Saturday, May 26, 2012

கவிதை...!

கவிதை,
பல நேரம்
இரவில் விழித்துகொள்கிறது..

கவிதை,
அமைதியான மனதில்
சத்தம் போடுகிறது ..கவிதை,
மனதோடு உறவாடி
நினைவோடு ஒளிந்துகொள்கிறது ..
என் மனதோடும்
என்னோடும் கண்ணாமூச்சி
ஆடுகிறது ..
கண்ணாமூச்சியில்
அதை கண்டுபிடித்தால்
எழுத்தாய்
வார்த்தையாய்
மாறுகிறது ..

கவிதை,
நிலவோடும்
பெண்ணோடும்
அதிகம் உறவாடுகிறது ..

கவிதை,
சில ஆண்களை போல்
கர்வமாய் நடந்து கொள்கிறாய் ..
பல பெண்களை போல்
எத்தனை முறை படித்தாலும்
புரியாமல் போகிறது ..

கவிதை,
பொய் பேசுவது
உனக்கு கைவந்த கலை ..
உனக்கு யாரும்
கொடுக்க முடியாது
உண்மையான விலை ..

கவிதை,
உவமை சொல்வதில்
உன்னை ஒப்பிட
உவமை இல்லை ..

கடவுளும்
மயங்கும்
கவிதை நீ..

சிலரிடம்
இலக்கணத்தின்
பிள்ளையாகிறாய் ..
சிலரிடம்
இலக்கணத்தை
உடைத்து போடுகிறாய் ..

இறப்பு இல்லாத
பிறப்பு உந்தன் பிறப்பு ..

இசையோடும் 
பாடலாய்
கை கோர்க்கும் 
கவிதை நீ..

சிதறிய
நினைவுகளின் 
அழகான கோலங்களாய்
கவிதைகள்..

சில
கண்ணீரின் எழுத்துகளாய்
கவிதைகள்..

சிந்தையில்
வார்த்தைகள் நோக்கி
ஒரு கவிஞன் இருக்கும்
தவத்திற்கு கிடைக்கும்
பரிசாய் கவிதைகள் ..

சில
உறவுகளின்
கண்ணீராய்
மகிழ்ச்சியாய்
நினைவுகளாய்
ஏக்கமாய்
தயக்கமாய்
காதலாய்
கவிதைகள் ..

ஒரு இனத்தின்
வரலாறாய்,
வீரமாய் ,
வெற்றியை
தோல்வியாய்
வாழ்க்கையாய்
கவிதைகள் ..

கடவுளின்
பக்தியாய்,
மதத்தின்
மொழியாய்
கவிதைகள் ..

இசையுடன் 
திருமணத்தில்
பாடலாய்
மாறும்
கவிதைகள் ..

மொத்தத்தில்,
எண்ணங்கள்
எழுத்துகளில் 
ஆடும்
அழகிய
நாட்டியம் கவிதைகள் ..!

Sunday, May 20, 2012

வாசம்..!

பால் வைத்த
புது நெல்மணியின்
அழகிய வாசம் ...!

பால் குடி மறவா
பிள்ளையின்
தூய்மையான 
பால் வாசம் ..!

மழை
மண்ணில் இட்ட முத்தத்தில்
மண்ணாகிய பெண்ணவளின்
நாணமாக வரும் மண் வாசம் ..!

கிராமத்தவர்கள்
பேச்சில் வீசும்
மண் வாசம் ..!

கோவில்
கருவறையுள்
இருக்கும்
தெய்வீக வாசம்..!

தாயின் கருவறையில்
நாம் உணராத
தெய்வீக வாசம்..!

பூந்தோட்டத்தில்
காற்றோடு
கைகோர்த்து வரும்
மகரந்த வாசம் ..!


சவஊர்வலத்தில்
சவமாகிப்போகும் 
தூவப்படும்
பூக்களின் வாசம் ..!

நேர்மையாய்
வியர்வையாய் உழைக்கும்
உழைப்பாளியின்
வியர்வையின் வாசம் ..!

போலியாய்
குளிர் அறையில்
ஏமாற்றி பிழைக்கும்
வஞ்சகர்கள் மேல் வரும்
அத்தரின் வாசம் ..!

கட்டிலில் பூக்கள்
ஆசை தந்து
பத்து மாதம் களித்து
ஓசைதரும்
மோகத்தின் வாசம் ..!

இறந்தவர் உடலில் பூக்கள்
உலகின் நிலையாமையை
எடுத்து சொல்லும்
மரணத்தின் வாசம் ..!

இவற்றில் எது
காட்டுகிறது
வாசத்தின்
உண்மையான வாசம் .. ?

Monday, May 14, 2012

அன்னையர் தினத்திற்காக மட்டும் அன்னை அல்ல ..! ...!


ஒரே வீட்டில் இருந்து கொண்டு
இரத்த சொந்தங்களாய் இருந்து கொண்டு
முகம் கொடுத்து பேச நேரமில்லை..

வீட்டில் பணம் கொடுத்து பேசும் நீ
மனம் கொடுத்து பேசுவதில்லை ...

ஒரே வீட்டில்
அந்நியமான வாழ்கை ..
அந்நிய கலாச்சாரத்தில்
மூழ்கி இருக்கும் வாழ்கை ..

முக பக்கத்தின்
முதல் பக்கத்தில்
தினமும் உந்தன் நிகழ்வை போடும் நீ..
வீட்டில் உன் அருகில்
இருக்கும் தாய் தந்தையிடம்
முகம் கொடுத்து பேசுவதில்லை ...

உன் காதலியிடமும்
உன் தோழியிடமும்
மணிக்கணக்கில்
கைபேசியில்
பேசி மகிழும் நீ ,
தினமும்
ஒரு மணித்துளி
உன் தாயிடம்
பேசி அவளை மகிழ்வித்து பார்..

அன்னையர் தினம்
அன்று மட்டும்
அன்னையை நினைக்கிறாய் ..
அன்னைக்கு வாழ்த்து சொல்கிறாய் ...

உதடோடு வாழ்த்து சொல்லி
மனதோடு ஒன்றும் இல்லாமல் வாழும்
அந்நிய கலாச்சாரத்தில் திளைத்து
ஒன்றை மறந்து போகிறாய்,
தமிழ் பேசும் உன் அன்னை
அன்னையர் தினம் அன்று மட்டும்
உன் வாழ்த்தை எதிர்பார்ப்பதில்லை
உன்னை கருவறையில் சுமந்தது முதல்
அவள் கல்லறை செல்லும் வரை
உன் அன்பை மட்டும் தான் எதிர்பார்கிறாள்....
Saturday, May 5, 2012

யார் தந்தது ..?


மனிதன் நிற்க
காலம் ஓடியது ..
வாழ்க்கை மாறியது ..
வாழ்க்கை பாதையில்
கடந்து போன வழித்தடங்களை
தேடிக்கொண்டு
பாதையை தொலைத்துவிட்டான் ..
சூழலை யோசித்தபடி
வாய்ப்பினை தவற விட்டான்..
பின் தன்
ஆசைக்காக
வேசமிட்டுகொண்டான் ..
பாசமான பந்தங்களை
மோசமாக்கி கொண்டான் ..
நான் என்று
என்னியபடி
நாணம் கெட்டு சென்றான் ..

சேர்த்துக்கொண்டான்
பணத்தை ..
தொலைத்துவிட்டான்
பாசத்தை ...
புரிதலில் இருந்தும்
யோசிக்க மறந்தான் ..
மனிதனை யாசிக்க
மறந்தான் ..
நிறைவாக வாழ்ந்தவன்
மனநிறைவை
இழந்தான் ..
கெட்டு கிடந்தான் மதி ..
தேடி அலைகிறான்
நிம்மதி ..
குருடன்
தேடிய வெளிச்சம் போல ..

இறுதியில்
பயணித்து கொண்டிருக்கிறான் ,
தன் இறுதியை
பயணித்து கொண்டிருக்கிறான் ,

நிம்மதியை தேடியவன்
வெறுத்து போய்
தன்
இறுதி பயணம் தேடுகிறான் ..

இந்த முடிவின்
ஆரம்பம்
யார் தந்தது ?
காலத்தின் ஓட்டம்
வாழ்கையின் மாற்றம் ..
சிந்தனையின் செயல் ..
பணத்தின் ஆற்றல் ..
யார்தந்தது ..?