Friday, April 22, 2011

கடல் மேல் அகதியின் பயணம்...!நாங்கள் பிறப்பால் செய்த பாவம்
தமிழனாய் பிறந்தது ..!
நாங்கள் வாழ்வில் செய்த பாவம்
ஈழத்தில் வாழ்ந்தது ..!
பாவத்தின் சம்பளம் மரணம்
ஆனால் அதனினும் கொடிது ,
கடல் மேல் ஒரு அகதியின் பயணம் ...!

சிறகொடிந்த பறவை
மரம்விட்டு மரம் பறக்கும்
பயணம் இது...!
வான் மழையோடு போட்டி போடும்,
குண்டு மழையிலிருந்து பிழைத்து..!
உயிரை உடலோடு சேர்த்து பத்திரமாக அழைத்து ..!
வந்து கரை சேர்வது -மிகவும் கடிது..!
இதை கடந்தவனுக்கு மரணம் கடப்பது எளிது ..!

எங்கள் மொழிக்கு அர்த்தம் இல்லாமல் போன
தேசத்தில் நாங்கள் வாய் பேசும் ஊமையானோம் ..!
இடி மின்னல்களுக்கு போட்டியாக வரும் ,
குண்டுகளுக்கு மத்தியில் எங்கள்
செவிகள் மரத்து செவிடானது ..!
ஆமி உடையில் வந்து
காம வேட்டையாடும் மிருகம் கண்டு
எங்கள் கண்கள் குருடானது ..!
விளை நிலத்தில் விதைத்த கண்ணிவெடிகள்
விளைந்ததால்
எங்கள் கால்கள் உடைந்து ஊனமானது ...!
இப்படி,
உடலால் -ஊனமாகி
மனதால்-பிணமாகி
கடலை தாண்டி
புது வாழ்வை தேடுகிறோம் ..!

எங்களுக்கு இரண்டு தாய்,
பிறப்பால் ஒன்று,
கடற்பயணம் சுமக்கும் தோணி -மற்றொன்று ..!
பெற்ற தாய் போல்
பத்துமாதம் நீர்குடத்தில் சுமந்து ,
உலகம் சேர்த்த தாய் போல் ,
கடற்பரப்பில் எங்களை சுமந்து புது இடம்
சேர்க்கும் தோணி -தாய் தான் ..!

சில நேரம் தாயின் பிரசவம் -பொய்த்து போகலாம்..!
கருவில் சிசு கலைவது போல்..!
மூட்டை முடிச்சு
உடன் கொண்டு செல்ல
ஏதுமில்லை -எங்களிடம் !
உடல் உடமையின் -உயிர் சொத்தை
மட்டும் எடுத்து கொண்டோம் ..!
கடலோடு
தோணி துணையோடு பயணம் ..!

இந்த பயணம் ஒரு போர்க்களம் ..!
அலையோடும் மழையோடும்,
புயற்க்காற்றோடும் கடலும்
நடத்தும் யுத்தங்கள் மத்தியில்
இப்பயணம் ..!

உணவாக உண்ண ஏதும் இல்லை ,
காற்றை தவிர..!
நீராக அருந்த ஏதுமில்லை
கடல் நீரை தவிர..!
பலர் சில நேரம்
கடல் நீர் உண்டு உயிர் பிழைத்தோம் ..!
சிலர் பல நேரம்
உயிரையும் இழந்தோம் ..!

திசை மாறிய தோணி
கரை தட்டியதால்
இடம் மாறிப்போனோம் நாங்கள்..!
ராமன் கட்டிய பாலம் முட்டி
இராவணன் தேசத்து மக்கள் கூடமாய் நின்றோம் ..!

அந்த மணற்திட்டில்
பசியால் சிலர்,
மண்ணை உண்டு மண்ணுக்கு இரையானார்கள்..!
பசியால் அழும் குழந்தைகள்
தன் பெற்றோர்களாலே
கொலையானார்கள் ..!
சில நேரம் ,
உதவிகரம் கொண்ட உள்ளம் கொண்டு
புது இடம் சேர்வோம் ..!
பல நேரம் ,
மண்ணோடு மண்ணாகி
அங்கேயே மாய்வோம் ..!

அப்படி உயிர் பிழைத்தால்
மரணம் கூட
பாவப்பட்டு எங்கள் உயிரை
விட்டு விட்டதென பொருள் ..!
உயிர் பிழைத எங்களுக்கு
புது இடத்தில்
புது ஜனனம்
"அகதி" என்ற பெயரில்
மனிதன் என்ற அடையாளம் மாறி ..!

Sunday, April 3, 2011

மனப்புற்கள் மேயும் ஆடுகள் ..!மனப்புற்கள் மேயும்
சில ஆடுகள்
நினைவில் கொள்ள ..!

மேய்ந்து போன
இடங்களில் நிச்சயம்
உங்கள் மிச்சமும்
தடயமும் இருக்கும் ...!

பேச்சையும் வசீகரத்தையும்
எங்கள் இச்சையையும்
ஆயுதமாய் கொண்டு
உங்கள்
காரியம் செய்யும்
ஆடுகளே..!

நேரம் போல்
மாறி மாற்று
இடத்தில்
மேய்ந்தாலும் ,
அது பச்சோந்திதனமல்ல ..!
அது சகிப்புத்தன்மை ..!

பச்சைபசேல் என இருந்த
இடத்தை
வேற்றுதரையாக
மாற்றிவிட்டு
மேய்ந்து சென்றாலும்
அந்த நிலங்கள்
காய்ந்து பிளக்க கூடாது ..!
காரணம்
ஆடுகள் பாவம்..!
ஒன்றும்
தெரியாது ..!

முத்தமிடுவது போல்
அருகில் வந்து நிற்பது
ஆடுகள் குணம் ..!
பிடித்த இடத்தில் இருப்பதே
புற்களின் மனம்..!

பசித்த வேளையில்
இடம்மாறி போனாலும்
நீங்கள் சுயநலவாதிகளல்ல ..!
காலம் போல்
மாற்றி பேசினாலும்
வார்த்தை சுத்தம் ..!

ஆடுகளின்
நியாயங்கள்
கருத்துகள்
மாறிக்கொண்டே இருக்கும் ,
இடம் மாறி மேய்வது போல் ..!

முன்பு சொன்னதை
உண்டதை
எண்ணி காய்ந்து கிடந்தால்
அது நிலத்தின் குற்றம் ..!

என்றும் புற்கள்
ஆடுகள் வாயில்
தானாக நுழைவதில்லை ..!
உண்பது ஆடானாலும்
பலியாவது புற்கள் தான் ..!

ஆடுகளின் உணவின் ருசி ,
புற்கள் வலி..!

இப்படி இடம் மாறி
குணம் மாறி மேய்ந்து
கொழுத்து நிற்கும்
ஆடுகளே..!
நீங்கள்
உண்பது இப்போது
ஜீரணித்தாலும் ,
ஒரு நாள் வரும்
அன்று
கசாப்பு கடையில்
தொங்கிக்கொண்டு
இருப்பீர்கள் தலைகீழாக ..!

உங்கள் பாவத்தின்
தண்டனையாக..!

அம்மா ...!ஒரு வீட்டுக்குள்
குடி கொண்டு அனாதையாய்
வாழ்ந்து வந்தேன் ...!
குடிகொண்டது
மொத்தம்
பத்து மாதம் ..!

கிட்டதட்ட
அது ஒரு
தனிக்குடித்தனம் ...!

குடிகொண்ட
நாள் முதல்
வாடகை
தந்ததில்லை ...!

பாசமாக
உன்னுள் வைத்து
உபசரித்து
பாத்து மாதம் கழித்து
வெளியே தள்ளிவிட்டு
அழவைத்த
கொடிய பாசக்காரி ...!

உன் அன்பில் மயங்கி
வாடகை தர மறந்திருப்பேன் ..!
அதற்காகவா
வெளியே தள்ளி விட்டாய் ...!

உன் செயலால்
எனக்கு கோபம்..!
பழி தீர்த்தேன் ,
உந்தன் வயிற்றில்
எட்டி உதைத்து ..!
நீ என்னை வெளியே
தள்ளிய வேளையில் ..!

உந்தன் தண்ணீரில் இருந்து
எந்தன் கண்ணீருடன்
வெளிவந்தேன் ..!

உன்னுள்
இருந்த வரை
காற்று தீண்ட
அஞ்சியது ...!
ஒளி தொட யோசித்தது ...!

வேலையில்லை,
ஒரே வேலை தூக்கம்...!
சிலநேர
விழிப்பில்
தூக்கத்திற்கு ஓய்வு ..!

ஒண்டியாய் இருந்தேன்
உந்தன் துணையோடு ..!

சற்று குழம்பி போனேன்,
இங்கு எல்லாம்
தலைகீழ் ..!
என்னை தள்ளி விட்டாய்
அதனால் எல்லாம்
தலைகீழாக
மாறிவிட்டதோ ...!

பயமாயிருந்தது ,
வெளிச்சம்
கண்டு இமைதிறக்க
விழிகளும்
அஞ்சியது ...!

என்னை சுற்றி பலர் ,
யாரை நம்புவேன் நான்..!
அங்கும்
இருந்தாய்
எனக்காக நீ..!

இருளில்
சென்றால்
நிழலும் பயந்து
மறைந்து ஓடும் ..!
நீயே
இருளில் ஒளியாய்
வெளிச்சத்தில் வழியாய்
இருந்தாய் ...!

என்னை நீ முத்தமிட்ட
முதல் கணம்
உன்னை
பிடித்து
போயிற்று ..!
அப்போதுணர்ந்த
உந்தன் வெப்பம்
உந்தன் சுவரிசம்
நான்
சேமித்த
பொக்கிஷங்கள் ..!

அவை
உன்னை கூட்டத்தில்
காட்டி கொடுக்கும்
ஆட்காட்டி ..!
குருதியை
பாலாக தந்து
உருதியாக்கியவளே..!

நீ கொடுமைக்காரி
பாசமழையில்
பச்சை குழந்தையை
நனையவைத்த
கொடிய பாசக்காரி ..!

என்னகே புரியாத
அழுகை மொழி
உனக்கெப்படி புரிந்த்தது என்று
புரியவில்லை ..!

அழுதிட்ட
முதல் கணமே,
பசியறிந்து பாலூட்டி
ஓய்வறிந்து தாலாட்டி
நோய்யறிந்து குணமாக்கி ..!

விழிகளில்
கண்ணீர் வழிந்திட்டால்
உன் நெஞ்சில்
வெந்நீரை உணர்ந்திட்டாய் ..!

உன் வாய்மொழியில்
உணர்ந்தேன்
என் தாய் மொழியை ..!

தவழ்ந்திட்ட போது
உன் கை பிடித்து
நடை பழகிட்டபோது ,
அம்மா என
உன்னை அழைத்திட்ட போது
உந்தன் மகிழ்ச்சிக்கு இணை இல்லை,
அதை எழுதிட வானமே எல்லை ..!

என் உலகம்
ஆளாக்கி கொடுத்தது
இந்த உலகிற்கு
என்னை..!

நீ ஊட்டும்
பால் சோற்றிடம்
பிச்சை கேட்கும்
தேவலோக அமுதமும் ..!

நோயுற்றால்
உன் அன்பிடம்
பிச்சை கேட்கும்
குணமாக்கும் மருந்தும்..!

நீ பாடும்
தாலாட்டிடம்
பிச்சை கேட்க்கும்
சப்தசுவரங்களும் ..!

சோகமாக
உன்மடியில் படுத்தால்
வேகமாய்
சொர்க்கமே வந்து
மகிழ்வித்திடும்..!

கடவுள் யார் என
அடையாளம்
காட்டும்
என் கடவுள் நீ ...!

மந்திரங்களும்
செய்யும் ஜாலங்களும்
தோற்றுபோகும்,
எக்காலமும்
எல்லோரும்
முதன் முதலில்
சொல்லும் மூன்றெழுத்து
மந்திரம்
-அம்மா ..!