Thursday, June 28, 2012

புரிதல்..!

பொம்மைகளின் பேச்சு எனக்கு புரிவதில்லை ..
குழந்தைகள் புரிந்துகொள்கிறார்கள்.
அதனுடன் பேசுகிறார்கள்,
சாதம் ஊட்டுகிறார்கள்,
விளையாடுகிறார்கள் ...
நானும் பொம்மையின் பேச்சை புரிந்துகொள்ள 
முயற்சித்து ஒவ்வொருமுறையும் தோற்று போகிறேன் ...
பொம்மைகளின் பேச்சை கேட்க
குழந்தையாய் மாறி கேட்டு பார்த்தேன்
அப்போதும் புரியவில்லை ..
குழந்தைகள் பொம்மையுடன்
விளையாடும் போது உற்று கவனித்தேன்,
அப்பொழுது ஒரு உண்மை விளங்கியது..
குழந்தைகள் பொம்மையுடன் பேசும் பொழுது
பொம்மையாக மாறுகிறார்கள் பேசுகிறார்கள்..
நான் மனிதனாக இருந்து
பொம்மைகளின் பேச்சை கேட்க முயற்சிகிறேன் தோற்கிறேன்..

Sunday, June 24, 2012

சிறுகதை : பயணம்..!

 அந்த மலை மேலே தனிமையின் துணையோடு அருவியோரமாய் ஒரு வீடு.சுற்றும் முற்றும் இருளை மறைக்கும் பனி. காற்றை உறையவைப்பது அதன் பணி. அந்த அருவியின் இரைச்சல் , அந்த இடத்தின் அமைதியை துயில் கொள்ள செய்தது . அந்த இரவில் முழு நிலவின் ஒளி இருளோடு சண்டையிட்டுக் கொண்டுஇருந்தது .நேரமும் சாமத்தை நெருங்கியது . அந்த நேரம் அந்த  வீட்டை நோக்கி காரில் பயணம் செய்துகொண்டிருந்தேன் .கால சக்கரம் காரின் சக்கரத்தை விட மிக வேகமாக பயணம் செய்கிறது .

நேற்று நினைவாகிறது , இன்று நேற்றாகிறது ,நாளை இன்றாகிறது . காலம் ஓட்டமாய் ஓடி நிச்சயம் அதில் நம்மை வெல்கிறது .இப்போதும் அந்த சம்பவம் நேற்று நடந்தார்போல் இருக்கிறது , ஆனால் நேற்று நினைவாகி போய் பல வருடங்கள் ஆகிறது .

இந்த தனிப்பயணம், பாச சண்டையில்  நான் வென்றது .பாச சண்டையில் மட்டும் வெல்வது மிகவும் ஆபத்தானது . பாசசண்டையில் வெற்றி பெறுபவர் உண்மையில் தோற்ப்பவரேதோற்ப்பவரே உண்மையில் வெற்றி பெறுபவர். ஆயுதத்தால் போடும் சண்டையை விட அன்பினால் போடும் சண்டையில் ஏற்படும் காயம் எப்போதும் ஆறாது.

இந்தசிந்தனையில் என்மனம் இருக்கையில் மூடிய காரின் ஜன்னலின் சிறிய இடைவெளியின் வழியே , வெளியே இருக்கும் குளிர் உட்புகுந்தது . குளிரின் வெப்பம் தெரியாமல் இருக்க heater on செய்தேன் . வெளியே குளிர் ,உள்ளே வெப்பம் என்பயணம் மட்டும் அல்ல , என் மனநிலையும் கடந்த 12 ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கிறது .அமெரிக்கா, நல்ல சம்பளம் தரும் வேலை , காதல் மனைவி என எவ்வளவு இருந்தாலும் , மனதுக்குள் நிம்மதி இல்லாமல் குற்ற உணர்ச்சியுடன் இருக்கும் எனது மன நிலையை அது குத்தி காட்டியது.ஆயினும் இந்த குளிரில் அந்த heater  இன் கதகதப்பு என் தாயின் நினைவுகளை மனதில் விட்டு சென்றது .

அம்மா !இந்த சொந்தம் நாம் அவள் கருவிலே உருவானது முதல் அவள் நம்மைவிட்டு கல்லறை சென்றாலும் நம்மைவிட்டு நீங்காத பந்தம்.என் தாய் எப்படி பட்டவள் ? எல்லா தாய் போல , நான் பிறந்த நாள் முதல் நானே அவளுக்கு வாழ்கையில் முதன்மையாகி போனேன் .எனக்கோ அவள் ஆண்டவன் தந்த விளையாட்டு பொருள் தான் .என் தாய் பற்றி நினைக்கும் போது என் தந்தையும்  வந்தார் .அப்பா ! இந்த உறவின் அருமை அவர் இருக்கும் வரை யாருக்கும் புரிவதில்லை .தந்தையின் மறைவிற்கு பிறகுதான் அனைவருக்கும் புரிகிறது அவரின் உண்மையான பெருமை .அதை நான் இப்போது மிகவும் உணர்கிறேன் .என் தந்தை பற்றி என்ன சொல்ல , தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை தோழனாய் பார்க்காமல் இன்னும் சிறு குழந்தையாகவே பார்க்கும் தந்தைகளில் என் தந்தையும் ஒருவர் .எனக்கோ அவர் என் மீது அவர் காட்டும் அதீத பாசம் சமயத்தில் வேலியாகி போனது .அந்த வேலியை உடைத்து தான் இந்த தனிமையான பயணத்திற்கு காரணம் .

இந்த பயணம் நான் மேற்கொள்வது இது 12 வது வருடம் .கருவறையில் சிலையில்லா கோயிலை தரிசிக்க வரும் பக்தனை போல் , தாய் தந்தை இல்லா இந்த வீட்டை நான் தரிசிக்க வருகிறேன் . சிலை இல்லையென்றாலும் கருவறையில் வீசும் தெய்வீக மணம் போல ,என் தாய் தந்தை இல்லையே தவிரே அவர்களின் வாசமும் , அவர்கள் என் மீது காட்டிய பாசமும் இந்த வீட்டின் அறை முழுவதும் நிறைந்திருக்கிறது. வருடத்தில் ஒரு முறையாவது இந்த வீட்டில் தனிமையில் இருந்து மீண்டும் என் தாய் தந்தையுடன் என் நினைவுகளில் வாழ்ந்து மண்ணிப்பு கேட்கிறேன் .என் வாழ்கை முடியும் வரை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் இங்கு வருவேன் என் தெய்வங்களிடம் மன்னிப்பு கேட்பேன்.

இப்பொழுது நினைத்தாலும் பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்து சென்று அந்த காட்சி என் கண்முன் நிற்கிறது .இறுதியாக நான் என் தாய் தந்தையை நான் கண்ட கனமான அந்த கடைசி தருணம் . இதோ இதே வீட்டின் வாசலில் தான் என் தந்தை என்னை வீட்டை விட்டு வெளியே போ என சொன்னார் .நான் அமெரிக்க படிக்கச் சென்று காதலும் படித்து வந்ததால் என் தந்தைக்கு என் மீது மிகவும் கோபம் . கையில் வேலை , கை நிறைய சம்பளம், அமெரிக்க வாழ்கை ,காதல் ஒருபக்கம் , தாய் தந்தையின் பாசம் , என் காதலுக்கு அவர் காட்டும் வெறுப்பும் கோபமும் மறுபக்கம் . வயதின் வேகத்தில் என் தந்தையின் கோபம் எனக்கும் கோபம் உண்டு பண்ணியது . என் தந்தையிடம் என் ஆசையை புரிய வைக்க மறந்து போய் நானும் என் தந்தை போலவே கோபமானேன்.வார்த்தைகளின் சண்டை யின் இறுதியில் என் தந்தையிடம் இருந்து வந்த இறுதி வார்த்தைகள் வீட்டை விட்டு வெளியே போ.என் தாயும் நல்ல மனைவியாக என் தந்தைக்கு நடந்து கொண்டாள்.

என் வயதின் வேகம் என்னை அமெரிக்கா அழைத்து சென்றது . என் ஆசைப்படி , அமெரிக்க வாழ்கை , காதல் மனைவி அவ்வப்போது என் தாய் தந்தையின் நினைவுகள் என ஒரு ஆண்டு மகிழ்ச்சியாக கடந்து போனது .திடீரென ஒரு நாள் தாயிடம் பேசலாம் என ஒரு ஆசை . என் வீட்டிக்கு தொலைபேசில் அழைத்தேன் .மறுமுனையில் நீங்கள் அழைக்கும் எண் தற்போது உபயோகத்தில் இல்லை என தானியங்கி குரல் மீண்டும் மீண்டும் சொன்னது .உடனே என் மனதில் சிறிது பதற்றம் . என் மாமாவை  தொலைபேசியில் அழைத்தபோது தான் தெரிந்தது , நான் எவ்வளவு பெரிய தவறு செய்தேன் என்று . என் தாய் தந்தை ஆறு மாதம் முன்பு ஒரு சாலை விபத்தில் காலமானதாகவும் ,இந்த செய்தியை என்னை தொடர்பு கொண்டு சொல்ல எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை என்றும், அதனால் தாங்களே இறுதி மரியாதை செய்ததாகவும் சொன்னார்.அவரிடம் மறுமொழி சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லாமல் போனது . நான் வாழ்ந்த இந்த ஒரு வருட வாழ்க்கையே எனக்கு வெறுத்து போனது .தவறு யாருடையதாக இருந்தாலும் , நான் என் தாய் தந்தைக்கு துரோகம் செய்து விட்டேன் . அவர்களுக்கு செய்ய வேண்டிய இறுதி மரியாதை கூட என்னால் செய்ய முடியாத பாவி ஆகிவிட்டேன் .அதை எண்ணி என் மணம் ஒவ்வொரு நிமிடமும் வெம்புகிறது.

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் என் தாய் தந்தையின் நினைவு நாள் அன்று , இங்கே வருகிறேன் . என் தாய் தந்தையின் நினைவுகளை இங்கே இந்த வீட்டில் தனியாக இருந்து உணர்கிறேன் . அவர்களிடம் மண்ணிப்பு கேட்கிறேன் .தனியே அழுகிறேன் புலம்புகிறேன் . என் தாயை அவள் சுவரிசங்கள் வழிந்திருக்கும் அவள் பெரும்பாலும் இருந்த சமையல் அறையிலும் , என் தந்தையை அவர் கோபங்களும் அறிவுரை களும் நிறைத்திருக்கும் அவர் புத்தகம் படித்த அறையிலும் உணர்கிறேன் .நான் மேற்கொள்ளும் இந்த பயணம் விலை கொடுக்க முடியாத என் தாய் தந்தையின் இழப்பிற்கு எனக்கு நானே தரும் ஆறுதல்.இந்த பயணத்தில் இங்கே சில்லென வீசும் குளிர் காற்றும் என்னை வெப்பமாக குத்தி காட்டுகிறது.

Wednesday, June 20, 2012

கண்ணீரின் தற்கொலை ..!

 


கண்களில் சிந்தும்
ஒவ்வொரு கண்ணீரும்  ,
யாரோ ஒருவரின்
விரல் பிடித்து
பூமியை அடையவே
விரும்புகிறது ..
ஆனால் ,
பெரும்பாலும்
கண்ணீரின் தற்கொலையாகவே
முடிகிறது ..!

Tuesday, June 19, 2012

நிழல்கள் ...!




ஒளியிடம் இருந்து
தப்பிக்க முயற்சித்து
ஓடி போய்
தோற்று போய்
நான் கீழே விழுந்துவிடுகிறேன்
நிழலாக ..!


Thursday, June 7, 2012

நிலவின் நாணம் ...!

இரவில்,
கடலில்,
தன் முகம் கண்டு
தனியாய்
அழகாய்
ரசிக்கிறாள்
தன் அழகை நிலவவள் ...
தான் இவ்வளவு அழகா ?
என எண்ணி ,
நாணப்பட்டு முகிலெடுத்து
தன் முகம் புதைத்து கொள்கிறாள் ..!


Tuesday, June 5, 2012

காட்சிகளின் மறு சுழற்சி ...!

சில
நிகழ்சிகள்
நிகழ்வுகளானது ..
நிகழ்வுகள்
நினைவுகளானது..
நினைவுகள்
கனவுகளானது..!
 

சில
கனவுகள்
காட்சியானது
காட்சிகள்
கடந்து போனது ..
கடந்து போனது 
மீண்டும் 
நிகழ்ச்சி ஆனது ..!