Sunday, November 27, 2011

எனக்கொரு ஆசை ..!

எனக்கொரு ஆசை
மீண்டும்
என் முதல் உலகிற்கு செல்ல ...நீர் சூழ்ந்த உலகம் அது ,
காற்று என்பதே கிடையாது ,
இருள் நிறைந்த உலகம் அது,
பயம் என்பதே கிடையாது ..

அங்கே இருட்டில் இருந்தும்
எப்போதும் வாழ்கை
வெளிச்சமாய் இருந்தது..

கிட்டதட்ட
அது ஒரு
தனிக்குடித்தனம்
ஆனாலும் தனியாக இல்லை ..

உணவு இடம் பாசம்
என அனைத்தும் கிடைக்கும்
விருந்தோம்பல் அங்கே ..

வேலை என்பதே கிடையாது ,
ஆனாலும் ஒரே வேலை தூக்கம் ..
சில நேர விழிப்பில் ,
தூக்கத்திற்கு ஓய்வு ..

மனதில் சிறிதும்
கோபம் இல்லை ,
சோகம் இல்லை ,
துன்பம் இல்லை ,
காதல் இல்லை ,
காமம் இல்லை ..

இரவின் நிலவு போல ,
அங்கு துணையாக யாரும் இல்லை ,
தனிமையை தவிர ..

ஆனாலும் அங்கேயும் ,
நிலவை தாங்கும் வானம் போல
எனையும் தாங்க ,
எனக்காக சுவாசிக்க ,
எனக்காக உண்ண ,
என்னையே எப்போதும் நினைக்க
எனக்காகவே இருக்க
ஒரு ஜீவன் ..
என் தாய் ..

ஆம் !எனக்கொரு ஆசை
மீண்டும் என் முதல் உலகிற்கு செல்ல ..------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Wednesday, November 23, 2011

என்னை தேடும் நினைவுகளுக்கு ..!

என்னை தேடும் நினைவுகளிடம்
நான் என்ன சொல்ல வேண்டும் ?


உண்மைகள் என்னை பொய்த்து விட்டதால்
தொலைந்து போனேன் என்றா ?
நியாயங்கள் தன் தர்மங்களை
இழந்ததால் என்றா ?

தூரங்களில் உள்ள நியாயங்கள்
சில நேரம் கோபம் தரும் !
காலம் தரும் பதிலில் மட்டுமே
அந்த நியாயங்கள் விளக்கம் பெறும் ...!

உனது தேடல் ,
மாலை நேர காற்று வந்து சில்லென
என்னை மோதி செல்கையில்
அதன் ஈரத்தில் தெரிகிறது ...

தினசரி உச்சி வெயில் வந்து
என்னை சுட்டு செல்கையில்
அதன் கோரத்தில் தெரிகிறது ...

அமாவாசை அன்று
நிலவு தேடும்
மேகங்களிடம் தெரிகிறது ...

பூமிக்கடியில்
நீரை தேடி செல்லும்
மரங்களின் வேர்களில் தெரிகிறது ...

கவிதைக்கு
வார்த்தைகள் தேடும்
எண்ணங்களில் தெரிகிறது ..

தாய் தேடி அழும்
சேயிடம் தெரிகிறது ..

காற்றில் நோக்கின்றி திசையின்றி
எதையோ தேடி அலையும்
சிறகுகளிடமும்
சருகளிடமும் தெரிகிறது ..

இவை அனைத்திலும்
உன் தேடல் தெரிந்தும்
நான் எதுவும் செய்வதற்கில்லை ..

என் முகம் இழந்த உடலோடு
முகமூடி அணிந்து
பேச முடிவதில்லை ...

ஊமையின் வாய் அசைப்பில்
பேச்சு வருவதில்லை ..
இந்த தேடலின்
முடிவில்
நான் சிக்குவதில்லை ...!


------------------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Saturday, November 19, 2011

மேகம் ..!

வானமெனும் சுவரில்
வான்கோ,
டா வின்சி
வரைந்த ஓவியமா நீ ?


நிலவவள் நாணி
தன் முகம் புதைத்துக் கொள்ளும்
போர்வையா நீ?

சூரியன் வெயில் காலத்தில்
தன் முகம் துடைக்கும்
துண்டா நீ ?

சூரிய ஒளியை
சலித்தெடுக்கும்
சல்லடையா நீ?

காற்று வளி மண்டலத்தில்
விடப்படும்
கப்பலா நீ ?

இடி போட்ட
அரட்டலுக்கு பயந்து
கண்ணீர் சிந்துவாயா நீ ?

வான் வெளியில்
போடப்பட்ட
அழகிய தரைவிரிப்பா நீ ?

கார்கால நேரத்தில்
கருப்பு மை அப்பிக் கொள்வாயா நீ ?

வானமெனும் கட்டிலில்
போடப்பட்ட
அழகிய தரைவிரிப்பா நீ ?

வானமகள் காலையிலும்
மாலையிலும்
தன் வீட்டு வாசலில்
இடும் கோலமா நீ?

எவ்வளவு உயரத்தில் இருந்தாலும்
இருக்கும் இடம் தெரியாமல்
மறைந்து போவாய்
என மனிதன் உணர
கடவுள் எழுதிவைத்த தத்துவமா நீ ?
---------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Wednesday, November 16, 2011

என் மனதோடு ஒரு சிறு பயணம் ...!


என் வாழ்க்கை ஓட்டத்திற்கு ஏற்றார்போல்
என் பாதை ஓடினாலும் ,
என் மனம் மட்டும்
சில தருணங்களில்
எங்கோ தொலைந்து விடுகிறது ..

அப்படி சில தருணங்களின்
காட்சிகளில்
நான் இருப்பதால் ,
அந்த காட்சிகளில்
தொலைந்து போகிறேன் ..

என் மனம்
தொலைந்து போகும்
வேளையில் ,
தொலைந்த இடத்திலிருந்து
தெரிந்த இடத்திற்கு
தெரியாத திசை நோக்கி
என் மனதோடு ஒரு சிறு பயணம் ..

நான் அந்த பயணத்தில்
முன்னோக்கி நடக்க
நான் வந்த பாதை
என்னை நோக்கி
பின்னோக்கி நடக்கிறது ..
காலமோ
என்னை நோக்கி
பின்னோக்கி
வேகமாய் ஓடுகிறது ..
சில நேரம்
என்னையும் தாண்டி ஓடுகிறது ..

அது இட்டு சென்ற இடம்
என் மனதின் கூடம் ..
எழுவதும்
கரை தொட முனைவதும்..
தோற்றாலும் பின்
கடல் வந்து எழும் அலையாக உள்ளது
என் மனம் ..

அந்த பயணப்படும்
வழியெங்கும்
தன்னுள் இருக்கும் நினைவுகளை
பதியம் போடுகிறது மனது ..

அந்த பதியம் விளைந்தால்
மனதிலே பூக்கள் பூக்கும் ..
அந்த பூக்களின் வாசமே
தொலைந்து போன பாதையை
மீட்டு தரும் ..

பதியம் கருகினால்
மனதில் ரணமான
காயங்களை மீண்டும் குத்திக்காட்டி,
அந்த வலியே
தொலைந்து போன பாதையை
மீட்டு தரும் ..

இப்படியாக
எப்படியோ
அந்த பயணத்திலிருந்து
மீண்டும்
மீண்டு வந்தேன் ..

இப்படி
முன்பின் தெரியாத நபரை
பார்த்து சிரிக்கும் சிறு குழந்தையாகவே
முன் நடந்த சம்பவம் எண்ணி
சம்பந்தமின்றி
சிலநேரம் சிரிக்கிறேன்,
மனதோடு பயணமாகிறேன் ..

அதில் ஒளிந்திருக்கும்
அழகையும்
ரணத்தையும்
ரசிக்கிறேன் ...

இப்போது இல்லை
எப்போது நினைத்தாலும்
வியப்பாக உள்ளது
இந்த பயணம் ..


-----------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Monday, November 14, 2011

பால்..!தெருவோரம் பாலுக்காக அழும்
அநாதை குழந்தை,
அரசமரத்தடியில்
பால் குடிக்கும் பிள்ளையார்
இப்படிக்கு- சமுதாயம்------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Sunday, November 13, 2011

வாசல் ...!

வீட்டின்
முற்புறத்தில் நின்று
தனியே ஆடுகிறது
முன்னும் பின்னும்
வாசல் கதவு ..

சில நேரம்
பிஞ்சுகளின்
துணையோடும் ..

முன்னும்
பின்னும் ஆடுகையில்
அவையிடும் சத்தங்களை
முதுமையின்
கதறல்களாக கொள்ளவா ?

தனிமையின் துயரம் சொல்லும்
அழுகையாக கொள்ளவா ?

பிஞ்சுகளின் கைபிடித்து
விளையாடிய மகிழ்ச்சி சொல்லும்
சிரிப்பாக கொள்ளவா ?

Friday, November 11, 2011

நொடிகள் ...!நேரங்கள் உடைந்து
உதிர்ந்து சிதறி,
காலத்தின்
கடைசி படிக்கட்டில்
தொங்கிக்கொண்டு இருக்கும் நொடிகள்,
பல நேரம்
நொடிகளாக கடப்பதில்லை ,
யுகங்களாக கனக்கிறது ..

காலமெனும் அணைக்கட்டில்
வாழ்கையெனும் மதகுகளின்
திறவுகளுக்கு ஏற்பவே
நொடிகள் யாவும்
ஒவ்வொரு நொடியும்
பயணமாகிறது ..

வாழ்கையின் முற்புறத்தில் ,
காலம் வைக்கும்
ஒவ்வொரு புள்ளியிலும்
கோலமிடுகிறது நொடிகள் ..

காலத்தின் கடைசிபிள்ளையான
நொடிகளின்
பிள்ளைகளின்
பிள்ளைகள் என
காலத்தின் வாரிசுகளின்
எண்ணிக்கையை கண்டவர்
எவரும் இலர் ..!

------------------------------------------------------------------------------------

நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.Thursday, November 10, 2011

மனிதன் உயர்திணையா ? அஃறினை?

மனிதன் உயர்திணையா ? அஃறினை?-ஒரு சிறப்பு பட்டிமன்றம் ...நடுவர் -கடவுள்

பேச்சாளர்கள் - மனிதன் ,பாம்பு ,யானை ,நாய் ,பூனை ,முதலை ,பறவை ,குரங்கு .

கடவுள் :
என் இனிய உயிரினங்களே ..
நான் படைத்த உயிரினங்களில் மனதன் மட்டும் உயர்திணை என்ற உயர்ந்த விதியை குடுத்தேன் ...
ஆனால் இன்று மனிதனே அதை கெடுத்தான்..
விவாத மேடையில் மனிதன் உயர்திணையா ? அஃறினை? என்ற கேள்வியை நிறுத்தி விட்டான் ..
முதலில் பேச வருபவர் மனிதன் ..

மனிதன் :
மனிதன் ஏன் உயர்திணை தெரியுமா ?
ஏனென்றால் அவன் மனிதன் .
புதிதாய் படைப்பவன் ..
பலவற்றை கண்டுபிடிப்பவன் ..
சிந்திப்பவன் ..
சிரிப்பவன் ..
உயிரியல் குடும்பத்தில் சிறப்பவன்..
இப்படி பல சிறப்புடன் இருப்பவன் ..
அதனால் அவன் உயர்திணை ..

கடவுள் :
விளக்கம் அருமை . அடுத்து குரங்கு .

குரங்கு :
பூக்களை கூட கொலை செய்து
அதில் வாசம் தேடும் கூட்டம் நீங்கள் ..
சொன்னபடி கேளாமல்
ஒழுக்கத்தோடு வாழாமல் ,
மனம் மாறி மனம் மாறும் ,
குணம் மாறி குணம் மாறும்
கட்சி விட்டு கட்சி தாவும்
என்னைப் போல் குரங்கு நீங்கள் ..

கடவுள் :
ஆஹா !பிரமாதம் ..அடுத்து பாம்பு ..

பாம்பு :
மனம் இழந்து
குணம் இழந்து
பணம் தேடும்
பிணம் நீங்கள் ..
தன் இனம் அழித்து
அதில் வெற்றியை ருசித்து
உணவுக்காக
எங்கள் இனத்தையே உண்ணும்
என்னைப் போல் பாம்பு நீங்கள் ..

கடவுள் : மேல் சொன்னது உண்மை தான் ..அடுத்து யானை ..

யானை :
சுயநலப் பேய் பிடித்தவனுக்கு
அடிக்கடி மதமும் பிடித்து போகும் ..
மதம் கொண்டால்
மனதை புதைப்பான்
பிறரையும் அழிப்பான்
என்னை போல் ..

கடவுள் :இது நிதர்சன உண்மை .. அடுத்து நாய் ..

நாய்:
நான் கூட நன்றியோடிருக்க
மனிதன் செய்நன்றி கொன்றான்
பணத்திற்காக பன்றியை போல்
சாக்கடையில் பிரண்டான்..
பருவத்தில் ,
பிற பலரின் பின்னல்
என்னைப் போல்
நாயாக அலைகிறான் ..!

கடவுள் : ஹா ஹா ..அடுத்து பூனை

பூனை :
மணமான புதிதில்
தன் துணையினை
சுத்தி சுத்தி வரும்போது
பால் கண்ட பூனை யாகிறான் ..

கடவுள் : உண்மை தான் ..அடுத்து பறவை ..

பறவை:
பெற்று வளர்த்த
தாய் தந்தையை மறக்கும் போது ..
சிறகு முளைத்து
என்னைப் போல்
கூட்டை விட்டு பறக்கும் போது
பறவையாகிறான்..
பெற்ற குழந்தையை ,
குப்பைதொட்டியில் வீசும்போது ,
தன் முட்டை
அடுத்தவர் கூட்டில் இடும்
குயிலாகிறான் ...

கடவுள் : உண்மை தான் ..அடுத்து முதலை ..

முதலை:
பணத்திற்காக
பிணத்திடம் கூட திருடி
பிணம் தின்னும் ஓநாயயே ..
தன் காரியம் சாதிக்க
பிறரிடம் என்னைப் போல்
முதலைக் கண்ணீர் வடிக்கிறாயே ...

கடவுள் :
அனைத்து விளக்கமும் உண்மை ,
மனிதனின் விளக்கம் தவிர ..
மனிதன் பல மிருகங்களின் கலவை ..
அதனால்
இலக்கணத்தில் ஒரு மாற்றம் தேவை ,
மனிதன்
உயர்திணை இல்லை
அஃறினை..


------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Tuesday, November 8, 2011

எங்களை தெரியுமா ?

எங்களை தெரியுமா ?
கணிப்பொறியோடு விளையாடி
அதனோடு உறவாடி
வேலை செய்யும் வித்தைக்காரர்கள் நாங்கள் ..

பொய் பேசும் மனிதன் பார்த்து வியாபாரம்
செய்பவர்கள் இல்லை நாங்கள் ..
செய்ததை சொல்லும்
கிளிபிள்ளையாம் கணினி பார்த்து
வியாபாரம் செய்பவர்கள் நாங்கள்..

கைநிறைய சம்பளம் வாங்கும்
நவயுக Pharaoh இன் அடிமைகள் நாங்கள் ...

உடல் உழைப்பை இழந்ததால் ,
மன உளைச்சலை
இலவசமாக பெற்றவர்கள் நாங்கள் ..

இப்படி வேலை செய்து
கண்களுக்கும்
எங்கள் கண்ணடிக்கும்
திருமணம் செய்து வைப்பவர்கள் நாங்கள் ...

8 மணி நேரம்
உடலில் பாரம் சுமக்கும்
வேலைகாரர்கள் இல்லை நாங்கள்..
24 மணிநேரமும்
மூலையில் வேலை சுமக்கும்
கூலிகள் நாங்கள் ...

A/C அறையில்
எப்போதும்
ஒரு சூடான மனநிலையோடு
வேலை செய்பவர்கள் நாங்கள் ..

குடும்பங்களை மறந்து
வேலை செய்யும்
வண்ண உடை அணிந்த
கணினியில் உலகம் தேடும்
புதிய வகை சந்நியாசி நாங்கள்..

ஒட்டு போடும் நாளில் கூட
எங்கிருந்தோ எங்கள் சம்பள நோட்டு போடும்
அந்நிய துரைகளுக்கு
விசுவாசமாக இருந்து கொண்டு ,
நாட்டில் நடக்கும் ஊழல் பற்றி பேசும்
தேசியவாதிகள் நாங்கள்..

வேலையில்
மூளையில் பளு சுமக்கும்
வேலைகாரர்கள் நாங்கள்..

வேடந்தாங்கல் பறவையாக
அவ்வப்போது குடும்ப கூட்டுக்குள்
வந்து செல்லுபவர்கள் நாங்கள்..

இன்னும் தெரியவில்லையா ?மனதில் வன்மம்
கூட்டும் வேலைப்பளுவில் இருக்கும்
மென்பொருள் காரர்கள் நாங்கள்..


------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Sunday, November 6, 2011

மழை ...!

மேகம்
மண்ணில்
இட்ட முத்தங்களா ..மேகங்களின்
மோகங்களின்
பிள்ளையா?

பூங்காற்று
போட்ட
மாறுவேடமா?

வானம்
பூமிக்கு போடும்
அட்சதையா ?
இல்லை
மானுடம்
கண்டு
வானம் காரி
உமிழும் எச்சிலா ?

பூமிக்கு
மேகம் தரும்
பரிசா ?

மேகம் பூமியில்
உயிர்கள் கருத்தரிக்க
தந்த விந்தோ ?

எங்கள் தாகத்திற்கு
வானம்
மேகத்திடம் பட்ட
கடனா ?

மேகங்கள்
தற்கொலை செய்து
பூமியின் மீது
விழுந்தனவா ?
இல்லை
பூமியின்
அழகை கண்டு
மேகம்
மயங்கி விழுந்தனவா ?

பருவ காற்று
பூமிக்கு பாடும்
வசந்த தாலாட்டா?

கருமை இட்ட
மேக விழிகளில் இருந்து
வழியும் கண்ணீரா ?

இடியின் அதட்டலுக்கு
பயந்து மேகம்
சிந்திய கண்ணீரா?

எதுவோ ,
கிழிந்துவிட்டது எனது குடை
இனி நான் அழகாய் ரசிக்கலாம்
மழை ...!


------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Saturday, November 5, 2011

எனக்கு மேல் ஒருவன் ...!
கொலை செய்துவிட்டு
உறங்க சென்றேன்..
இரவில்,
என்னை கடித்தன
கொசுக்கள்...
------------------------------------------------------------------------------------

நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Friday, November 4, 2011

அனாதை எழுத்துக்கள் ….!பல எழுத்துக்கள் இங்கே
படிக்க யாரும் இன்றி
அனாதையாக கிடக்கிறது ,
பிறந்த குழந்தையை,
தூக்கி சீராட்ட யாரும் இன்றி
அனாதையாய் இருப்பது போல் ...

எழுத்தாளர்கள் அனைவரும்
குயில்களே ...
காக்கை கூட்டில் முட்டையிட்டு
செல்லும் குயில்கலாகவே ,
அவர்கள் எழுத்துக்கள் யாவும்
வலைகூட்டிலும்
புத்தககூட்டிலும்
அனாதையாய்
விட்டுவிட்டு செல்லப்படுகிறது ..

தெருவில் அனாதையாய்
விடப்பட்ட குழந்தையை
கண்டும் காணாமல் போவது போல் ,
பல நேரம்
இந்த அனாதை எழுத்துக்களும்
கண்டும் காணாமல்
விட்டு செல்லப்படுகிறது ..

அனாதை எழுத்துகளுக்கு
ஆதரவு அளித்து
வாழ்வளிப்பதும்
தங்கள் நெஞ்சில்
தஞ்சம் அளிப்பதும்
வாசகர்களே ...

அனாதை எழுத்துக்களின்
வாழ்வும் ,
அனாதை குழந்தைகளின்
வாழ்வும் ஒன்றாகவே
இருக்கிறது ...
தன்னை ஏற்றுகொண்ட
நெஞ்சங்களின் அளவை பொறுத்தே
அவற்றின் வாழ்வும்
பிரகாசிக்கிறது ..


------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.