Sunday, September 4, 2011

காற்று தேடும் மேகங்கள் ..!


தான் கலைத்த மேகங்களை ,
தொலைந்து போனதாக எண்ணி
வானத்திடம்
கேட்டு கொண்டு இருக்கிறது
காற்று ஒவ்வொரு நாளும் ...!

காற்றால் கலைக்கப்பட்ட மேகங்கள் யாவும்
கைத்தவறி விழுந்து சிதறிய கண்ணாடியாக
உடைந்து போகிறது..!

உருமாற்றம் என்பது ,
முன்னம் இருந்த நிலை தொலைந்து போகுதல் என்றால்
மேகம் தொலைந்து போனது எனலாம் ...!

மேகம் கலைந்துபோகுதல் என்பது ,
தக்கனபிழைத்தல் என்றால்
காற்றின் தேடல் தவறு எனலாம் ..!

பெரிய வட்டத்தின்
சிறிய புள்ளி நேராக இருப்பதாக எண்ணி ,
நேராக போவதாக நினைத்து
வட்டமடிப்பது போல
காற்று
தான் கலைத்த மேகத்தை தேடிக்கொண்டிருக்கிறது ...!

சிறு குழந்தையின்
மழழை கேள்வியாகவே
காற்றின் கேள்வி வானத்திடம்
முன்வைக்கபடுகிறது ...!

இரவு பகல் என
எதுவும் பாராமல்
அதன் தேடலும் ,
கேள்வியும்
நீண்டு கொண்டே போகிறது ..!

பகலின் தொலைந்து போன
இரவின் இருளை வெளிச்சத்தில்
தேட முயற்சிப்பதைப்போல ,
காற்றின் தேடலும்
கேள்வியும் தொடர்கிறது ..!

No comments: