண்டோடுகிறது ..

என் சோகம் சில நேரம் 
சிரிப்பாய் சிதறுகிறது ..

என் அன்பு சில நேரம் 
வெறுப்பாய் வெளிபடுகிறது ..

என் பேச்சு சில நேரம் 
மௌனமாய் பேசுகிறது ..

என் நட்பு சில நேரம்
 காதலாய் வெளிப்படுகிறது ..

என் காதல் சில நேரம் 
காமமாய் தோன்றுகிறது ..

இப்படி எனது சில உணர்சிகள்  
எதையோ உணர்த்த 
எதையோ வெளிப்படுத்திபோகிறது  ,
காட்சிகளை நேராக காட்டும்
தலைகீழாக தொங்கவிடப்பட்ட 
கண்ணாடி போல ...


Saturday, May 11, 2013

மணல் ...!

நிதிகள் 
கற்களை சலவை செய்ததில் 
அழுக்காய் வந்தன 
மணல் ...!Sunday, April 21, 2013

காகிதங்கள் கொண்ட கோபம் ..!

காகிதங்களும் 
பேனாவும் 
என் மீது கோபம் கொண்டன ..!

கவிதையை
வடம் பிடித்து வர ,
அவற்றை மறந்து 
நான் கணினியில் 
பயணம் செய்வதால் ..!


என் கணினி மீது அவை 
பொறாமை கொள்கிறது ..
தாய் மருமகள் மீது 
கொண்ட பொறாமை போல, 
நேற்று வந்த நீ 
என் இடத்தை நிரப்பி விட்டாயென ..
எல்லா கணவன்களைப் போல் 
நானும் இந்த பொறாமையை இரசிக்கிறேன் ..!


Sunday, April 14, 2013

நிழல்கள்...!
மரங்கள் யாவும் 
நிலத்தின் மீது 
மயங்கி விழுந்தன- நிழலாக ,
வெயிலின் கொடுமை 
தாங்க முடியாமல் ...!

Thursday, April 11, 2013

குற்றஉணர்ச்சி ...!யாருடைய கோபமென 
தெரியவில்லை ..
என் கண்களை 
கலங்க வைக்கிறது இந்த தூசி  ...!

Saturday, March 9, 2013

இருளோடு பயமேன் ?


கருவறையில்
இருளோடு இருந்தோம்
இருந்தும்
இருளோடு பயமேன் ?

கண்மூடி
இருளோடு கலக்கும் போது
மனதோடு உணர்ந்தோம்
இருந்தும்
இருளோடு பயமேன் ?


இரவில்
உறங்கையில்
வெளிச்சம் வெறுத்தோம்
இருளை அனைத்தோம்
இருந்தும்
இருளோடு பயமேன் ?

கனவு வந்து
அங்கே தன்படம் காட்டும் ..
காதலர்களுக்கு
தனிமையுடன் சேர்ந்து
புது இனிமை கூட்டும் ..
மனைவியின் தலையணை
மந்திரத்திற்கு
தனி ராகம் சேர்க்கும் ..
இருந்தும்
இருளோடு பயமேன் ?

வெளிச்சம்
பூட்டிவைக்கும் ..
புறக்காட்சி
மறைத்துவைக்கும் ..
அகக்காட்சி
திறந்துவைக்கும் ..
இருந்தும்
இருளோடு பயமேன் ?

Thursday, February 21, 2013

இல்லை , இல்லாமல் இல்லை ..!

இல்லை , இல்லாமல் இல்லை ..!

விழிகள் 
காட்சிகளை மறைப்பது 
கண்களுக்கு கோபமில்லை ..

உயிரை 
தாங்கிகொள்வது 
உடலுக்கு பளுவில்லை ..

காற்று 
வந்து செல்வது 
இதயத்திடம் சொல்வதில்லை ..

சில நினைவுகள் 
சுமப்பதால் 
மனதிற்கு பாரமில்லை ..

வார்த்தைகள் 
நாவின் நுனி வரை நின்றும் 
சில நேரம் பேச்சு வருவதில்லை ..

கண்கள் காயப்பட்டும் 
சில நேரம் கண்ணீர்சிந்துவதில்லை ..

மனம் காயப்பட்டும் 
மனதின் கண்ணீர் 
பிறர்க்கு தெரிவதில்லை ..

பல நேரம் 
புன்னகையில் 
மகிழ்ச்சி இருப்பதில்லை ...

கிட்ட இருந்தும் 
கிட்டியதை 
எட்ட முடிவதில்லை ..

பல நேரம் 
பேசும் வார்த்தைகள் 
மனதில் விழுகிறது
செவியில் விழுவதில்லை ..

பல காட்சிகள் 
இதயத்தை அறைகிறது 
கருவிழியில் விழுவதில்லை ..

புரிதலில் இருந்தும் 
மூளை சிலநேரம் 
சிந்திப்பதில்லை ..

சில உறவுகள் 
இருந்தும் அதில் 
உயிர் இருப்பதில்லை ..

என்றும் 
காகிதப்பூக்களில் 
வாசம் இருப்பதில்லை ..

உடலில் ஊனம் 
ஊனமில்லை ...
மனதின் ஊனம் 
எளிதில் போவதில்லை ..


இங்கே ,
இல்லை 
இல்லாமல் 
ஏதுமில்லை ...


Sunday, February 17, 2013

மழை....!

காற்றின் 
துணைகொண்டு 
கால பருவத்தின் 
வழியே 
மேகத்திடம் இருந்து 
தப்பித்து வருகிறது 
மழைத்துளி ..

வந்த 
மழைத்துளி 
பிடித்ததால் 
தன்னில் 
ஒளித்து வைத்துவிடுகிறது
பூமி  ..

மழைத்துளிக்கு 
பிடித்திருந்ததால் 
தங்கிவிடுகிறது
புல்வெளியில் ..

தன்னிடமிருந்து 
தப்பித்துவந்த 
வந்த மழைத்துளியை 
சூரியன் துணைகொண்டு 
மீண்டும் 
சிறைபிடித்து செல்கிறது ..
மேகம் ..


Friday, January 18, 2013

பாரம்


சுமந்து விட்டு
செல்லும்படி 
சொல்லிப்போனது 
சேதியடி ..

சேதி சொன்ன 
தேதி படி 
நடக்க தொடர்ந்தது 
ஓர் விதி ..

தொடர்ந்தது
விதி 
கேள்விக்கு பதிலாய் 
வரும் கேள்வியாய் ...

கேள்விக்குள் இருப்பது 
ஏதுவான தெரியாமல் 
கேள்வியின் இறுதி
பதிலை தேட ..
தொடங்கியது ..

அந்த கேள்வியின் 
ஆழம் புரியாமல் 
அதில் 
உள்ளிறங்கியது ..

அதன் ஆழம் 
கடலின் ஆழமாக 
புதை மணலின் வேகமாக 
இருந்தது ..

பதில் 
தேடி 
இறங்கியது 
அந்த கேள்வியின்
ஆழத்திலேயே 
மூழ்கி மறைந்தது ...

அந்த செய்தியோ 
காற்றோடு சென்று 
சுமந்துவிட்டு 
செல்லும்படி 
மற்றொருவரிடம் 
சொல்லி
மீண்டும்
தன் பயணம் தொடங்கியது  .Monday, January 14, 2013

கனவு ..!

தூக்கத்தின் 
பிள்ளையல்ல 
கனவு ..

ஏக்கத்தின்
பிள்ளையே 
கனவு ..

மனதின் 
தாக்கத்தின் 
முடிவில் 
ஏற்படும் 
ஏக்கத்தில் வரும் 
கனவு ..

கரிசல் பூமியின் 
விரிசலின் இடைவெளியில் 
ஒட்டிக்கொண்டு 
துளிர்விடும் 
சிறு மொட்டாக 
யாவரிடமும் 
துளிர்வது 
கனவு ..

சிறைபட்ட 
ஆசைகளின் 
உணர்சிகளின் 
விடுதலை 
கனவு ..

அலைகள் 
கடலிலிருந்து 
கரை சேர்வதாய் 
உணர்சிகள் 
ஆசைகள் 
கரை சேர்வது 
கனவு ..

செலவில்லாமல் 
நினைப்பது 
நடப்பது 
கனவு ..

ஏழைகளின் 
ஆசைகள் 
ஊர்வலம் 
போவது 
கனவு ..

ஏழையின் 
கருப்புவெள்ளை 
வாழ்க்கை 
வண்ணமாவது 
கனவு ..


கண்கள் இல்லாத 
குருடரும்
காட்சி காண்பது 
கனவு ..

குருடனின் 
கனவில் 
வண்ணமில்லை 
ஆனால் 
எண்ணமுண்டு 
ஓசையுண்டு 
அதில் 
ஆசையுண்டு ..

கனவின் 
வண்ணம் 
மனதின் 
எண்ணம் ...

வண்ணங்கள் 
மட்டுமல்ல 
எண்ணங்களாலும்  ஆனது 
கனவு ..

இரவின் மீது 
தூக்கம் கொண்ட காதலுக்கு 
பிறக்கும் பிள்ளை 
கனவு ..

ஆசைகள் 
உணர்ச்சியால் 
மனதின் சுவரில் 
வரையும் ஓவியம் 
கனவு ..

இலட்சியங்கள் 
துளிர்விட 
விதையாக 
வேர்ராக 
இருப்பது 
கனவு ..

முடிவில்லாமல் 
தொடர்வது 
தொடக்கமில்லாமல் 
முடிவது 
கனவு ...Saturday, January 12, 2013

கலியுகப் பொங்கல் ....மழையில்லை 
நதியில்லை 
நீரில்லை 
வயலில் 
நெற்கதிரில்லை ..
விவசாயியின் 
வயித்தெரிச்சலில் 
பச்சரிசி அச்சுவெல்லம் பொங்களாம் 
பொங்கலோ பொங்கல் ...!


நதியெல்லாம் 
எங்கோ அடபட்டு போச்சு ..
அங்கே மணல் கொண்டு 
இங்கே அப்பர்ட்மெண்ட் ஆச்சு ..
நீங்க மணலெடுக்க வெட்டுன 
குழியில விவசாயம் சமாதியாச்சு ...
விவசாயி தவிர 
அனைவருக்கும் 
பச்சரிசி அச்சுவெல்லம் பொங்களாம் 
பொங்கலோ பொங்கல் ...!

சூரியன அழைச்சு 
செங்கல் அடுக்கி 
மண்பான எடுத்து 
நெருப்ப மூட்டி 
கரும்பு கட்டி 
எங்க பொங்கல் 
பொங்கலயே ..

நாலு சவுதுக்குள்ள 
காஸ் அடுப்புல 
பிரசர் குக்கர் வச்சு ,
உங்க பொங்கல்குள்ள 
எங்க பொங்கலும் 
பொங்க முடியாம 
வெம்பி கிடக்குதடா ..
பொங்கலோ பொங்கல் ..

தமிழர் திருநாளோ 
தமிழ் புத்தாண்டோ 
பொங்கல் பண்டிகையோ 
எதுவானாலும் 
எங்க பொங்கல் பொங்கலயே ..
வாய் நீட்டி 
ஒட்டு கேட்டு எந்த அரசியலுக்கும் 
எங்க உரிமை மீட்க துப்பில்லையே ..

தல குனியும் 
சமஞ்ச பொண்ணா 
முன்ன நிக்குமடா 
நெல்மணி வயலில ..
இப்ப 
ஏன்டா விவசாயியானேனு 
நிக்குறேண்டா ஒத்தையில ..
pizza தின்னும் தமிழனுக்கு 
"சோத்த திங்கலாம் 
காச முடியாது " னு சொன்ன புரியல ..
எங்க பொங்கல் 
பொங்கவும் வழியில்ல ...


Thursday, January 3, 2013

இடைவெளி ...!இணைப்புகள் 
அர்த்தமற்ற போது ,
இடைவெளி 
அழகிய 
அர்த்தம் தருகிறது ..

வார்த்தைகளின் 
இடைவெளி 
முழுமையான சொற்தொடர் 
அமைக்கும் ..

பூவின் 
இதழ்களின் 
இடைவெளியில் 
வாசம் 
பூமிக்குள் பிரசவிக்கும் ..

இமைகளின் 
இடைவெளியில் 
நம் பார்வை 
இருக்கும் ..

இதழ்களின் 
இடைவெளியில் 
நம் பேச்சு 
பிறக்கும் ..

நட்பிற்கும் 
காதலிற்கும் 
இடையில் 
இருக்கும் 
இடைவெளி 
அழகாய் 
இருக்கும் 
புது 
உறவாய் 
பிறக்கும் ...

சில 
உறவுகளில் 
இடைவெளி 
அதை மேலும் 
பிணைக்கும் ...

இரு 
கரைகளின் 
இடைவெளியில் 
நதிகளும் 
பயணிக்கும் ...

இரு 
துருவங்களின் 
இடைவெளியில் 
உலகம் 
இயங்கும்  ..

இரவிற்கும் 
பகலிர்க்கும் 
இடையே 
அழகிய 
மாலை 
விழிக்கும் ...

வானம் 
பூமிக்கு 
இடையே உள்ள 
இடைவெளியில் 
காற்றும் 
பயணிக்கும் ...


மூளைக்கும் 
மனிதனுக்கும் 
இடையே உள்ள 
இடைவெளியில் 
சுயநலமும் 
பொதுநலமும் 
இருக்கும் ... 


பூமியில் 
யாரோ 
ஒருவர் விட்டுச்சென்ற 
இடைவெளியில் 
நாம் இருப்போம் ..

இடைவெளி 
தூரமில்லை ..
அது 
உறவுகளுக்கு 
பாரமில்லை ...
மொத்தத்தில் 
அது 
வரமுமில்லை 
சாபமுமில்லை ...