Saturday, December 15, 2012

கடல் ...!





கடல் ,
நீர் கிடக்கும் 
ஓர் 
மாய உலகம் ..

கடல் ,
உலகில் 
ஓர் 
நீர் உலகம் ..

கடல் ,
அண்டத்தில் 
மிதக்கும் 
உலகில் 
பதுங்கி இருக்கும் 
பெரும் அண்டம் ..

கடல் 
உப்பு கொண்டதால் 
ரோசம் கொண்டு 
அடிக்கடி பொங்கி விடுகிறது ..

கடல் ,
கடவுள் 
உலகை படைக்க 
உழைத்த உழைப்பில் 
விளைந்த வியர்வை ..

கடல் ,
நிலவு 
மேகம் 
வானம் 
முகம் பார்க்கும் 
பெரும் கண்ணாடி ...

கடல்
மீன்கள் விளைந்து 
கொழிக்கும் 
நீர் விளை நிலம் ..

கடல் ,
சூரியன் 
துயில் கொண்டு 
துயில் எழும் 
பள்ளியறை ..

கடல் ,
மழையின் 
புயலின் 
பல்லாயிரம் உயிரின் 
கருவறை ..

கடல் 
தன் கரைதாண்டி 
சீற்றம் கொண்டால் 
நம் கல்லறை ..

கடல் ,
பூமித்தட்டின் 
தாளத்திற்கும் ஏற்ப 
நடனமிடுகிறது 
ஆழிப்பேரலையாய் ..
 
கடல்,
பூமியில் 
இருக்கும் 
ஆதிக்க சாதி ..

கடல்,
தன்  நீரை 
நிலத்தினுள் 
பிரசவிக்க முயல்கிறது 
அலைகளாய் ..

கடல் ,
ஒளிகூட 
வெகுதூரம் உட்புக அஞ்சி 
பின்வாங்கும் 
மர்ம உலகம் ..

கடல் 
உலகின் மொத்த 
அசுத்தங்களை 
சுமந்து இருக்கும் 
புண்ணிய நதி ...

கடல் ,
உயிரின் ஆதாரம் 
நீர் என்றால் ,
அந்த நீரின் 
ஆதாரம் கடல் ..

கடல் ,
வானின்
நிறம் தொட்டு 
தனக்கு அரிதாரம்
பூசிக்கொள்கிறது ..


கடல் 
உலகின் அதிசயங்கள் 
பல புதைந்திருக்கும் 
பெரும் அதிசயம் ..!

Wednesday, December 12, 2012

அர்த்தமில்லா எழுத்துக்களின் பயணம் ..!





அர்த்தமில்லா எழுத்துக்கள் 
எல்லாம் ஒன்றாக சேர்ந்து 
தனது அர்த்தங்களை தேடி 
பயணம் செய்தது ..

பயணங்களில் 
தனது 
கோர்வை தவறா ?
தனது 
ஓசை தவறா ?
தனது 
வடிவம் தவறா ?
என சிந்தித்தபடி இருந்தது ..

இல்லை 
தன்னை படிப்பவரின் 
மனம் தவறா ?
குணம் தவறா ?
சினம் தவறா ?
என சிந்தித்தது ..


சிந்தனையில் 
வழிமாறி 
இடம்மாறியது 
எங்கேயோ பயணம் செய்தது ..
அந்த பயணங்கள் 
நீண்டது பல ஆண்டுகள் ..

முன்னம் 
இருந்த அர்த்தங்களை 
எங்கே தொலைத்தேன் 
என வழிஎங்கும் தேடியது ..

சில எழுத்துக்கள் 
வேதனையில் 
கண்ணீர் சிந்த 
சிறிது மெலிந்து 
கரைந்து 
தனது வடிவம் மாறியது ..

சில எழுத்துக்கள் 
புதிய பயணம் 
என்ற மகிழ்ச்சியில் 
சற்று பெருத்து 
தனது வடிவம் மாறியது ..

சில எழுத்துக்கள் 
தனது வடிவம் மாறாமல் 
அங்கேயே தனது 
வாழ்வை முடித்துக்கொண்டது ..

மாறிய வடிவங்களில் 
அது புது அர்த்தம் தர 
அந்த எழுத்துக்கள் யாவும் 
தனது பயணங்களை 
முடித்துகொண்டது 
தனது புது வாழ்கையை 
தொடங்கியது ....

Tuesday, December 4, 2012

மேகமும் எனது எண்ணமும் ...!



என் எண்ணங்கள் 
என்னவென 
எண்ணுகையில் 
மேகமாய் வந்து நின்றது ..

மேகம் போல 
அழுத்தம்
வெப்பம் 
சூழ்நிலை மாற்றத்தால் 
எனது எண்ணங்கள் 
உருவாகிறது ..

திசை அறியாமல் 
குறிக்கோள் இல்லாமல்
வான்வெளியில் பறக்கிறது 
மேகம் 
எனது எண்ணம் போல..

பல எண்ணங்கள் 
கூடினால் 
அழுத்தினால் 
கண்ணீராய் வருகிறது ,
பல மேகங்கள் 
ஒன்று கூடினால் 
மழையாய் பொழிகிறது ..


மேகங்கள் 
காற்றோடு 
உதிர்ந்து 
கரைந்து 
மறைந்து விடுகிறது ,
எனது  
எண்ணங்களும் 
போக்கோடு 
போகையில் 
மறைந்து விடுகிறது ...

சில எண்ணங்கள் 
மட்டும் 
மறையாமல் 
உடன் வருகிறது 
காற்றோடு 
மிதந்து போகும் 
மேகம் போல ..

எனக்கு விவரம் 
தெரிந்தது முதல் ,
மேகங்களும் 
முற்றிலுமாக 
மறைந்ததில்லை 
வானைவிட்டு 
எண்ணங்களும் 
முற்றிலுமாக 
மறைந்ததில்லை 
என்னை விட்டு ...

Friday, November 30, 2012

காலத்தில் கனிந்த கவிதைகள் ...!





எப்போதோ 
புத்தகம் நடுவே 
எழுதி வைத்த 
பெயர்கள் ...

எப்போதோ 
புத்தகம் கடைசியில் 
வரைந்து வைத்த 
படங்கள் ...

எப்போதோ 
சேர்ந்து எடுத்த 
புகைப்படங்கள் ...

எப்போதோ 
சேர்ந்து ரசித்த 
பாடல்கள் ...

எப்போதோ 
சேர்ந்து போன 
இடங்கள் ..

இப்போதும் 
இனி எப்போதும் 
போகும் பொது ,
படிக்கும் போது,
பார்க்கும் போது, 
கேட்க்கும் போது, 
இரசிக்கும் போது
கவிதையாக தோன்றுகிறது ..!

Wednesday, November 28, 2012

பௌர்ணமி..!



நிலவில் இன்று 
எங்கும் 
மின்சார தடை இல்லையாம் ,
பௌர்ணமி..!

Friday, November 23, 2012

பெண்மையும் கவிதையும் ...!



பெண்மையே 
ஒரு கவிதையே ...!

குழந்தையாக - ஹைக்கூ 

குமரியாக - காதல் கவிதை 

தோழியாக - புதுக்கவிதை 

மனைவியாக - சங்க இலக்கிய கவிதை 

தாயாக - தாய்மைக்கு மரபுக்கவிதை 

பெண்மையே ,
சமயங்களில் 
சில கவிதைகள் போல 
எத்தனை முறை படித்தாலும் 
புரிவதில்லையே  ...!

Tuesday, November 20, 2012

முகமில்லா நிலவு ..!




முகமில்லா நிலவொன்று
அமாவாசையன்று
எந்தன் வானில் பயணம் செய்தது ..
அந்த முகமில்லா நிலவை
நான் முதன் முதலாக கண்டேன்
காதல் கொண்டேன் ..
எந்தன் முகமறியாத
அந்த நிலவு ,
நான் ரசிப்பதைக்கண்டு
முதலில் நாணம் கொண்டாலும்
பின்னர் பயம் கொண்டது ..

என்னை கண்டு ஏன் பயம் என்றேன் .
நீ யார் என்றாள் ...

எந்தன் வானில் நீ வந்ததின்
மாயம் என்ன என்றேன் ..

இத்தனை நாளாய்
இங்கே தான் இருந்தேன் ,

இதுவரை உன்னை நான்
எந்தன் வானில் கண்டதில்லை என்றேன் ...

நீ இன்று தான்
என்னை நோக்கின என்றாள் ..

உந்தன் நிலவில்லா
நாட்களில் தான் நான்
சஞ்சரிக்க முடியும் ..
உந்தன் வானில் நிலவு
இல்லை என்றால் தான்
என்னால் உன்னில் வரமுடியும் ...

முகமில்லா நீ
இன்று எப்படி என்
கண்ணில் பட்டாய் என்றேன் ..

பதில் சொல்ல
வந்தவளை
மேகம் சற்று
மறைத்து நின்றது ..

கண்மூடி திறந்த நொடியில்
அந்த முகமில்லா நிலவும்
மறைந்து சென்றது ..

அன்று முதல்
ஒவ்வொரு முறையும்
வானை பார்க்கும் போது
அந்த முகமில்லா
நிலவை தேடுகிறேன் ..
அதன் பதிலுக்காக
காத்திருக்கிறேன்  ...!

Monday, November 12, 2012

பட்டாசு ...!




நெருப்பை
தொட்டவுடன்
சத்தமிட்டு அலறுகிறது ..
நெருப்பை உணர்கிறதோ ..?

யுத்தங்களில்
இரத்தமும்
சதையும் தரும்
பரம்பரையில் தவறி வந்து
வீடுகளில் மகிழ்ச்சி தரும் பிறவி நீ..!

அந்த இரத்த வாடை விடாமல் ,
உருவாகையில்
ஏழைகளின்
வயிற்ரேரிச்சலில்
வெடித்து போகிறதோ
பட்டாசு ..!


தீண்டாமை யாரும் பார்ப்பதில்லை
உன்னிடம் ,
எழைச்சாதியின்  உழைப்பில் தான்
தீபாவளி சிரிப்பும்
மத்தாப்பும்
பணக்காரசாதியிடம் ..!

குழந்தைகளுக்கு
'காகிதங்கள்
மறைத்திருக்கம்
ஒளியும் ஒலியும்
போக்கே ...!


உண்மையாக
காசை இறுதியில்
கரியாக்கும்
பட்டாசு ..!


Friday, November 9, 2012

இடையில் ...!



ஒரு கண்ணீருக்கும் 
புன்னகைக்கும்
இடையில் இருக்கிறது 
ஆறுதல் ..

ஒரு புன்னகைக்கும் 
கண்ணீருக்கும் 
இடையில் இருக்கிறது 
துரோகம் ...

கோபத்திற்கும் 
பொறுமைக்கும் 
இடையில் உள்ளது 
பல உறவுகள் ..

பொறுமைக்கும் 
கோபத்திற்கும் 
இடையில் இருக்கிறது 
நமது வன்மம் ..

ஆசைக்கும் 
நிஜத்திற்கும் 
இடையில் உள்ளது 
முயற்சி ..

நட்புக்கும் 
காதலுக்கும் 
இடையில் இருப்பது 
ஓர் அழகிய
பெயரில்லா உறவு  ..


யுத்தத்திற்கும் 
அமைதிக்கும் 
இடையில் இருக்கிறது 
பல உயிர்கள் ..

மனிதனுக்கும் 
கடவுளுக்கும் 
இடையில் இருக்கிறது 
மதம் ...

மனிதனுக்கும் 
மனதிற்கும்
இடையில் எப்போதும் இருக்கிறது 
சிறு போராட்டம் ..

Thursday, November 8, 2012

நினைவூட்டுச்செய்தி



மறையாத 
மறக்காத 
நினையாத 
நினைவுகளிடம் ,
மாறாத 
குறையாத 
போகாத 
உணர்வுகள் 
ஒவ்வொரு முறையும் 
வந்து சொல்லி செல்கிறது ,
மறந்துவிடு என்று 
மறக்காமல் ...!

Monday, October 15, 2012

பிரிவு ..!



பிரிவு ..

சமயங்களில் 
உன்னை கூட்டத்தில்
தனிமையாக்கும் 

நினைவுகளில்
நினைய வைக்கும் ..
தனிமையில் 
கரையவைக்கும் ..
கண்ணாடி பார்த்து 
அழ வைக்கும் ..

சிலநேரம் 
பிரிவு மெழுகுவத்தி போல் ,
பிறர்க்காக தனிமையில் அழவைக்கும் ..

சில நேரம் 
பிரிவு காற்றால் மரங்களில் 
இருந்து பிரித்து செல்ல பட்ட இல்லை போல 
திசை தெரியாமல் அழ வைக்கும் ...

சில நேரம் 
பிரிவு காற்று தூக்கி செல்லும் விதை போல
புதிதாய் உன்னை முளைக்க வைக்கும் ..

சில நேரம் 
பிரிவு 
சிலைவடிக்க உளிகள் 
பாறைகளில் இருந்து பிரித்து செல்லும் 
பகுதியென சிலவைகளை 
உன்னிடம் இருந்து பிரித்து செல்லும் ..
அந்த பிரிவு தான் உனக்கு 
புது வடிவம் சொல்லும் ..

மறக்காதே 
தாயின் கருவறை 
பிரியாமல் 
உலகம் இல்லை...

வீட்டை பிரியாமல் 
கல்வி இல்லை..

மேகத்தை பிரியாமல் 
மழை இல்லை..

இமைகள் பிரியாமல்
பார்வை இல்லை..

உதடு பிரியாமல் 
வார்த்தை இல்லை..

பூவின் இதழ்கள் 
பிரியாமல் வாசம் இல்லை ..

துன்பம் பிரியாமல் 
இன்பம் இல்லை..

பிரிவு இல்லாமல் 
உறவில் வலிமை இல்லை..

நம்மை பிரிந்து போகாத 
பிரிவு என்று எதுவும் இல்லை ..!

Saturday, October 13, 2012

தூக்கம் வராத போது உளறியவை ..!


தூக்கம் வராத போது உளறியவை ..!




ஒரே காட்சி 
மாறும் உணர்வுகள் ..

சில கனம் 
கூடும் அதன் கனம் ..

கண்கள் பேசும் 
மொழி 
கண்ணீர் ..

இதயம் 
சொல்லும் 
தத்துவம் 
அன்பு..

இலவசமாக 
கிடைத்தால் 
பாசம் கூட மதிக்கப்படுவதில்லை ..

கண்ணீரும் உப்புத்தண்ணீர் தான்
உணர்ச்சி கலக்கும் வரை ..

உள்ளத்தின் வண்ணமே 
வாழ்கையின் 
வண்ணமோ ..?
,
நான் சரி என்ற சொல் 
சில நேரம் தவறானது ..
நான் தவறு என்ற சொல்
சில நேரம் சரியானது ..

அழகு நிறமாய் இருப்பது போல்
குணமாய் இருப்பது இல்லை ...


காற்று வருமா 
என இதயம் துடிதுடித்து காத்திருக்கிறது ..
காற்று வந்து 
செல்வதை 
இதயத்திடம் சொல்வதில்லை ..
காற்று வருவது தெரிந்துவிட்டால் 
தன துடிப்பை நிறுத்திவிடுமோ ...


மறந்ததை நினைக்க ,
நினைக்க மறந்தேன் ..

Monday, October 8, 2012

ஜோடி no -1




காதலர்கள் 
மாறினாலும் 
எங்கள் காதல் 
மாறுவதில்லை ,
-செவியும் கைபேசியும் ...!

Saturday, October 6, 2012

ஹைக்கூ.. ..!



கவிஞர்களின்
சோம்பலுக்கு 
பிறந்திருக்கலாம் 
ஹைக்கூ.. ..!

Tuesday, October 2, 2012

அமைதி ..!




நான் உலகில் 
அகதியாய் 
திரியும்வரை ,
உலகில் நீங்களும் 
அகதியாய் திரிவீர்கள் 
- இப்படிக்கு
அமைதி ..

Saturday, September 29, 2012

மழலை ..!


வானில் தவழும்
நிலவாய் 
பூமியில் நீ 
உலவுவாய் ..

நீ பிறக்கையில் 
உனது 
அழுகைக்கு பிறக்கிறது 
எங்கள் சிரிப்பு ..

பூவாசம் 
தோற்றுபோகும் 
உந்தன் 
பால்வாசத்திடம்..

எம் மொழியும் 
ஓர் மொழிதான் 
உன் வாய்மொழியில் 
அது மழலை சொல்மொழி ..

எப்போதும் 
உன் வாய்வழியே 
வழியும் 
ஓர் அழகியே 
நீல்வீழ்ச்சி ..

உன்னோடு 
கண்ணாமூச்சி 
விளையாடுகையில் 
எங்கள் சோகமும் 
ஒளிந்து மறைகிறது ..

பருப்பு கடைந்து 
விளையாடுகையில் 
உண்ணாமல் 
வயுறு நிரம்புகிறது ..

நீ சிரிக்கையில் 
அது மாறுகிறது 
புது ராகம் ..
நீ தத்தி தடுமாறி 
நடக்கையில் 
அது நடனமாய் ..
ஓடி விளையாடுகையில் 
அழகு 
ராட்டினமாய் ...

வானில் தவழும்
நிலவாய் 
பூமியில் நீ 
உலவுவாய் ..

Wednesday, September 19, 2012

தேடல் ..!



யாரையோ 
தேடி கொண்டு
பூமியெங்கும் 
அலைகிறது 
காற்று..  

யாரையோ 
தேடிக்கொண்டு 
சூரியனை
சுற்றிவருகிறது
பூமி..

இவர்கள் 
இருவரின் 
தேடலின்
இடைவெளியில்  தான் 
ஓடுகிறதோ 
நமது தேடல் ...?

Saturday, September 15, 2012

அந்திவானம்..!


ஆண்கள்
வெட்கப்படும்
தருனமோ,
நிலவவள் வரவை கண்டு ,
முகம் சிவக்கும் 
அந்திவானம்..!

Friday, September 14, 2012

பனித்துளி...!


இரவில் குளிரில் 
எப்படி வியர்கிறது,
புல்வெளியில் 
அதிகாலை பனித்துளி ...!



Monday, September 3, 2012

தோல்விகளும் பிடிக்கும் ..!


காற்றோடு 
குடை கொண்டு 
நான் போடும் சண்டையில் 
தோற்றுப்போய்  மழையில் 
நனைகையில் 
தோல்வியும் பிடித்துபோகிறது...!

குழந்தைகளோடு 
விளையாடுகையில்
நான் தோற்றுபோக 
குழந்தைகள் சிரிக்கையில் 
தோல்வியும் பிடித்துபோகிறது...!

சண்டையிட்ட 
காதலியிடம் 
தோற்றுபோய் 
மன்னிப்புக்கேட்க
அவள் பொய்யாக கோபப்படுகையில் 
தோல்வியும் பிடித்துபோகிறது...!

மறக்க நினைத்ததை 
மீண்டும் மீண்டும் நினைத்து 
நினைவுகளிடம் தோற்றுபோகையில்
தோல்வியும் பிடித்துபோகிறது...!

சில உறவுகளை 
மெய்பிக்க 
பொய்யாக நாம் தோற்றுபோகையில்
தோல்வியும் பிடித்துபோகிறது...!

வெற்றியின் 
படிக்கட்டுகளாக 
தோல்விகள் மாறுகையில் 
தோல்வியும் பிடித்துபோகிறது...!

Friday, August 31, 2012

மனிதன் மறந்த மனித நேயம் ....!



மனம் 
மனிதனிடம் 
இருக்கும் வரை தான்
அவன் மனிதன்..
அவன் மனம் 
பணத்தோடு சென்றால் 
அவன் பிணம் ...

கோயில் கருவறையில் 
கடவுளுக்கும் மனிதனுக்கும் 
இடைவெளியை 
பணம் தீர்மானிக்கையில்
மனிதனும் 
பணத்தோடு போனான்..
பிணமாகி போனான் ..

அதனால்
நேசம் விசமாகிபோனது 
பாசம் வேஷமாகிபோனது ..

வெறிபிடித்த மிருகமாக
சக மனிதனை துரத்துகிறான்..
அவன் வலியில்
வேதனையில்
ருசி கண்டு 
முழு வயிறு அருந்துகிறான்..
  
பிறரின் கண்ணீர் மழையில்
நீச்சலடிக்க 
துடிக்கிறான்...

இன வெறியில் 
போர் என்ற பெயரில் 
உயிர்களை வேட்டை ஆடுகிறான் ..
பணவெறியில் 
அரசியல் வாதியாய் 
நாட்டை ஆள்கிறான் ..
நாட்டின் வியாதி ஆகிறான்..

உயிர் மரியாதை 
இழந்தது ..
மரியாதையை
தன் உயிர் இழந்தது ...

சத்தியம் கூட
இன்று
பொய்யாகிபோனது
சத்தியமாக ...!

மனதில்
இரக்கம்
இறங்கிப்போனது ..
பணக் கிறுக்கும்
ஏறிப்போனது ..

தெருவில்
பயங்கி கிடக்கும்
முதியவரை
கடந்து செல்லும் போது
மட்டும் குருடன் ஆனதால் ,
மனிதநேயமும்
இறந்து போனது ..

காம இசையிடம்
பிச்சைகேட்டு
பந்தம்
சொந்தம்
மறந்ததால்
மனித நேயமும்
மறந்து போனது..

மனிதனுக்குள்ளே
உயர்திணை  அழித்து
அஃறினை வளர்த்ததால்
மனிதநேயம்
மறைந்து போனது..

கல் கண்டான்
சிலைவடித்தான்
கோயில் கொண்டான்
கடவுள் என்றான்,
ஆனால்
பக்தியை  தொலைத்தான்...
மனிதநேயமும்
தொலைந்து போனது ..

தன் இனம்
அழித்து
அதன் வெற்றியில்
திளைத்ததால்
மனிதநேயமும் அழிந்து போனது..

பணம் பத்தும் செய்ய
மனித நேயமும்
பத்தோடு பதினொன்றானது..
பணத்திற்கு
இரையானது,
மனிதன் மறந்து போன
மனிதநேயம்..

Sunday, August 26, 2012

கருணைக்கு கவிதாஞ்சலி ..


கருணைக்கு வடிவம் உண்டா ?
உண்டு ..
இந்த
புனிதர்கள் வாழ்ந்த 
பாரத நாட்டில்,
கருணைக்கு வடிவம் உண்டு ...!
அது அன்னையின்
வடிவில் உண்டு ..!


அவள் 
குட்டி வட்டத்துக்குள் 
தான் குழந்தையென
ஒட்டிக்கொள்ளும்
அன்னையல்ல ...
அவள் 
அரசியல் பேசும் 
அன்னையல்ல ..
அவள் 
ஆதரவு அற்றவர்களுக்காக
அரிசியல் பேசிய 
அன்னை ..

அனாதைகளின் 
தனிமையை 
தனியாய் நின்று 
போக்கியவள் ..
வங்ககரையோரம்
கங்கை கரையோரம் 
அனாதைகளின் 
புதிய புண்ணிய ஷேத்திரம் 
உருவாக்கியவள்..

கடவுள் அனுப்பிய
தேவதை அவள் ..
ஆனால்,
ஆதரவு அற்றவர்களின்
கடவுள் அவள் ..

தாய்வீடு யுகோஸ்லாவியாவை விட்டு ,
ஏழைகளை நேசித்து 
அன்பை யாசித்து 
கடவுளை மனதால் மணந்து ,
பாரத தேசம் புகுந்தவள் ..
மக்கள் சேவையில் 
தேவனை கண்டவள் ..

தீண்டாமை நோயாம் 
தொழுநோயை 
தொட்டு பார்த்து 
மருத்துவம் செய்தவள் ...

கருவறையில் 
தன் தனிமையை 
உணர்ந்ததால் என்னவோ ,
ஆதரவற்றவர்களுக்கு 
அடைக்களம் ஆனவள் ..

அனாதை என்ற 
வார்த்தையை 
அனாதையாக்க
முயன்றவள் ..

மணம் கொண்டு இருந்தால் 
தன் குழந்தைக்கு மட்டும் தாயாக
இருந்து இருப்பாள் ,
கருணை மனம்
கொண்டதால் 
உலகிற்கே தாய் ஆனாள்..


பெயர் சொல்ல
தேவை இல்லை 
அவள் யாரென்று சொல்ல ..
கருணையின் பிறந்தநாளுக்கு 
சிறு கவிதாஞ்சலி ...






Saturday, August 4, 2012

என் கனவுகளில் சில நேரம் தோற்றுப் போவதுண்டு...

என் கனவுகளில் சில நேரம் தோற்றுப் போவதுண்டு.
ஆனால் நான் வருந்துவதில்லை ..
அதற்காக நான் அழுவதும் இல்லை..

நிகழ்கால உண்மைகளே
இங்கே தோற்று போகும் போது
பொய்யாகும் போது
தோற்றுப்போகும் கனவுகளுக்கு அழுவதில்லை ..

ஒரு கனவு
உண்மையாக எவ்வளவு
மாற்றம் வேண்டும் ..

மாறுவது எல்லாம்
மாறுவது இல்லை,
மாறாததும்
மாறாமல் இருப்பதில்லை ..
இந்த மாற்றங்களில்,
சில நேரம்
கனவு நடப்பதுண்டு ..
பல நேரம்
கனவுகள்
களைந்து போவது உண்டு..
கரைந்து போவது உண்டு...
உடைந்து போவது உண்டு ..
உதிர்ந்து போவது உண்டு..
நினைவுகளின் மடியிலிருந்து
எழுந்து தவழ்ந்து
மறைந்து போவது உண்டு ...

என் கனவுகள் தோற்றதற்காக
நான் தோற்பதில்லை ...
தினமும் நான் தோற்காமல்
கனவுகள் காண்கிறேன்,
என் கனவு ஒரு நாள் மெய்படும் என்ற நம்பிக்கையில் ..

Monday, July 9, 2012

மரங்களின் சிரிப்பொலி...!

சற்று முன் பெய்த
மழையால்
குளிபாட்டபட்டு
மாநகர சாலையில் இருக்கும்
புது மாப்பிள்ளையான
மரங்களின் ஓரம் நிற்கையில்,
மரங்களின் சிரிப்பொலியாக கேட்கிறது 
மழை நின்றும் 
மரங்கள் சிந்தும் தூறல்கள் ...!


Thursday, June 28, 2012

புரிதல்..!

பொம்மைகளின் பேச்சு எனக்கு புரிவதில்லை ..
குழந்தைகள் புரிந்துகொள்கிறார்கள்.
அதனுடன் பேசுகிறார்கள்,
சாதம் ஊட்டுகிறார்கள்,
விளையாடுகிறார்கள் ...
நானும் பொம்மையின் பேச்சை புரிந்துகொள்ள 
முயற்சித்து ஒவ்வொருமுறையும் தோற்று போகிறேன் ...
பொம்மைகளின் பேச்சை கேட்க
குழந்தையாய் மாறி கேட்டு பார்த்தேன்
அப்போதும் புரியவில்லை ..
குழந்தைகள் பொம்மையுடன்
விளையாடும் போது உற்று கவனித்தேன்,
அப்பொழுது ஒரு உண்மை விளங்கியது..
குழந்தைகள் பொம்மையுடன் பேசும் பொழுது
பொம்மையாக மாறுகிறார்கள் பேசுகிறார்கள்..
நான் மனிதனாக இருந்து
பொம்மைகளின் பேச்சை கேட்க முயற்சிகிறேன் தோற்கிறேன்..

Sunday, June 24, 2012

சிறுகதை : பயணம்..!

 அந்த மலை மேலே தனிமையின் துணையோடு அருவியோரமாய் ஒரு வீடு.சுற்றும் முற்றும் இருளை மறைக்கும் பனி. காற்றை உறையவைப்பது அதன் பணி. அந்த அருவியின் இரைச்சல் , அந்த இடத்தின் அமைதியை துயில் கொள்ள செய்தது . அந்த இரவில் முழு நிலவின் ஒளி இருளோடு சண்டையிட்டுக் கொண்டுஇருந்தது .நேரமும் சாமத்தை நெருங்கியது . அந்த நேரம் அந்த  வீட்டை நோக்கி காரில் பயணம் செய்துகொண்டிருந்தேன் .கால சக்கரம் காரின் சக்கரத்தை விட மிக வேகமாக பயணம் செய்கிறது .

நேற்று நினைவாகிறது , இன்று நேற்றாகிறது ,நாளை இன்றாகிறது . காலம் ஓட்டமாய் ஓடி நிச்சயம் அதில் நம்மை வெல்கிறது .இப்போதும் அந்த சம்பவம் நேற்று நடந்தார்போல் இருக்கிறது , ஆனால் நேற்று நினைவாகி போய் பல வருடங்கள் ஆகிறது .

இந்த தனிப்பயணம், பாச சண்டையில்  நான் வென்றது .பாச சண்டையில் மட்டும் வெல்வது மிகவும் ஆபத்தானது . பாசசண்டையில் வெற்றி பெறுபவர் உண்மையில் தோற்ப்பவரேதோற்ப்பவரே உண்மையில் வெற்றி பெறுபவர். ஆயுதத்தால் போடும் சண்டையை விட அன்பினால் போடும் சண்டையில் ஏற்படும் காயம் எப்போதும் ஆறாது.

இந்தசிந்தனையில் என்மனம் இருக்கையில் மூடிய காரின் ஜன்னலின் சிறிய இடைவெளியின் வழியே , வெளியே இருக்கும் குளிர் உட்புகுந்தது . குளிரின் வெப்பம் தெரியாமல் இருக்க heater on செய்தேன் . வெளியே குளிர் ,உள்ளே வெப்பம் என்பயணம் மட்டும் அல்ல , என் மனநிலையும் கடந்த 12 ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கிறது .அமெரிக்கா, நல்ல சம்பளம் தரும் வேலை , காதல் மனைவி என எவ்வளவு இருந்தாலும் , மனதுக்குள் நிம்மதி இல்லாமல் குற்ற உணர்ச்சியுடன் இருக்கும் எனது மன நிலையை அது குத்தி காட்டியது.ஆயினும் இந்த குளிரில் அந்த heater  இன் கதகதப்பு என் தாயின் நினைவுகளை மனதில் விட்டு சென்றது .

அம்மா !இந்த சொந்தம் நாம் அவள் கருவிலே உருவானது முதல் அவள் நம்மைவிட்டு கல்லறை சென்றாலும் நம்மைவிட்டு நீங்காத பந்தம்.என் தாய் எப்படி பட்டவள் ? எல்லா தாய் போல , நான் பிறந்த நாள் முதல் நானே அவளுக்கு வாழ்கையில் முதன்மையாகி போனேன் .எனக்கோ அவள் ஆண்டவன் தந்த விளையாட்டு பொருள் தான் .என் தாய் பற்றி நினைக்கும் போது என் தந்தையும்  வந்தார் .அப்பா ! இந்த உறவின் அருமை அவர் இருக்கும் வரை யாருக்கும் புரிவதில்லை .தந்தையின் மறைவிற்கு பிறகுதான் அனைவருக்கும் புரிகிறது அவரின் உண்மையான பெருமை .அதை நான் இப்போது மிகவும் உணர்கிறேன் .என் தந்தை பற்றி என்ன சொல்ல , தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை தோழனாய் பார்க்காமல் இன்னும் சிறு குழந்தையாகவே பார்க்கும் தந்தைகளில் என் தந்தையும் ஒருவர் .எனக்கோ அவர் என் மீது அவர் காட்டும் அதீத பாசம் சமயத்தில் வேலியாகி போனது .அந்த வேலியை உடைத்து தான் இந்த தனிமையான பயணத்திற்கு காரணம் .

இந்த பயணம் நான் மேற்கொள்வது இது 12 வது வருடம் .கருவறையில் சிலையில்லா கோயிலை தரிசிக்க வரும் பக்தனை போல் , தாய் தந்தை இல்லா இந்த வீட்டை நான் தரிசிக்க வருகிறேன் . சிலை இல்லையென்றாலும் கருவறையில் வீசும் தெய்வீக மணம் போல ,என் தாய் தந்தை இல்லையே தவிரே அவர்களின் வாசமும் , அவர்கள் என் மீது காட்டிய பாசமும் இந்த வீட்டின் அறை முழுவதும் நிறைந்திருக்கிறது. வருடத்தில் ஒரு முறையாவது இந்த வீட்டில் தனிமையில் இருந்து மீண்டும் என் தாய் தந்தையுடன் என் நினைவுகளில் வாழ்ந்து மண்ணிப்பு கேட்கிறேன் .என் வாழ்கை முடியும் வரை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் இங்கு வருவேன் என் தெய்வங்களிடம் மன்னிப்பு கேட்பேன்.

இப்பொழுது நினைத்தாலும் பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்து சென்று அந்த காட்சி என் கண்முன் நிற்கிறது .இறுதியாக நான் என் தாய் தந்தையை நான் கண்ட கனமான அந்த கடைசி தருணம் . இதோ இதே வீட்டின் வாசலில் தான் என் தந்தை என்னை வீட்டை விட்டு வெளியே போ என சொன்னார் .நான் அமெரிக்க படிக்கச் சென்று காதலும் படித்து வந்ததால் என் தந்தைக்கு என் மீது மிகவும் கோபம் . கையில் வேலை , கை நிறைய சம்பளம், அமெரிக்க வாழ்கை ,காதல் ஒருபக்கம் , தாய் தந்தையின் பாசம் , என் காதலுக்கு அவர் காட்டும் வெறுப்பும் கோபமும் மறுபக்கம் . வயதின் வேகத்தில் என் தந்தையின் கோபம் எனக்கும் கோபம் உண்டு பண்ணியது . என் தந்தையிடம் என் ஆசையை புரிய வைக்க மறந்து போய் நானும் என் தந்தை போலவே கோபமானேன்.வார்த்தைகளின் சண்டை யின் இறுதியில் என் தந்தையிடம் இருந்து வந்த இறுதி வார்த்தைகள் வீட்டை விட்டு வெளியே போ.என் தாயும் நல்ல மனைவியாக என் தந்தைக்கு நடந்து கொண்டாள்.

என் வயதின் வேகம் என்னை அமெரிக்கா அழைத்து சென்றது . என் ஆசைப்படி , அமெரிக்க வாழ்கை , காதல் மனைவி அவ்வப்போது என் தாய் தந்தையின் நினைவுகள் என ஒரு ஆண்டு மகிழ்ச்சியாக கடந்து போனது .திடீரென ஒரு நாள் தாயிடம் பேசலாம் என ஒரு ஆசை . என் வீட்டிக்கு தொலைபேசில் அழைத்தேன் .மறுமுனையில் நீங்கள் அழைக்கும் எண் தற்போது உபயோகத்தில் இல்லை என தானியங்கி குரல் மீண்டும் மீண்டும் சொன்னது .உடனே என் மனதில் சிறிது பதற்றம் . என் மாமாவை  தொலைபேசியில் அழைத்தபோது தான் தெரிந்தது , நான் எவ்வளவு பெரிய தவறு செய்தேன் என்று . என் தாய் தந்தை ஆறு மாதம் முன்பு ஒரு சாலை விபத்தில் காலமானதாகவும் ,இந்த செய்தியை என்னை தொடர்பு கொண்டு சொல்ல எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை என்றும், அதனால் தாங்களே இறுதி மரியாதை செய்ததாகவும் சொன்னார்.அவரிடம் மறுமொழி சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லாமல் போனது . நான் வாழ்ந்த இந்த ஒரு வருட வாழ்க்கையே எனக்கு வெறுத்து போனது .தவறு யாருடையதாக இருந்தாலும் , நான் என் தாய் தந்தைக்கு துரோகம் செய்து விட்டேன் . அவர்களுக்கு செய்ய வேண்டிய இறுதி மரியாதை கூட என்னால் செய்ய முடியாத பாவி ஆகிவிட்டேன் .அதை எண்ணி என் மணம் ஒவ்வொரு நிமிடமும் வெம்புகிறது.

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் என் தாய் தந்தையின் நினைவு நாள் அன்று , இங்கே வருகிறேன் . என் தாய் தந்தையின் நினைவுகளை இங்கே இந்த வீட்டில் தனியாக இருந்து உணர்கிறேன் . அவர்களிடம் மண்ணிப்பு கேட்கிறேன் .தனியே அழுகிறேன் புலம்புகிறேன் . என் தாயை அவள் சுவரிசங்கள் வழிந்திருக்கும் அவள் பெரும்பாலும் இருந்த சமையல் அறையிலும் , என் தந்தையை அவர் கோபங்களும் அறிவுரை களும் நிறைத்திருக்கும் அவர் புத்தகம் படித்த அறையிலும் உணர்கிறேன் .நான் மேற்கொள்ளும் இந்த பயணம் விலை கொடுக்க முடியாத என் தாய் தந்தையின் இழப்பிற்கு எனக்கு நானே தரும் ஆறுதல்.இந்த பயணத்தில் இங்கே சில்லென வீசும் குளிர் காற்றும் என்னை வெப்பமாக குத்தி காட்டுகிறது.

Wednesday, June 20, 2012

கண்ணீரின் தற்கொலை ..!

 


கண்களில் சிந்தும்
ஒவ்வொரு கண்ணீரும்  ,
யாரோ ஒருவரின்
விரல் பிடித்து
பூமியை அடையவே
விரும்புகிறது ..
ஆனால் ,
பெரும்பாலும்
கண்ணீரின் தற்கொலையாகவே
முடிகிறது ..!

Tuesday, June 19, 2012

நிழல்கள் ...!




ஒளியிடம் இருந்து
தப்பிக்க முயற்சித்து
ஓடி போய்
தோற்று போய்
நான் கீழே விழுந்துவிடுகிறேன்
நிழலாக ..!


Thursday, June 7, 2012

நிலவின் நாணம் ...!

இரவில்,
கடலில்,
தன் முகம் கண்டு
தனியாய்
அழகாய்
ரசிக்கிறாள்
தன் அழகை நிலவவள் ...
தான் இவ்வளவு அழகா ?
என எண்ணி ,
நாணப்பட்டு முகிலெடுத்து
தன் முகம் புதைத்து கொள்கிறாள் ..!


Tuesday, June 5, 2012

காட்சிகளின் மறு சுழற்சி ...!

சில
நிகழ்சிகள்
நிகழ்வுகளானது ..
நிகழ்வுகள்
நினைவுகளானது..
நினைவுகள்
கனவுகளானது..!
 

சில
கனவுகள்
காட்சியானது
காட்சிகள்
கடந்து போனது ..
கடந்து போனது 
மீண்டும் 
நிகழ்ச்சி ஆனது ..!

Saturday, May 26, 2012

கவிதை...!

கவிதை,
பல நேரம்
இரவில் விழித்துகொள்கிறது..

கவிதை,
அமைதியான மனதில்
சத்தம் போடுகிறது ..



கவிதை,
மனதோடு உறவாடி
நினைவோடு ஒளிந்துகொள்கிறது ..
என் மனதோடும்
என்னோடும் கண்ணாமூச்சி
ஆடுகிறது ..
கண்ணாமூச்சியில்
அதை கண்டுபிடித்தால்
எழுத்தாய்
வார்த்தையாய்
மாறுகிறது ..

கவிதை,
நிலவோடும்
பெண்ணோடும்
அதிகம் உறவாடுகிறது ..

கவிதை,
சில ஆண்களை போல்
கர்வமாய் நடந்து கொள்கிறாய் ..
பல பெண்களை போல்
எத்தனை முறை படித்தாலும்
புரியாமல் போகிறது ..

கவிதை,
பொய் பேசுவது
உனக்கு கைவந்த கலை ..
உனக்கு யாரும்
கொடுக்க முடியாது
உண்மையான விலை ..

கவிதை,
உவமை சொல்வதில்
உன்னை ஒப்பிட
உவமை இல்லை ..

கடவுளும்
மயங்கும்
கவிதை நீ..

சிலரிடம்
இலக்கணத்தின்
பிள்ளையாகிறாய் ..
சிலரிடம்
இலக்கணத்தை
உடைத்து போடுகிறாய் ..

இறப்பு இல்லாத
பிறப்பு உந்தன் பிறப்பு ..

இசையோடும் 
பாடலாய்
கை கோர்க்கும் 
கவிதை நீ..

சிதறிய
நினைவுகளின் 
அழகான கோலங்களாய்
கவிதைகள்..

சில
கண்ணீரின் எழுத்துகளாய்
கவிதைகள்..

சிந்தையில்
வார்த்தைகள் நோக்கி
ஒரு கவிஞன் இருக்கும்
தவத்திற்கு கிடைக்கும்
பரிசாய் கவிதைகள் ..

சில
உறவுகளின்
கண்ணீராய்
மகிழ்ச்சியாய்
நினைவுகளாய்
ஏக்கமாய்
தயக்கமாய்
காதலாய்
கவிதைகள் ..

ஒரு இனத்தின்
வரலாறாய்,
வீரமாய் ,
வெற்றியை
தோல்வியாய்
வாழ்க்கையாய்
கவிதைகள் ..

கடவுளின்
பக்தியாய்,
மதத்தின்
மொழியாய்
கவிதைகள் ..

இசையுடன் 
திருமணத்தில்
பாடலாய்
மாறும்
கவிதைகள் ..

மொத்தத்தில்,
எண்ணங்கள்
எழுத்துகளில் 
ஆடும்
அழகிய
நாட்டியம் கவிதைகள் ..!