Sunday, September 4, 2011

காற்று தேடும் மேகங்கள் ..!


தான் கலைத்த மேகங்களை ,
தொலைந்து போனதாக எண்ணி
வானத்திடம்
கேட்டு கொண்டு இருக்கிறது
காற்று ஒவ்வொரு நாளும் ...!

காற்றால் கலைக்கப்பட்ட மேகங்கள் யாவும்
கைத்தவறி விழுந்து சிதறிய கண்ணாடியாக
உடைந்து போகிறது..!

உருமாற்றம் என்பது ,
முன்னம் இருந்த நிலை தொலைந்து போகுதல் என்றால்
மேகம் தொலைந்து போனது எனலாம் ...!

மேகம் கலைந்துபோகுதல் என்பது ,
தக்கனபிழைத்தல் என்றால்
காற்றின் தேடல் தவறு எனலாம் ..!

பெரிய வட்டத்தின்
சிறிய புள்ளி நேராக இருப்பதாக எண்ணி ,
நேராக போவதாக நினைத்து
வட்டமடிப்பது போல
காற்று
தான் கலைத்த மேகத்தை தேடிக்கொண்டிருக்கிறது ...!

சிறு குழந்தையின்
மழழை கேள்வியாகவே
காற்றின் கேள்வி வானத்திடம்
முன்வைக்கபடுகிறது ...!

இரவு பகல் என
எதுவும் பாராமல்
அதன் தேடலும் ,
கேள்வியும்
நீண்டு கொண்டே போகிறது ..!

பகலின் தொலைந்து போன
இரவின் இருளை வெளிச்சத்தில்
தேட முயற்சிப்பதைப்போல ,
காற்றின் தேடலும்
கேள்வியும் தொடர்கிறது ..!

Friday, September 2, 2011

வெப்பம் ..!


நான்
சில நேரம் கேட்டதுண்டு ,
காற்றிடம்
என்னை தீண்டாதே என்று ...!
குருதியே சுண்டிப்போக
உள்ளே புழுக்கம் ...!
உயிரே வெந்து போக
உள்ளே வெப்பம் ...!
வெப்பம் தணிக்க தேவை
குளிர் காற்று,
ஆனால்
இங்கு காற்று தூண்டிவிடுகிறது
வெப்பத்தின் அளவை ...!
காட்டு தீ வளர்க்கும்
காற்றை போல ...!
காயம் இல்லாமலே
உள்ளே வெப்பம் எரிகிறது ...!
வடுவே இல்லாமல்
உள்ளே வெந்து கிடக்கிறது ...!
மருந்தாய் இருக்கும் காற்று
இப்போது பாம்பின்
பருந்தாயிருக்கிறது..!
காற்றுக்கு
பயந்து போர்வைக்குள் குடியிருப்பு ..!
எல்லாம் இந்த காய்ச்சலின் வேலை தான் ..!
நான் சில நேரம் கேட்டதுண்டு
காற்றிடம்
என்னை தீண்டாதே என்று ...!

மயங்கிய விழிகள் !


இறுதிக்கு
ஒரு முடிவு
காத்திருந்தது
ஓட்டத்திற்கு
ஒரு ஓய்வாக ..!
சத்தமிட்ட
நாள் முதல்
ஓயாமல் துடித்தது
சற்று நிற்க
விழைந்தது...!
கண் விழித்த
நாள் முதல்
காட்சியின் பாரம் சுமந்து ,
உணர்ச்சியின் ஈரம் சுமந்த
கண்களும்
கேட்டது
விருப்ப ஓய்வு ..!
வாழ்க்கையை
காலோட்டத்துடனும்
காலத்தோட்டதுடனும்
விளையாடிய
விளையாட்டிற்கு
முடிவு வந்தது ...!
இது பயணத்தின்
தொடக்கமல்ல
பிறந்த நாள்முதலே
உறுதியான
இறுதி பயணத்தின்
தொடக்கம் ..!
சுற்றி
உற்றார்
உறவினர் ,
என் தண்ணீரிலிருந்து வந்த
சொத்து
கண்ணீரோடு கரைந்திருக்க ,
பல்லாண்டு
உடனிருந்த
தான் பாதி
அதன் மீதியை
விட்டுசெல்ல
துக்கத்துடன்
என் பாதி ..!
அப்போது முற்றாக
விழிகள் மூடும் நேரம்
கண்களுக்குள்
நாற்றாக வந்து நின்றது
அவள் அழகிய
பூமுகம் ..!
மூடிய விழிகள்
திறக்கவே இல்லை
அவள் அழகை கண்டு
மயங்கி ...!

நம்பிக்கை ..!



ஓடும் இரயிலில்
பொம்மை விற்கிறார்
பார்வை அற்றவர் ..!
அங்கே ஓடுவது ,
தண்டவாளம் மீது
இரயில் மட்டுமல்ல ..!
நம்பிக்கை மேல்
அவர் வாழ்கையும் தான்...!

மீன்களின் சிரிப்பு ..!


சேது சமுத்திரத்தின்
சாதுவான மீனவர்கள்
திசைமாறி கடக்கையிலே,
தினசரி தோட்டாவின்
முத்தம் ...!
சுருக்கு கயிற்றால்
இறுக்கி அணைப்பு !
மீன்களை விட
வதைபட்டு
பிடிபடும்
பாவப்பிறவிகள்..!
கடலில்
மீன்களின் கண்ணீராய்
எங்கள் கண்ணீரும்
கடலோடு
கரைந்து விடுகிறது ..!
புத்த தேசத்து
மக்களின்
கீழ்த்தரமான
புத்தியாலே
வதைபடுகிறோம் ,
கடற்கரையோர
கருவாடாய்
மிதிபடுகிறோம்..!
தினசரி
சிந்தும் இரத்தம்
கடலோடு
கரைந்து
மறைந்து விடுகிறது ...!
வலியால்
நாங்கள் கத்தும் கதறல்
காற்றில் மறைந்து விடுகிறது ..!
நாங்கள் பிடிக்காமல் விட்டுசென்ற
மீன்களும்
எங்களை பார்த்து
ஏளனமாய் சிரிக்கிறது..!