Saturday, December 10, 2011

கடவுளும் மனிதனும் ...!

கடவுள்
மனிதனை படைத்தார் ,
மனிதனும்
பல கடவுள்களை படைத்தான் ..

மனிதன்
கடவுள் இல்லா இடங்களில்
பேயை கண்டான் ..
கடவுள்
மனிதம் இல்லா மனித மனங்களில்
பேயை கண்டார் ..

கடவுள்
மனிதன் மனதை
கல்லாய் கண்டார் ..
மனிதன்
கடவுளை
கல்லில் கண்டான் ..

மனிதன்
சில தருணங்களில்
கடவுள் ஆனான் ..
கடவுள்
இதிகாசங்களில்
மனிதன் ஆனார் ..

கடவுளும்
பூமியில் மனிதனை
தேடுகிறார் ..
மனிதன்
கடவுளை தேடி
அலைகிறான் ..

ஆனால் இறுதியில் ,
கடவுள்
கடவுளாகவே இருக்கிறார் ..
மனிதன்
மனிதனாகவே இருக்கிறான்..

Tuesday, December 6, 2011

சத்தம்...!

யுத்தத்தின்
உண்மையான சத்தம் ,
போரில்
கைகளை இழந்த
குழந்தையின்
கதறலில் கேட்கிறது ...!



வறுமையின்
உண்மையான சத்தம் ,
தெருவில்
பசியில் பாலுக்கு அழும் குழந்தையின்
அழுகையில் கேட்கிறது ..!




---------------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Sunday, December 4, 2011

பட்டம்..!

சிறகின்றி பறக்கும்
உயிரின்றி துடிக்கும்
காற்றை சுவாசிக்கும்
அதை சுவாசிக்கும் வரை
நிலைக்கும் ..
எப்போதும் உயர வேண்டும் என
நினைக்கும் ..


தன் நம்பிக்கை
நூல் கொண்டு
திசை நோக்கி
குறிக்கோளோடு
பறக்கும் ..

நூலிலையில்
காற்றில்
தள்ளாடியபடியே
தனியே நிற்கும் ..

மனிதன் கையில்
இருப்பதால் என்னவோ
போட்டி என
வந்துவிட்டால்
அடுத்தவனை அறுக்கும் ..

பறவையும் பொறாமை படும்
உன்னை பார்த்து ..

ஒற்றைக்காலில்
காற்றின் மெல்லிய
இசைக்கு நாட்டியமிடும்..

உண்மையிலே
நான் படிக்காமல்
வாங்கிய பட்டம் நீ ..

------------------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Saturday, December 3, 2011

உறவுகள் ..!


காதுகளோடும்
வாயோடும்
உறவாடும்
கைபேசி ..

கண்களோடு
உறவாடும்
தொலைக்காட்சி ..

இப்படி மாறிப்போனதால்
மனதும் மறந்துபோனது
மனிதரோடு உறவாட ...!

நான் கவிதை என எண்ணி எழுதியவை என்னை பார்த்து கேட்ட கேள்விகள் ..


இங்கு கீழே இருக்கும்
நான் யார் ?
நான் கவிதையா ?
கட்டுரையா ?
கதையா?
இல்லை கிறுக்கல்களா ?

என்னிடம்
எதுகையில்லை ,
மோனையில்லை,
சந்தமில்லை ,
மரபு இலக்கணப்படி
கவிதைக்கான எந்த
பந்தமும் இல்லை ..!
அப்படி என்றால்
நான் யார் ?

என்னிடம்
ஒரு கதைக்கான
தொடக்கமுமில்லை ,
அதை விளக்கும் சம்பவமுமில்லை ..
அதற்கான முடிவுமில்லை ,
இவை அனைத்தும் சொல்லும்
கருவுமில்லை ..
அப்படி என்றால்
நான் யார் ?

என்னில்
ஒரு கட்டுரைக்கான
ஆரம்பமும் இல்லை
முன்னம் வந்த வரிக்கும்
பின்னம் இருக்கும் வரிக்கும்
எந்த ஒரு தொடர்பும் இல்லை ..
இவை அனைத்தும் விளக்க
எந்த ஒரு கருத்துமில்லை ..
அப்படி என்றால்
நான் யார் ?

என்னை படித்தால்
புரியவில்லை
புரியாமலுமில்லை..
இவையாவும் படித்தால்
அர்த்தம் புரியாமலிருக்க
கிறுக்கலும் இல்லை ..
அப்படி என்றால்
நான் யார் ?


---------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Sunday, November 27, 2011

எனக்கொரு ஆசை ..!

எனக்கொரு ஆசை
மீண்டும்
என் முதல் உலகிற்கு செல்ல ...



நீர் சூழ்ந்த உலகம் அது ,
காற்று என்பதே கிடையாது ,
இருள் நிறைந்த உலகம் அது,
பயம் என்பதே கிடையாது ..

அங்கே இருட்டில் இருந்தும்
எப்போதும் வாழ்கை
வெளிச்சமாய் இருந்தது..

கிட்டதட்ட
அது ஒரு
தனிக்குடித்தனம்
ஆனாலும் தனியாக இல்லை ..

உணவு இடம் பாசம்
என அனைத்தும் கிடைக்கும்
விருந்தோம்பல் அங்கே ..

வேலை என்பதே கிடையாது ,
ஆனாலும் ஒரே வேலை தூக்கம் ..
சில நேர விழிப்பில் ,
தூக்கத்திற்கு ஓய்வு ..

மனதில் சிறிதும்
கோபம் இல்லை ,
சோகம் இல்லை ,
துன்பம் இல்லை ,
காதல் இல்லை ,
காமம் இல்லை ..

இரவின் நிலவு போல ,
அங்கு துணையாக யாரும் இல்லை ,
தனிமையை தவிர ..

ஆனாலும் அங்கேயும் ,
நிலவை தாங்கும் வானம் போல
எனையும் தாங்க ,
எனக்காக சுவாசிக்க ,
எனக்காக உண்ண ,
என்னையே எப்போதும் நினைக்க
எனக்காகவே இருக்க
ஒரு ஜீவன் ..
என் தாய் ..

ஆம் !எனக்கொரு ஆசை
மீண்டும் என் முதல் உலகிற்கு செல்ல ..



------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Wednesday, November 23, 2011

என்னை தேடும் நினைவுகளுக்கு ..!

என்னை தேடும் நினைவுகளிடம்
நான் என்ன சொல்ல வேண்டும் ?


உண்மைகள் என்னை பொய்த்து விட்டதால்
தொலைந்து போனேன் என்றா ?
நியாயங்கள் தன் தர்மங்களை
இழந்ததால் என்றா ?

தூரங்களில் உள்ள நியாயங்கள்
சில நேரம் கோபம் தரும் !
காலம் தரும் பதிலில் மட்டுமே
அந்த நியாயங்கள் விளக்கம் பெறும் ...!

உனது தேடல் ,
மாலை நேர காற்று வந்து சில்லென
என்னை மோதி செல்கையில்
அதன் ஈரத்தில் தெரிகிறது ...

தினசரி உச்சி வெயில் வந்து
என்னை சுட்டு செல்கையில்
அதன் கோரத்தில் தெரிகிறது ...

அமாவாசை அன்று
நிலவு தேடும்
மேகங்களிடம் தெரிகிறது ...

பூமிக்கடியில்
நீரை தேடி செல்லும்
மரங்களின் வேர்களில் தெரிகிறது ...

கவிதைக்கு
வார்த்தைகள் தேடும்
எண்ணங்களில் தெரிகிறது ..

தாய் தேடி அழும்
சேயிடம் தெரிகிறது ..

காற்றில் நோக்கின்றி திசையின்றி
எதையோ தேடி அலையும்
சிறகுகளிடமும்
சருகளிடமும் தெரிகிறது ..

இவை அனைத்திலும்
உன் தேடல் தெரிந்தும்
நான் எதுவும் செய்வதற்கில்லை ..

என் முகம் இழந்த உடலோடு
முகமூடி அணிந்து
பேச முடிவதில்லை ...

ஊமையின் வாய் அசைப்பில்
பேச்சு வருவதில்லை ..
இந்த தேடலின்
முடிவில்
நான் சிக்குவதில்லை ...!


------------------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Saturday, November 19, 2011

மேகம் ..!

வானமெனும் சுவரில்
வான்கோ,
டா வின்சி
வரைந்த ஓவியமா நீ ?






நிலவவள் நாணி
தன் முகம் புதைத்துக் கொள்ளும்
போர்வையா நீ?

சூரியன் வெயில் காலத்தில்
தன் முகம் துடைக்கும்
துண்டா நீ ?

சூரிய ஒளியை
சலித்தெடுக்கும்
சல்லடையா நீ?

காற்று வளி மண்டலத்தில்
விடப்படும்
கப்பலா நீ ?

இடி போட்ட
அரட்டலுக்கு பயந்து
கண்ணீர் சிந்துவாயா நீ ?

வான் வெளியில்
போடப்பட்ட
அழகிய தரைவிரிப்பா நீ ?

கார்கால நேரத்தில்
கருப்பு மை அப்பிக் கொள்வாயா நீ ?

வானமெனும் கட்டிலில்
போடப்பட்ட
அழகிய தரைவிரிப்பா நீ ?

வானமகள் காலையிலும்
மாலையிலும்
தன் வீட்டு வாசலில்
இடும் கோலமா நீ?

எவ்வளவு உயரத்தில் இருந்தாலும்
இருக்கும் இடம் தெரியாமல்
மறைந்து போவாய்
என மனிதன் உணர
கடவுள் எழுதிவைத்த தத்துவமா நீ ?




---------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Wednesday, November 16, 2011

என் மனதோடு ஒரு சிறு பயணம் ...!


என் வாழ்க்கை ஓட்டத்திற்கு ஏற்றார்போல்
என் பாதை ஓடினாலும் ,
என் மனம் மட்டும்
சில தருணங்களில்
எங்கோ தொலைந்து விடுகிறது ..

அப்படி சில தருணங்களின்
காட்சிகளில்
நான் இருப்பதால் ,
அந்த காட்சிகளில்
தொலைந்து போகிறேன் ..

என் மனம்
தொலைந்து போகும்
வேளையில் ,
தொலைந்த இடத்திலிருந்து
தெரிந்த இடத்திற்கு
தெரியாத திசை நோக்கி
என் மனதோடு ஒரு சிறு பயணம் ..

நான் அந்த பயணத்தில்
முன்னோக்கி நடக்க
நான் வந்த பாதை
என்னை நோக்கி
பின்னோக்கி நடக்கிறது ..
காலமோ
என்னை நோக்கி
பின்னோக்கி
வேகமாய் ஓடுகிறது ..
சில நேரம்
என்னையும் தாண்டி ஓடுகிறது ..

அது இட்டு சென்ற இடம்
என் மனதின் கூடம் ..
எழுவதும்
கரை தொட முனைவதும்..
தோற்றாலும் பின்
கடல் வந்து எழும் அலையாக உள்ளது
என் மனம் ..

அந்த பயணப்படும்
வழியெங்கும்
தன்னுள் இருக்கும் நினைவுகளை
பதியம் போடுகிறது மனது ..

அந்த பதியம் விளைந்தால்
மனதிலே பூக்கள் பூக்கும் ..
அந்த பூக்களின் வாசமே
தொலைந்து போன பாதையை
மீட்டு தரும் ..

பதியம் கருகினால்
மனதில் ரணமான
காயங்களை மீண்டும் குத்திக்காட்டி,
அந்த வலியே
தொலைந்து போன பாதையை
மீட்டு தரும் ..

இப்படியாக
எப்படியோ
அந்த பயணத்திலிருந்து
மீண்டும்
மீண்டு வந்தேன் ..

இப்படி
முன்பின் தெரியாத நபரை
பார்த்து சிரிக்கும் சிறு குழந்தையாகவே
முன் நடந்த சம்பவம் எண்ணி
சம்பந்தமின்றி
சிலநேரம் சிரிக்கிறேன்,
மனதோடு பயணமாகிறேன் ..

அதில் ஒளிந்திருக்கும்
அழகையும்
ரணத்தையும்
ரசிக்கிறேன் ...

இப்போது இல்லை
எப்போது நினைத்தாலும்
வியப்பாக உள்ளது
இந்த பயணம் ..


-----------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Monday, November 14, 2011

பால்..!



தெருவோரம் பாலுக்காக அழும்
அநாதை குழந்தை,
அரசமரத்தடியில்
பால் குடிக்கும் பிள்ளையார்
இப்படிக்கு- சமுதாயம்



------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Sunday, November 13, 2011

வாசல் ...!





வீட்டின்
முற்புறத்தில் நின்று
தனியே ஆடுகிறது
முன்னும் பின்னும்
வாசல் கதவு ..

சில நேரம்
பிஞ்சுகளின்
துணையோடும் ..

முன்னும்
பின்னும் ஆடுகையில்
அவையிடும் சத்தங்களை
முதுமையின்
கதறல்களாக கொள்ளவா ?

தனிமையின் துயரம் சொல்லும்
அழுகையாக கொள்ளவா ?

பிஞ்சுகளின் கைபிடித்து
விளையாடிய மகிழ்ச்சி சொல்லும்
சிரிப்பாக கொள்ளவா ?

Friday, November 11, 2011

நொடிகள் ...!



நேரங்கள் உடைந்து
உதிர்ந்து சிதறி,
காலத்தின்
கடைசி படிக்கட்டில்
தொங்கிக்கொண்டு இருக்கும் நொடிகள்,
பல நேரம்
நொடிகளாக கடப்பதில்லை ,
யுகங்களாக கனக்கிறது ..

காலமெனும் அணைக்கட்டில்
வாழ்கையெனும் மதகுகளின்
திறவுகளுக்கு ஏற்பவே
நொடிகள் யாவும்
ஒவ்வொரு நொடியும்
பயணமாகிறது ..

வாழ்கையின் முற்புறத்தில் ,
காலம் வைக்கும்
ஒவ்வொரு புள்ளியிலும்
கோலமிடுகிறது நொடிகள் ..

காலத்தின் கடைசிபிள்ளையான
நொடிகளின்
பிள்ளைகளின்
பிள்ளைகள் என
காலத்தின் வாரிசுகளின்
எண்ணிக்கையை கண்டவர்
எவரும் இலர் ..!

------------------------------------------------------------------------------------

நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.



Thursday, November 10, 2011

மனிதன் உயர்திணையா ? அஃறினை?

மனிதன் உயர்திணையா ? அஃறினை?-ஒரு சிறப்பு பட்டிமன்றம் ...



நடுவர் -கடவுள்

பேச்சாளர்கள் - மனிதன் ,பாம்பு ,யானை ,நாய் ,பூனை ,முதலை ,பறவை ,குரங்கு .

கடவுள் :
என் இனிய உயிரினங்களே ..
நான் படைத்த உயிரினங்களில் மனதன் மட்டும் உயர்திணை என்ற உயர்ந்த விதியை குடுத்தேன் ...
ஆனால் இன்று மனிதனே அதை கெடுத்தான்..
விவாத மேடையில் மனிதன் உயர்திணையா ? அஃறினை? என்ற கேள்வியை நிறுத்தி விட்டான் ..
முதலில் பேச வருபவர் மனிதன் ..

மனிதன் :
மனிதன் ஏன் உயர்திணை தெரியுமா ?
ஏனென்றால் அவன் மனிதன் .
புதிதாய் படைப்பவன் ..
பலவற்றை கண்டுபிடிப்பவன் ..
சிந்திப்பவன் ..
சிரிப்பவன் ..
உயிரியல் குடும்பத்தில் சிறப்பவன்..
இப்படி பல சிறப்புடன் இருப்பவன் ..
அதனால் அவன் உயர்திணை ..

கடவுள் :
விளக்கம் அருமை . அடுத்து குரங்கு .

குரங்கு :
பூக்களை கூட கொலை செய்து
அதில் வாசம் தேடும் கூட்டம் நீங்கள் ..
சொன்னபடி கேளாமல்
ஒழுக்கத்தோடு வாழாமல் ,
மனம் மாறி மனம் மாறும் ,
குணம் மாறி குணம் மாறும்
கட்சி விட்டு கட்சி தாவும்
என்னைப் போல் குரங்கு நீங்கள் ..

கடவுள் :
ஆஹா !பிரமாதம் ..அடுத்து பாம்பு ..

பாம்பு :
மனம் இழந்து
குணம் இழந்து
பணம் தேடும்
பிணம் நீங்கள் ..
தன் இனம் அழித்து
அதில் வெற்றியை ருசித்து
உணவுக்காக
எங்கள் இனத்தையே உண்ணும்
என்னைப் போல் பாம்பு நீங்கள் ..

கடவுள் : மேல் சொன்னது உண்மை தான் ..அடுத்து யானை ..

யானை :
சுயநலப் பேய் பிடித்தவனுக்கு
அடிக்கடி மதமும் பிடித்து போகும் ..
மதம் கொண்டால்
மனதை புதைப்பான்
பிறரையும் அழிப்பான்
என்னை போல் ..

கடவுள் :இது நிதர்சன உண்மை .. அடுத்து நாய் ..

நாய்:
நான் கூட நன்றியோடிருக்க
மனிதன் செய்நன்றி கொன்றான்
பணத்திற்காக பன்றியை போல்
சாக்கடையில் பிரண்டான்..
பருவத்தில் ,
பிற பலரின் பின்னல்
என்னைப் போல்
நாயாக அலைகிறான் ..!

கடவுள் : ஹா ஹா ..அடுத்து பூனை

பூனை :
மணமான புதிதில்
தன் துணையினை
சுத்தி சுத்தி வரும்போது
பால் கண்ட பூனை யாகிறான் ..

கடவுள் : உண்மை தான் ..அடுத்து பறவை ..

பறவை:
பெற்று வளர்த்த
தாய் தந்தையை மறக்கும் போது ..
சிறகு முளைத்து
என்னைப் போல்
கூட்டை விட்டு பறக்கும் போது
பறவையாகிறான்..
பெற்ற குழந்தையை ,
குப்பைதொட்டியில் வீசும்போது ,
தன் முட்டை
அடுத்தவர் கூட்டில் இடும்
குயிலாகிறான் ...

கடவுள் : உண்மை தான் ..அடுத்து முதலை ..

முதலை:
பணத்திற்காக
பிணத்திடம் கூட திருடி
பிணம் தின்னும் ஓநாயயே ..
தன் காரியம் சாதிக்க
பிறரிடம் என்னைப் போல்
முதலைக் கண்ணீர் வடிக்கிறாயே ...

கடவுள் :
அனைத்து விளக்கமும் உண்மை ,
மனிதனின் விளக்கம் தவிர ..
மனிதன் பல மிருகங்களின் கலவை ..
அதனால்
இலக்கணத்தில் ஒரு மாற்றம் தேவை ,
மனிதன்
உயர்திணை இல்லை
அஃறினை..


------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Tuesday, November 8, 2011

எங்களை தெரியுமா ?

எங்களை தெரியுமா ?
கணிப்பொறியோடு விளையாடி
அதனோடு உறவாடி
வேலை செய்யும் வித்தைக்காரர்கள் நாங்கள் ..

பொய் பேசும் மனிதன் பார்த்து வியாபாரம்
செய்பவர்கள் இல்லை நாங்கள் ..
செய்ததை சொல்லும்
கிளிபிள்ளையாம் கணினி பார்த்து
வியாபாரம் செய்பவர்கள் நாங்கள்..

கைநிறைய சம்பளம் வாங்கும்
நவயுக Pharaoh இன் அடிமைகள் நாங்கள் ...

உடல் உழைப்பை இழந்ததால் ,
மன உளைச்சலை
இலவசமாக பெற்றவர்கள் நாங்கள் ..

இப்படி வேலை செய்து
கண்களுக்கும்
எங்கள் கண்ணடிக்கும்
திருமணம் செய்து வைப்பவர்கள் நாங்கள் ...

8 மணி நேரம்
உடலில் பாரம் சுமக்கும்
வேலைகாரர்கள் இல்லை நாங்கள்..
24 மணிநேரமும்
மூலையில் வேலை சுமக்கும்
கூலிகள் நாங்கள் ...

A/C அறையில்
எப்போதும்
ஒரு சூடான மனநிலையோடு
வேலை செய்பவர்கள் நாங்கள் ..

குடும்பங்களை மறந்து
வேலை செய்யும்
வண்ண உடை அணிந்த
கணினியில் உலகம் தேடும்
புதிய வகை சந்நியாசி நாங்கள்..

ஒட்டு போடும் நாளில் கூட
எங்கிருந்தோ எங்கள் சம்பள நோட்டு போடும்
அந்நிய துரைகளுக்கு
விசுவாசமாக இருந்து கொண்டு ,
நாட்டில் நடக்கும் ஊழல் பற்றி பேசும்
தேசியவாதிகள் நாங்கள்..

வேலையில்
மூளையில் பளு சுமக்கும்
வேலைகாரர்கள் நாங்கள்..

வேடந்தாங்கல் பறவையாக
அவ்வப்போது குடும்ப கூட்டுக்குள்
வந்து செல்லுபவர்கள் நாங்கள்..

இன்னும் தெரியவில்லையா ?



மனதில் வன்மம்
கூட்டும் வேலைப்பளுவில் இருக்கும்
மென்பொருள் காரர்கள் நாங்கள்..


------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Sunday, November 6, 2011

மழை ...!

மேகம்
மண்ணில்
இட்ட முத்தங்களா ..



மேகங்களின்
மோகங்களின்
பிள்ளையா?

பூங்காற்று
போட்ட
மாறுவேடமா?

வானம்
பூமிக்கு போடும்
அட்சதையா ?
இல்லை
மானுடம்
கண்டு
வானம் காரி
உமிழும் எச்சிலா ?

பூமிக்கு
மேகம் தரும்
பரிசா ?

மேகம் பூமியில்
உயிர்கள் கருத்தரிக்க
தந்த விந்தோ ?

எங்கள் தாகத்திற்கு
வானம்
மேகத்திடம் பட்ட
கடனா ?

மேகங்கள்
தற்கொலை செய்து
பூமியின் மீது
விழுந்தனவா ?
இல்லை
பூமியின்
அழகை கண்டு
மேகம்
மயங்கி விழுந்தனவா ?

பருவ காற்று
பூமிக்கு பாடும்
வசந்த தாலாட்டா?

கருமை இட்ட
மேக விழிகளில் இருந்து
வழியும் கண்ணீரா ?

இடியின் அதட்டலுக்கு
பயந்து மேகம்
சிந்திய கண்ணீரா?

எதுவோ ,
கிழிந்துவிட்டது எனது குடை
இனி நான் அழகாய் ரசிக்கலாம்
மழை ...!


------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Saturday, November 5, 2011

எனக்கு மேல் ஒருவன் ...!




கொலை செய்துவிட்டு
உறங்க சென்றேன்..
இரவில்,
என்னை கடித்தன
கொசுக்கள்...




------------------------------------------------------------------------------------

நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Friday, November 4, 2011

அனாதை எழுத்துக்கள் ….!



பல எழுத்துக்கள் இங்கே
படிக்க யாரும் இன்றி
அனாதையாக கிடக்கிறது ,
பிறந்த குழந்தையை,
தூக்கி சீராட்ட யாரும் இன்றி
அனாதையாய் இருப்பது போல் ...

எழுத்தாளர்கள் அனைவரும்
குயில்களே ...
காக்கை கூட்டில் முட்டையிட்டு
செல்லும் குயில்கலாகவே ,
அவர்கள் எழுத்துக்கள் யாவும்
வலைகூட்டிலும்
புத்தககூட்டிலும்
அனாதையாய்
விட்டுவிட்டு செல்லப்படுகிறது ..

தெருவில் அனாதையாய்
விடப்பட்ட குழந்தையை
கண்டும் காணாமல் போவது போல் ,
பல நேரம்
இந்த அனாதை எழுத்துக்களும்
கண்டும் காணாமல்
விட்டு செல்லப்படுகிறது ..

அனாதை எழுத்துகளுக்கு
ஆதரவு அளித்து
வாழ்வளிப்பதும்
தங்கள் நெஞ்சில்
தஞ்சம் அளிப்பதும்
வாசகர்களே ...

அனாதை எழுத்துக்களின்
வாழ்வும் ,
அனாதை குழந்தைகளின்
வாழ்வும் ஒன்றாகவே
இருக்கிறது ...
தன்னை ஏற்றுகொண்ட
நெஞ்சங்களின் அளவை பொறுத்தே
அவற்றின் வாழ்வும்
பிரகாசிக்கிறது ..






------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Monday, October 31, 2011

நிகழ்வுகள் ..!




யாரும் தொடவில்லை
யாரும் பறிக்கவில்லை
ஆயினும்
இலைகள் உதிரும் ...



------------------------------------------------------------------------------------

நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.



Sunday, October 30, 2011

சில நிகழ்வுகளின் தலைகீழ் விளைவுகளில் சில

சில நிகழ்வுகளின்
தலைகீழ் விளைவுகள் ,
அந்த நிகழ்வுகளின் தன்மையாக
நாம் நினைத்ததை
முன்னம் இருந்த நிலையிலிருந்து
தலைகீழாக மாற்றிவிடுகிறது..


சரியாக நாம் செய்வது
தவறாக போகும்வரை தெரியாது ,
நாம் செய்வது
சரியல்ல தவறு என்று ...

வீசும் காற்று
நம் மீது வந்து மோதும்வரை தெரியாது
வந்தது
பூங்காற்று அல்ல புயல் என்று ..

சொல்வதை செய்வதை சொல்லி ,
செய்யாமல் போகும் வரை தெரியாது ,
சொன்னது செய்யப்போகும் செயலல்ல சொல் என்று ...

சொன்னதை மட்டும் செய்தால்
சூழ்நிலையின் மாற்றம் மறந்தோமென தெரியாது
செயலின் பிள்ளை சூழ்நிலை பிறக்கும் வரை ..

கண்ணீர் சிந்தும் சில நேரம்
சிரிப்பு வந்து முட்டும் வரை
தெரியாது
கண்ணீரும் இனிக்கும் என்று ..

இப்படியாக
சில நிகழ்வுகளின்
தலைகீழ் விளைவுகளில்
சில இவை ...



---------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


மனதில் ஒட்டிய மனிதநேயம் ..!



என் வீட்டின்
மதில் சுவரில் ஒட்டிய
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியை கிழித்தேன்..
அது ஒரு உயிரின் இறப்பு செய்தி..
சுவரில் ஒட்டிய அளவு கூட
என மனதில் ஒட்ட மறுக்கிறது ...



------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.




Wednesday, October 26, 2011

காற்றுக்கும் ஒரு பெண்மையுண்டு ..!

காற்றுக்கும் ஒரு பெண்மையுண்டு,
ஒவ்வொரு பெண்ணிடமும் காற்றின் தன்மையுண்டு ..



பெண்மை ..
நீக்கமற நிறைந்த தெய்வத்தின் வடிவம் என்றால் ,
நீக்கமற நிறைந்த காற்றே ,
நீயும் பெண்தான் ..

பெண்ணே ,
சிரித்து பேசி வந்தாய் ..
காற்றே
தென்றலாய் வீசி வந்தாய் ..

பெண்ணே ..
நீ படி தாண்டினால் வீடு தாங்காது ..
காற்றே ..
நீ புயலாய் மாறினால் நாடு தாங்காது ..

பெண்ணே ..
நீ மாலையிட்ட மணாளன் நின்றிருப்பான் ,
நீ சொன்னபடி எல்லாம் ஆடியிருப்பான் ..
காற்றே ,
நீ மாலையிட்ட மரமும் நின்றிருக்கும் ,
நீ சொன்னபடி எல்லாம் ஆடியிருக்கும் ..

பெண்ணே ..
ஒரு உயிரின் பிறப்பு பெண்ணிலிருந்து ..
காற்றே ..
ஒரு பூவின் பிறப்பு உன்னிலிருந்து ..

காற்றே ..
நிலவாவது அவள் முகம் காட்டினால் ..
நீ மட்டும் ஏன் வானத்தின் பின் ஒளிந்துகொண்டு ,
உன் இருப்பை மட்டும் உணரவைக்கிறாய் ?

நீ நிலவை விட அவ்வளவு அழகா ?
உன் முகத்தை மட்டும் காட்டினாலே
மானுடம் காதலில் சாகுமென மறைந்திருக்கிறாயோ??







------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.





Monday, October 24, 2011

மரத்துப்போன உணர்ச்சி என ஓர் உணர்ச்சி ..!

தவறின் புள்ளியில் ஆரம்பித்த
அந்த உணர்ச்சியின் பயணம்
புள்ளியின்
மையத்தின்
நேரான கோட்டில்
வெளியில் இருந்து
உள்ளாக
பயணித்து கொண்டிருகிறது ..



சிலவற்றை மறந்து
போனதாலும் ,
சிலர் சிலவற்றை மறந்து
போனதாலும்
அந்த உணர்ச்சி
இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது ..

காற்றின் நெளிவு சுளிவுகள் இசையாவதின்
தலை கீழ் நிகழ்வு போல ,
சில அழகிய உணர்சிகளின் மோசமான பயணங்கள்
இந்த விளைவிற்கு
வித்திட்டது ..

மரணித்து போய்,
உயிர் மட்டும் மிச்சமாக
சில சம்பவங்களின் எச்சமாக
இருக்கும் உடல்களில்
இந்த உணர்ச்சி வெளிப்படையாகவே
வெளிபடுகிறது ,
வெளிச்சம் தொலைந்து போன இடத்தில்
பிரகாசமாக தெரியும்
இருளை போல்..

மனம் என்ற ஒன்று
மனிதனிடமிருந்து தொலைந்து போனதால் ,
மரத்துப்போன உணர்ச்சி தனக்கான
நிரந்தர இடத்தை மனிதனிடம் தேடிக்கொண்டது .


------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Sunday, October 23, 2011

கனவு தேவதை ..!


அன்றொரு நாள் இரவில் ,
தூக்கம் இழந்தேன் .
தனியே எழுந்தேன் .
மேலே நடந்தேன் .
வானில் பார்த்தேன் .
தரையில் அமர்ந்தேன் .

மேலே நட்சத்திரக் கூட்டம் ஜொலித்தது .
என் மனதை அது மிகவும் கவர்ந்தது .
கூட்டத்தில் ஒன்று மிகவும் பிரகாசித்தது .

பார்ப்பதற்கு என் அருகில் வருவது போல் இருந்தது .
பார்க்க பார்க்க என்
பார்வையை நெருங்கியது ..
கண்சிமிட்டி பார்கையில்
என் அருகில் வருவதுபோல் இருந்தது .

தேவதை ..!
தேவதை..!
தேகமெல்லாம் தங்கமாய்
என் அருகில் ஒரு தேவதை ;

காட்சிகள் கண்களுக்கு மெய்ப்படவில்லை .
மனமும் ஏனோ பயப்படவில்லை .
சிறிது நேரம் உறைந்து போனேன் ,
அவள் அழகை ரசிக்கையில் .

என் கருமணிகளும்
என் கண்களுக்குள்
சிறு குழந்தையென துள்ளி குதித்து விளையாடுகிறது
அவள் அழகை ரசிக்கையில் ..

கரும் பாறையை தாண்டி விழும் அருவியாய் ,
அவள் கூந்தலும் அவள் சூடிய பூவும்.
மஞ்சள் நிலவாய் அவள் முகம் .
அதில் மயிலிறகாய் அவள் புருவம் .
அதன் கீழே பாலில் மிதக்கும் கருந்திராட்சை போல்
அவள் கண்கள் ..
பூவிதழ்களிலும் மெல்லிய ,
ஆண்களின் ஆசைகளை தூண்டும் காம ரேகை ஓடும்
செவ்விதழ் ..
மூங்கில் போன்ற வளைந்த அவள் தேகம் .
மூளை கிறங்கடிக்கும் ,
அழகிய வாழைத் தண்டு போன்ற கால்கள் ..
தாமரை போன்ற சிவந்த அவள் பாதம் ..

மெய் மறந்த வேளையில்
கல்யாணி ராகம் கேட்டேன்
ஆம் தேவதை சிரித்தாள்..

நிரம்பி இருக்கும் அணையைத் தாண்டி
வரமுடியாத நதி நீரைப்போல் ,
அவளை கண்டதும்
தொண்டைக்குழியில் சிக்கிய வார்த்தைகள்
வெளிவரவில்லை ..

யாழினும் இனிய இசை
அன்று தான் நான் கேட்டேன்
ஆம். தேவதை பேசினாள் ..

"என்ன பார்க்கிறாய் ?",
இது தேவதை பேசிய முதல் வார்த்தை ..

"ஒன்றுமில்லை.." என்றேன் .
பின் மௌனத்தை புன்னகைத்தேன் ..

திடீரென ,
"என்னை முத்தமிடு " என்றாள்.

முக்கனியும் வந்து என்னை தின்றுவிடு என்பது போல் இருந்தது
அவள் சொன்ன அந்த வார்த்தை ..
ஆனால் ,
மனதில் ஒரு பயம் .
உணர்வில் ஒரு தயக்கம் .

பின் ,
பயத்தை கலைந்தேன்.
தயக்கம் இழந்தேன் .
அவள் அருகில் சென்றேன் .

அவள் முகத்தை என் கையோடு எடுத்தேன் .
நிலவை நான் கையில் தொட்டேன்.
ஆம் , நிலவை நான் கையில் தொட்டேன் .

பின் அவள் முகத்தோடு என் முகத்தை இணைத்தேன் .
"ஐயோ !",என ஒரு சத்தம் .
"டேய் எருமை மாடு ", அதை தொடர்ந்து .
என் தமையனின் குரல் அது .

அப்போது உணர்ந்தேன் ,
இதுவரை நான் கண்டது கனவு ..






------------------------------------------------------------------------------------------------
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Friday, October 21, 2011

கண்ணீரின் எழுத்துக்கள் ..!



சில எழுத்துக்கள்
படித்தாலே
புரிந்துவிடும்
அவை கண்ணீருக்கு
சொந்தமென ..

மனித உணர்ச்சியால்
உண்டான கிளர்ச்சியால்
உண்டான கண்ணீர் ,
சில நேரம்
எழுத்துக்கள் ஆகலாம் ..

கண்ணீரின் எழுத்துக்கள்
எப்போதும்
மகிழ்ச்சியின் ஒளியில்
தெரிவதில்லை ..

அவை யாவும்
எப்போதும்
சோகத்தின் நிழல் படிந்தே
கிடக்கிறது ..

உணர்ச்சியின்
குறைமாத பிரசவமாகவே
வரும் கண்ணீரின்
நிறைமாத பிரசவமே
கண்ணீரின் எழுத்துக்கள் ..

இப்படி
எழுத்துகள் ஆகும்
கண்ணீரின் ஈரம் ,
எழுத்துக்களில் தெரிவதைவிட
உணர்ச்சியில் படர்வதே அதிகம் ..

அத்தகைய எழுத்துக்களை
படிக்கும் ஒவ்வொரு நொடியும் ,
அந்த எழுத்துக்களுக்கு
சொந்தமான கண்ணீரின் ஈரம்
நெஞ்சில் பிசுபிசுத்து
கொண்டிருகிறது ..



Wednesday, October 19, 2011

தவறான கவிதை ..!


ஒரு தவறான கவிதை எழுத எண்ணினேன் ,
ஒரு நாள் தவறாக ..
எதைப்பற்றி சரியாக
தவறாக எழுத முடியும் என
யோசித்தேன் ...
பின்பு தெரிந்தது
நான் தவறாக யோசித்தது
சரியானது என ...
இப்போது சொல்லுங்கள்
இதுதானே மிகச்சிறந்த
தவறான கவிதை ...



பூமியை வாழவிடு ....!




மானுடமே,
நீ மறந்து போகிறாய் ..!
தாயின்
கருவறையில் இருந்து கொண்டே
நீ கருவறையை சிதைக்கிறாய் ..

கருவே
கருவறையை
சிதைக்கும் கொடுமை இங்கே நடக்கிறது ..
என்றைக்கும்
பிள்ளைமனம் கல்லாக கிடக்கிறது ...

தலைசுற்றிக்கிடக்கும்
பூமியின்
தலையெடுக்கப் பார்க்கிறாய் ..

பூமியை அட்டையாய்
உறிஞ்சுகிறாய் ,
நீருக்கும்
கச்சாவுக்கும் ..

புகை பிடிக்கும்
தொழிற்சாலைகள் ,
பூமிக்கு புற்றுநோயாம்
ஓசானில் ஓட்டை ..

கடவுளை அளக்க
அணுவை பிளந்தான்
அணுகுண்டின் பேரழிவு ..

நதிநீர் கொண்டு
வளர்த்த பயிர் மறைந்து
அதில் மணல் கொண்டு
விதைக்கிறாய் கட்டிடம் ..

உன்சுயநலத் திடலில் ,
பூமிப்பந்தை
பந்தாக
பந்தாடுகிறாய் ..

வான் மழையும்
அமிலத்துளியாய்
மாறிப்போனது ...

மரத்தை வெட்டிவிட்டு
குளிர் காற்று பெட்டியில் வாங்கி
வீட்டிற்குள் மாட்டப்படுகிறது ..
வளிமண்டல காற்றிலும்
நஞ்சு ஏற்றப்படுகிறது ..

பூமியை சூடாக்கி
துருவங்களின்
உருவங்களை மாற்றி
வாட்டி எடுக்கப்படுகிறது ..

உயிரியல் கூட்டுக்குடும்பத்தில் ,
தனியாக சுயநலம் ஆட்டம் போடும்
மானுடமே ,
பூமி உன் குடும்ப சொத்தல்ல ..
அது பொது சொத்து ..

உன் தலைமுறைக்கு மட்டும் அல்ல ....
இனி வாழும் தலைமுறைக்கும் ..

நீ வாழு ,
பூமியை வாழவிடு ..

மானுடமே,
நீ மறந்து போகிறாய் ,
தாயின் கருவறையில் இருந்து கொண்டே
கருவறையை சிதைக்கிறாய் .. !


Monday, October 17, 2011

நிலைத்துக்கொண்டிருக்கும் மாறுதல்.!


மாற்றத்தின் மாறுதலை
மாற்றிவைத்து
அதை நிலைக்க வைக்க
நினைக்கிறேன் ..

அது தன் நிலையில்
நிலைத்துக்கொண்டு இருக்கிறது ,
ஆனால்
எப்போதும் மாறுகிறது ..

எப்போதும் மாறுகிறது ,
ஆனால்
தன் நிலையில் நிலைக்கிறது ..






Sunday, October 16, 2011

மறுமணம்..!



என் விதவை காகிதங்களுக்கு
மறுமணம் அளிக்கிறேன்..
என் எழுத்துக்களால்,
கவிதைகளால்…!




Saturday, October 15, 2011

அழுகைக்கு பிறந்த சிரிப்பு …!



மகனே,
நீ பிறக்கையிலே
உனது அழுகைக்கு
பிறக்கிறது..
எனது சிரிப்பு…!





கையேந்தும் தர்மங்கள் ..!

சாலையோரம்
கோவில் வாசலில் ,
மின்சார இரயிலில்
என அணைத்து இடங்களிலும்
தர்மம் கையேந்தி நிற்கிறது ..


மின்சார இரயிலில்
இரயில் சத்தத்தையும் தாண்டி
வறுமையின் சத்தம் வருகிறது..

சில்லறையோசையில் கனத்த குரலில் பாடும் ,
குருட்டு பிச்சைகாரனிடமிருந்து ..

காதுகளில் பொத்தப்பட்ட
பாட்டு பொட்டியின்
சத்தத்திடம்,
வறுமையின் சத்தம் தோற்றுவிடுகிறது ..
அங்கு நம் கண்களும் குருடாகிறது ,
மனது சிறைப்பட்டு
இருளில் அறைபட்டதால் ..

இங்கு தர்மம்
இருட்டில் விடப்படுகிறது ..

நடைபாதையில் கைபேசியோடு
பேசிக்கொண்டு நடக்கையில்
ஒருகைபிடித்து
யாசகம் கேட்கிறாள் சிறுமி ,
ஒருவேளை உணவாகும் என்ற
நம்பிக்கையில் ..

அந்த பிஞ்சு கைகளும்
தட்டிவிடப்படுகிறது ,
மனதில்
சுயநலம் கோட்டைகட்டிவிட்டதால்..

இங்கு தர்மம்
கைவிடப்படுகிறது ..

சுரங்கப்பாதையில் ,
பிச்சைகாரன் மடியில்
உறங்குகிறது குழந்தை ..
பால்குடி மறவா பிஞ்சுக்கு
போதை நெடியும் ஏற்றப்படுகிறது ..

உறக்கத்தில் இருக்கும்
குழந்தை என்ன கனா காண்கிறது?
உறக்கத்தில் இருக்கும்
தன் வாழ்வு விழித்துக்கொள்கிறது
என்றா ?

இங்கு தர்மம்
கனா காண்கிறது ..

கோயில் வாசலில்
கால் ஊனமான
ஒரு பிச்சைகாரனிடம் இருந்து
TASMAC குடிமகனால்
சில்லறை பிடுங்கிகொள்ளப்படுகிறது ..

இங்கு தர்மம்
கொள்ளையடிக்கபடுகிறது..

நள்ளிரவில்
ஒவ்வொரு பிச்சைகாரனிடமிருந்தும்
சில்லறைகள் எடுக்கப்பட்டு
உணவு பொட்டலங்கள்
போடப்படுகிறது ..

இங்கு
இவை அனைத்திற்கும்
முத்தாய் வருகிறது ,
இங்கு தர்மம்
வியாபாரமாக்கப் படுகிறது ..

Thursday, October 13, 2011

நிழல்கள் ..!

எதிர்படும் இடங்களில்
என் நிழல்கள் பிறக்கிறது
ஒளிகளிடம்..


என் மீது மோதி
சிதறிய
வெளிச்சம்
என்னை கடந்து சென்று கொண்டிருகிறது ..

ஒளி முட்டியதில்
நான் விழுந்து விடுகிறேன்
நிழலாக ...

வெளிச்சம் கொண்ட
ஒளி என்மீது மோதியதில்
நான் இருள் கொண்ட நிழலுக்குள்
விழுகிறேன்...

ஒளி என்னை
வென்று வீழ்த்திவிட்டு
என்னை கடந்து
சென்று கொண்டிருக்கிறது...


Wednesday, October 12, 2011

பேனாவிலிருந்து வெளிவர மறுத்த வார்த்தைகள் ..!

எழுத்தொளி தந்து
கரைந்தொளிந்து ,
மனிதன் மனதின்
எண்ண ஓட்டத்தை
காகிதச்சுவரில்
ஒட்டிவிடும் மந்திரக்கோல்
பேனா ...!




சில நேரம்
மந்திரகோல்
செயல் இழந்து போகும் ..

மந்திரக்கோளையே
மந்திரம் செய்யும்
வித்தைக்காரன்
சூழ்நிலை ..

இறந்து போன தாய் ;
செய்தி சொல்ல கடிதம்
எழுதும் பொழுதும் ..

படிக்காத தேர்வு ;
தேர்வறையில்
கேள்வியின்
பதிலை எழுத
முயலும் பொழுதும் ..

யுத்தத்தின் முடிவு ;
எதிரியிடம்
தோல்வியை
ஒப்புக்கொண்டு
கையொப்பம் இடும் பொழுதும் ..!

சொல்லாமல் போன காதல் ;
தோழியின் திருமணத்தில்
வாழ்த்து மடலில்
வாழ்த்தும் பொழுதும் ...!

அவசரப்பிரிவில்
நேசத்திற்குரியவர் ;
மருத்துவ மனை
அவசர சிகிச்சைக்காக
கையொப்பம் போடும்
பொழுதும் ..!

சில நேரம்
வார்த்தைகள்
எண்ணத்தோடு
சண்டையிடும் பொழுதும்
பேனாவிலிருந்து
வெளிவர மறுத்தன
வார்த்தைகள் ...!



Monday, October 10, 2011

நெய்வேத்யம் ..!

விநாயகர் சதுர்த்தியன்று
பிள்ளையாருக்கு
படைக்கப்பட்ட கொழுக்கட்டையை
பூசை செய்யும் முன் எடுத்து உண்டான்
ஐந்து வயது சிறுவன் ..


சிறு பிள்ளை
உண்டதற்காக பிள்ளையார்
கோபப்படவில்லை..

அந்த பிள்ளையின் தாய்
கோபப்பட்டாள்..

பிள்ளையாருக்கு பதிலாக
தன் பிள்ளைக்கு பூசை செய்துகொண்டிருந்தாள் ..

அந்த பூசையை பார்த்த பிள்ளையார் ,
அரண்டு போய்
கொழுக்கட்டையையே பார்த்துகொண்டு இருந்தார் ...!

Sunday, October 9, 2011

சிசு கொலை ..

நிறை மாத கர்ப்பிணி
பூவின் பிரசவக்காலம்
தினந்தோறும் காலையில்
தந்தை காற்றின் உதவியுடன்
பிரசவிக்கிறாள்
பூ ,
தன் பிள்ளையான
வாசத்தை பூமிக்கு ...


பிறந்தவுடன் கையேடு அழைத்து செல்கிறது
தன் வாசப்பிள்ளையை ,
காற்று ஊரெங்கும் ...

ஆனால் ,
ஊருக்குள் அரக்கன் இருக்கிறான்
அவன்
புகையாக
காற்றின் பகையாக
இருக்கிறான் ...

செய்தியறிந்த காற்று ,
செய்வதறியாது திகைத்தது...

தன் பிள்ளை வாசத்தோடு
அங்கும் இங்கும் அலைந்தது ...

காற்றையும்
வாசத்தையும்
பார்த்த பகைவன் ,
புகையாக மாறி கொலை செய்தான் ...

வாசம் இறந்து கிடந்தது ..
தந்தை காற்று ,
ஓவென கரைந்து அழுது வீசியது ..

இப்படியாக
பிரசவமும்
பச்சிளம் குழந்தை வாசத்தின் மரணமும்
தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது ..

Saturday, October 8, 2011

கலங்காத கண்கள்..!

கலங்காத கண்கள்
உண்மை பலசாலி ...
மனதிற்கு
எவ்வளவு வலி வந்தாலும்
கண்ணீரின்,
பாரத்தை விடாமல் சுமக்கும் ..



மனதின் உண்மை காதலன்
கண்கள் தான் ..
காயம் மனதிற்கு
கண்ணீர் பாரம் சுமப்பது கண்கள் அல்லவா ..

தூசி பட்டு
கலங்கும் கண்களை விட ,
காட்சி பட்டு
கலங்க துடிக்கும்
கண்களின் வலி அதிகம் ..

வலிவந்து ,
பிரசவிக்காத தாயின் பாரம்தான்
இந்த கண்களுக்கும் இப்போது ,
வெளிச்சதில்
தெரியாது கூட
இருட்டில் தெரியும் சில நேரம்
-நட்சத்திரம் போல் ..

பொய் பேசும்
வாய் போலில்லாமல்
உண்மை பேசும்
கண்கள் ...

அந்த கலங்காத கண்களின்
கண்ணீர் யாவும் ,
யாரோ ஒருவரின் விரல் பிடித்து
உலகில் நடை போடவே
காத்திருகிறது கண்களுக்குள்..









Wednesday, October 5, 2011

மெழுகுவத்தி ...!

மழைக்காலத்தில் ,
மின்சாரம் துயில் கொள்ளும் நேரத்தில் ,
இருட்டில்
குத்துவிளக்கிற்கு சக்களத்தியாக
வந்து வீடெங்கும் வாழும்
மெழுகுவத்தி நீ ..

தேவாலயங்களில்
எங்கள் பிரத்தனைக்கு
ஒளி கொடுக்கும் நீ ,
கோவிலில் மட்டும்
அன்னியப்பட்டு போனாய் ..

அன்னியமாகி போனாலும்
எங்கள் வீட்டில்
ஒளி காட்டுகிறாய் ,
வழி காட்டுகிறாய் ...

தனிமையில் உருகி
திரியில் கருகி
யாரையோ எண்ணி
கண்ணீர் வடிக்கிறாய் ..

உன்னை அழவைத்து
உருகவைத்து
கரையவைத்து
வெளிச்சம் காண்கிறோம்
தேவனிடமும் கேட்கிறோம்
பாவ மன்னிப்பு ..

தேவன் மன்னிப்பாரா?


இந்த பாவ மன்னிப்பை..






Tuesday, October 4, 2011

எதிர்மறை வினை ..!

பலர் நோய்களில் சிலரின்
ஆரோக்யமான வாழ்கை
மருத்துவர் -நோயாளி
சிலர் சோம்பலில்
பலரது சுறுசுறுப்பான வாழ்கை
- சலவை தொழிலாளி



பலி...!



பொழுது விடிந்ததில் ,
அந்த சேவலுக்கும்
சூரியனுக்கும்
சண்டையாம் ..
நான் எழுந்ததால்
நீ கொக்கரிதாய்
என சூரியனும்,
நான் கொகக்கரித்ததால்
நீ எழுந்தாய்
என்று மாறி மாறி
மோதிக்கொண்டன ..
அதன் பின் சேவலோ
சண்டையை விட்டு விட்டு
கோவில் கூட்டத்தோடு
செல்ல தயார் ஆனது ..
அந்த சேவல் இங்கு வந்த
நாள் முதல்,
தான் கடவுளுக்கு
என மமதையோடு
அலைந்து வந்தது ...
பொழுது போனால் உணவு ,
பாதுகாப்பான உணர்வு ,
இப்படி வாழ்ந்த சேவலுக்கு தெரியாது
இன்று தான் சூரியனோடு தனக்கு
கடைசி சண்டை என ..
சேவல் மமதை கூடியது ,
தான் கடவுளுக்காக என்பதை மறந்து
தான் கடவுள் என எண்ணியது ...
கடவுளை திருவிழா அன்று
காண போகிறோம் என்ன எண்ணி
தான் இறப்பதை மறந்தது ..
கோவில் செல்லும் புறப்பாட்டின்
தொடக்கமாக சகல மரியாதையுடன்
கொண்டுவரப்பட்டது
அந்த சேவல்..
தலை கீழாய் தொங்கவிடப்பட்ட போது ,
"பாத்து அது சாமிக்கு நேர்ந்தது ",
என ஒரு குறல்..
அந்த குறல் சேவலின் கர்வத்தை
மேலும் உயர்த்தியது ..
குங்குமம் இட்டு ,
பூச்சூடி,
மஞ்சள் நீராட்டி
என சகல மரியாதையும் சேவலுக்கு தொடர்ந்தது ..
அதன் பின் தொடர்ந்த
நிகழ்வில் புரிந்தது அந்த சேவலுக்கு தான் யார் என ..
மேலே தூக்கி
கீழே இறக்கப்பட்டது ,
அந்த கூர்மையான
பலி பீட வேலுக்குள்
சேவல் ..
மேல் தூக்கி
கீழ் இறக்கப்பட்டது
சேவலின் நிலைமையும் தான் ..
வேலுக்குள்
அகப்பட்ட சேவல்
வேதனையோடு
தான் நிலைமை எண்ணி இறந்தது ..
இறப்பதற்கு
சில நொடிகள் முன்புதான்
உணர்ந்தது ,
கடவுளுக்கு நேர்ந்தது
என்ற வார்த்தையின் உண்மை அர்த்தத்தை ..


Sunday, October 2, 2011

குருட்டு தர்மம் ..!



சில நேரங்களில்
குருட்டுப் பிச்சைகாரனிடம்
குருடனாக நடந்து கொள்கிறது
தர்மம் ..!

முரண்பாடு ..!



எதுகை இல்லை ,
மோனை இல்லை ,
புதுக்கவிதை
இலக்கணத்தின்
முரண்பாடு ...!

கண்ணீர் உண்டு
ஆனால் துக்கமில்லை ,
உணர்ச்சியின்
முரண்பாடு ...!

காக்கை கூட்டில்
முட்டையிடும் குயில் ,
தாய்மையின்
முரண்பாடு ...!

புண்ணிய நதியை
அசுத்தமாக்கும் மனிதன்
நம்பிக்கையின்
முரண்பாடு ..!

சாமியை மறந்து
ஆசாமியை வணங்கும்
மனிதன் பக்தியின்
முரண்பாடு ..!

நிகழ்காலம்
வரும்காலத்தின்
கடந்தகாலம் என்றால்
அது காலத்தின்
முரண்பாடு ..!

நட்பும் இல்லை
காதலும் இல்லை
எந்த உறவிது
பருவத்தின்
முரண்பாடு ...!

எழுத்து இல்லை ,
இலக்கணம் இல்லை ,
வார்த்தை இல்லை
விழி பேசும் மொழி ,
இது மொழியின்
முரண்பாடு ..!

வெளிச்சத்தில்
தொலைந்து போகும்
இருள்
வெளிச்சத்தின்
முரண்பாடு ...!

நினைக்காமல்
நினைக்க வைக்கும்
ஞாபகங்கள்
நினைவுகளின்
முரண்பாடு ...!

சொல்லாமல் புரியும்
வார்த்தை
பேச்சின்
முரண்பாடு ..!

முடிவில்லாமல்
முரண்படும் இந்த
முரண்பாடு
முரண்பாட்டின்
முரண்பாடு ...!

Sunday, September 4, 2011

காற்று தேடும் மேகங்கள் ..!


தான் கலைத்த மேகங்களை ,
தொலைந்து போனதாக எண்ணி
வானத்திடம்
கேட்டு கொண்டு இருக்கிறது
காற்று ஒவ்வொரு நாளும் ...!

காற்றால் கலைக்கப்பட்ட மேகங்கள் யாவும்
கைத்தவறி விழுந்து சிதறிய கண்ணாடியாக
உடைந்து போகிறது..!

உருமாற்றம் என்பது ,
முன்னம் இருந்த நிலை தொலைந்து போகுதல் என்றால்
மேகம் தொலைந்து போனது எனலாம் ...!

மேகம் கலைந்துபோகுதல் என்பது ,
தக்கனபிழைத்தல் என்றால்
காற்றின் தேடல் தவறு எனலாம் ..!

பெரிய வட்டத்தின்
சிறிய புள்ளி நேராக இருப்பதாக எண்ணி ,
நேராக போவதாக நினைத்து
வட்டமடிப்பது போல
காற்று
தான் கலைத்த மேகத்தை தேடிக்கொண்டிருக்கிறது ...!

சிறு குழந்தையின்
மழழை கேள்வியாகவே
காற்றின் கேள்வி வானத்திடம்
முன்வைக்கபடுகிறது ...!

இரவு பகல் என
எதுவும் பாராமல்
அதன் தேடலும் ,
கேள்வியும்
நீண்டு கொண்டே போகிறது ..!

பகலின் தொலைந்து போன
இரவின் இருளை வெளிச்சத்தில்
தேட முயற்சிப்பதைப்போல ,
காற்றின் தேடலும்
கேள்வியும் தொடர்கிறது ..!

Friday, September 2, 2011

வெப்பம் ..!


நான்
சில நேரம் கேட்டதுண்டு ,
காற்றிடம்
என்னை தீண்டாதே என்று ...!
குருதியே சுண்டிப்போக
உள்ளே புழுக்கம் ...!
உயிரே வெந்து போக
உள்ளே வெப்பம் ...!
வெப்பம் தணிக்க தேவை
குளிர் காற்று,
ஆனால்
இங்கு காற்று தூண்டிவிடுகிறது
வெப்பத்தின் அளவை ...!
காட்டு தீ வளர்க்கும்
காற்றை போல ...!
காயம் இல்லாமலே
உள்ளே வெப்பம் எரிகிறது ...!
வடுவே இல்லாமல்
உள்ளே வெந்து கிடக்கிறது ...!
மருந்தாய் இருக்கும் காற்று
இப்போது பாம்பின்
பருந்தாயிருக்கிறது..!
காற்றுக்கு
பயந்து போர்வைக்குள் குடியிருப்பு ..!
எல்லாம் இந்த காய்ச்சலின் வேலை தான் ..!
நான் சில நேரம் கேட்டதுண்டு
காற்றிடம்
என்னை தீண்டாதே என்று ...!

மயங்கிய விழிகள் !


இறுதிக்கு
ஒரு முடிவு
காத்திருந்தது
ஓட்டத்திற்கு
ஒரு ஓய்வாக ..!
சத்தமிட்ட
நாள் முதல்
ஓயாமல் துடித்தது
சற்று நிற்க
விழைந்தது...!
கண் விழித்த
நாள் முதல்
காட்சியின் பாரம் சுமந்து ,
உணர்ச்சியின் ஈரம் சுமந்த
கண்களும்
கேட்டது
விருப்ப ஓய்வு ..!
வாழ்க்கையை
காலோட்டத்துடனும்
காலத்தோட்டதுடனும்
விளையாடிய
விளையாட்டிற்கு
முடிவு வந்தது ...!
இது பயணத்தின்
தொடக்கமல்ல
பிறந்த நாள்முதலே
உறுதியான
இறுதி பயணத்தின்
தொடக்கம் ..!
சுற்றி
உற்றார்
உறவினர் ,
என் தண்ணீரிலிருந்து வந்த
சொத்து
கண்ணீரோடு கரைந்திருக்க ,
பல்லாண்டு
உடனிருந்த
தான் பாதி
அதன் மீதியை
விட்டுசெல்ல
துக்கத்துடன்
என் பாதி ..!
அப்போது முற்றாக
விழிகள் மூடும் நேரம்
கண்களுக்குள்
நாற்றாக வந்து நின்றது
அவள் அழகிய
பூமுகம் ..!
மூடிய விழிகள்
திறக்கவே இல்லை
அவள் அழகை கண்டு
மயங்கி ...!

நம்பிக்கை ..!



ஓடும் இரயிலில்
பொம்மை விற்கிறார்
பார்வை அற்றவர் ..!
அங்கே ஓடுவது ,
தண்டவாளம் மீது
இரயில் மட்டுமல்ல ..!
நம்பிக்கை மேல்
அவர் வாழ்கையும் தான்...!

மீன்களின் சிரிப்பு ..!


சேது சமுத்திரத்தின்
சாதுவான மீனவர்கள்
திசைமாறி கடக்கையிலே,
தினசரி தோட்டாவின்
முத்தம் ...!
சுருக்கு கயிற்றால்
இறுக்கி அணைப்பு !
மீன்களை விட
வதைபட்டு
பிடிபடும்
பாவப்பிறவிகள்..!
கடலில்
மீன்களின் கண்ணீராய்
எங்கள் கண்ணீரும்
கடலோடு
கரைந்து விடுகிறது ..!
புத்த தேசத்து
மக்களின்
கீழ்த்தரமான
புத்தியாலே
வதைபடுகிறோம் ,
கடற்கரையோர
கருவாடாய்
மிதிபடுகிறோம்..!
தினசரி
சிந்தும் இரத்தம்
கடலோடு
கரைந்து
மறைந்து விடுகிறது ...!
வலியால்
நாங்கள் கத்தும் கதறல்
காற்றில் மறைந்து விடுகிறது ..!
நாங்கள் பிடிக்காமல் விட்டுசென்ற
மீன்களும்
எங்களை பார்த்து
ஏளனமாய் சிரிக்கிறது..!

Wednesday, August 24, 2011

தெருவிளக்கு ...!


தெருவின் ஓரம்
ஒற்றையாய் நின்று கொண்டு
இருளின் இருளை
நிரப்ப முயலும்
தெரு விளக்கின் வெளிச்சத்தில்
இரவின் இருட்டு
முழுவதுமாய் மாயந்துவிடுவதில்லை ..!
தெருவிளக்கிளிருந்து சிதறிய
ஒளித்துகள்கள் யாவும்
இருளின் ஒவ்வொரு
புள்ளியின் மையத்திலும்
மோதி ஒரு சிறிய போர்
ஒன்றை நடத்துகிறது ...!
போரின் முடிவில்
ஒன்றையொன்று
முழுவதுமாக
வெற்றிக்கொள்வதில்லை...!
முழு வெற்றியும் இல்லாத
தோல்வியும் இல்லாத
முடிவில்லா
இப்போர்
ஒவ்வொரு இரவு முழுவதுமாக
நிகழ்ந்து கொண்டிருகிறது
எல்லா போரைப்போல்,
அமைதியை கலைத்துக்கொண்டு...!
இங்கே அமைதியை
கலைப்பது
இருளிடமிருந்து...!

மாற்றம் ..!


நான் மாற வேண்டும் என
எண்ணுகையில்
எதோ ஒன்று
என் எண்ணத்தை மாற்றி விடுகிறது
என்னை மாறவிடாமல் ...!
முயன்று
நான் மாறிய பொழுதுகளில்
மாறாமல் இருக்கும்
என் சூழ்நிலைகளையும்
என் நினைவுகளையும்
மாற்றுவதற்காக மட்டும்
நான் மாறாமல்
முயன்று கொண்டிருகிறேன்...!

Friday, April 22, 2011

கடல் மேல் அகதியின் பயணம்...!



நாங்கள் பிறப்பால் செய்த பாவம்
தமிழனாய் பிறந்தது ..!
நாங்கள் வாழ்வில் செய்த பாவம்
ஈழத்தில் வாழ்ந்தது ..!
பாவத்தின் சம்பளம் மரணம்
ஆனால் அதனினும் கொடிது ,
கடல் மேல் ஒரு அகதியின் பயணம் ...!

சிறகொடிந்த பறவை
மரம்விட்டு மரம் பறக்கும்
பயணம் இது...!
வான் மழையோடு போட்டி போடும்,
குண்டு மழையிலிருந்து பிழைத்து..!
உயிரை உடலோடு சேர்த்து பத்திரமாக அழைத்து ..!
வந்து கரை சேர்வது -மிகவும் கடிது..!
இதை கடந்தவனுக்கு மரணம் கடப்பது எளிது ..!

எங்கள் மொழிக்கு அர்த்தம் இல்லாமல் போன
தேசத்தில் நாங்கள் வாய் பேசும் ஊமையானோம் ..!
இடி மின்னல்களுக்கு போட்டியாக வரும் ,
குண்டுகளுக்கு மத்தியில் எங்கள்
செவிகள் மரத்து செவிடானது ..!
ஆமி உடையில் வந்து
காம வேட்டையாடும் மிருகம் கண்டு
எங்கள் கண்கள் குருடானது ..!
விளை நிலத்தில் விதைத்த கண்ணிவெடிகள்
விளைந்ததால்
எங்கள் கால்கள் உடைந்து ஊனமானது ...!
இப்படி,
உடலால் -ஊனமாகி
மனதால்-பிணமாகி
கடலை தாண்டி
புது வாழ்வை தேடுகிறோம் ..!

எங்களுக்கு இரண்டு தாய்,
பிறப்பால் ஒன்று,
கடற்பயணம் சுமக்கும் தோணி -மற்றொன்று ..!
பெற்ற தாய் போல்
பத்துமாதம் நீர்குடத்தில் சுமந்து ,
உலகம் சேர்த்த தாய் போல் ,
கடற்பரப்பில் எங்களை சுமந்து புது இடம்
சேர்க்கும் தோணி -தாய் தான் ..!

சில நேரம் தாயின் பிரசவம் -பொய்த்து போகலாம்..!
கருவில் சிசு கலைவது போல்..!
மூட்டை முடிச்சு
உடன் கொண்டு செல்ல
ஏதுமில்லை -எங்களிடம் !
உடல் உடமையின் -உயிர் சொத்தை
மட்டும் எடுத்து கொண்டோம் ..!
கடலோடு
தோணி துணையோடு பயணம் ..!

இந்த பயணம் ஒரு போர்க்களம் ..!
அலையோடும் மழையோடும்,
புயற்க்காற்றோடும் கடலும்
நடத்தும் யுத்தங்கள் மத்தியில்
இப்பயணம் ..!

உணவாக உண்ண ஏதும் இல்லை ,
காற்றை தவிர..!
நீராக அருந்த ஏதுமில்லை
கடல் நீரை தவிர..!
பலர் சில நேரம்
கடல் நீர் உண்டு உயிர் பிழைத்தோம் ..!
சிலர் பல நேரம்
உயிரையும் இழந்தோம் ..!

திசை மாறிய தோணி
கரை தட்டியதால்
இடம் மாறிப்போனோம் நாங்கள்..!
ராமன் கட்டிய பாலம் முட்டி
இராவணன் தேசத்து மக்கள் கூடமாய் நின்றோம் ..!

அந்த மணற்திட்டில்
பசியால் சிலர்,
மண்ணை உண்டு மண்ணுக்கு இரையானார்கள்..!
பசியால் அழும் குழந்தைகள்
தன் பெற்றோர்களாலே
கொலையானார்கள் ..!
சில நேரம் ,
உதவிகரம் கொண்ட உள்ளம் கொண்டு
புது இடம் சேர்வோம் ..!
பல நேரம் ,
மண்ணோடு மண்ணாகி
அங்கேயே மாய்வோம் ..!

அப்படி உயிர் பிழைத்தால்
மரணம் கூட
பாவப்பட்டு எங்கள் உயிரை
விட்டு விட்டதென பொருள் ..!
உயிர் பிழைத எங்களுக்கு
புது இடத்தில்
புது ஜனனம்
"அகதி" என்ற பெயரில்
மனிதன் என்ற அடையாளம் மாறி ..!

Sunday, April 3, 2011

மனப்புற்கள் மேயும் ஆடுகள் ..!



மனப்புற்கள் மேயும்
சில ஆடுகள்
நினைவில் கொள்ள ..!

மேய்ந்து போன
இடங்களில் நிச்சயம்
உங்கள் மிச்சமும்
தடயமும் இருக்கும் ...!

பேச்சையும் வசீகரத்தையும்
எங்கள் இச்சையையும்
ஆயுதமாய் கொண்டு
உங்கள்
காரியம் செய்யும்
ஆடுகளே..!

நேரம் போல்
மாறி மாற்று
இடத்தில்
மேய்ந்தாலும் ,
அது பச்சோந்திதனமல்ல ..!
அது சகிப்புத்தன்மை ..!

பச்சைபசேல் என இருந்த
இடத்தை
வேற்றுதரையாக
மாற்றிவிட்டு
மேய்ந்து சென்றாலும்
அந்த நிலங்கள்
காய்ந்து பிளக்க கூடாது ..!
காரணம்
ஆடுகள் பாவம்..!
ஒன்றும்
தெரியாது ..!

முத்தமிடுவது போல்
அருகில் வந்து நிற்பது
ஆடுகள் குணம் ..!
பிடித்த இடத்தில் இருப்பதே
புற்களின் மனம்..!

பசித்த வேளையில்
இடம்மாறி போனாலும்
நீங்கள் சுயநலவாதிகளல்ல ..!
காலம் போல்
மாற்றி பேசினாலும்
வார்த்தை சுத்தம் ..!

ஆடுகளின்
நியாயங்கள்
கருத்துகள்
மாறிக்கொண்டே இருக்கும் ,
இடம் மாறி மேய்வது போல் ..!

முன்பு சொன்னதை
உண்டதை
எண்ணி காய்ந்து கிடந்தால்
அது நிலத்தின் குற்றம் ..!

என்றும் புற்கள்
ஆடுகள் வாயில்
தானாக நுழைவதில்லை ..!
உண்பது ஆடானாலும்
பலியாவது புற்கள் தான் ..!

ஆடுகளின் உணவின் ருசி ,
புற்கள் வலி..!

இப்படி இடம் மாறி
குணம் மாறி மேய்ந்து
கொழுத்து நிற்கும்
ஆடுகளே..!
நீங்கள்
உண்பது இப்போது
ஜீரணித்தாலும் ,
ஒரு நாள் வரும்
அன்று
கசாப்பு கடையில்
தொங்கிக்கொண்டு
இருப்பீர்கள் தலைகீழாக ..!

உங்கள் பாவத்தின்
தண்டனையாக..!

அம்மா ...!



ஒரு வீட்டுக்குள்
குடி கொண்டு அனாதையாய்
வாழ்ந்து வந்தேன் ...!
குடிகொண்டது
மொத்தம்
பத்து மாதம் ..!

கிட்டதட்ட
அது ஒரு
தனிக்குடித்தனம் ...!

குடிகொண்ட
நாள் முதல்
வாடகை
தந்ததில்லை ...!

பாசமாக
உன்னுள் வைத்து
உபசரித்து
பாத்து மாதம் கழித்து
வெளியே தள்ளிவிட்டு
அழவைத்த
கொடிய பாசக்காரி ...!

உன் அன்பில் மயங்கி
வாடகை தர மறந்திருப்பேன் ..!
அதற்காகவா
வெளியே தள்ளி விட்டாய் ...!

உன் செயலால்
எனக்கு கோபம்..!
பழி தீர்த்தேன் ,
உந்தன் வயிற்றில்
எட்டி உதைத்து ..!
நீ என்னை வெளியே
தள்ளிய வேளையில் ..!

உந்தன் தண்ணீரில் இருந்து
எந்தன் கண்ணீருடன்
வெளிவந்தேன் ..!

உன்னுள்
இருந்த வரை
காற்று தீண்ட
அஞ்சியது ...!
ஒளி தொட யோசித்தது ...!

வேலையில்லை,
ஒரே வேலை தூக்கம்...!
சிலநேர
விழிப்பில்
தூக்கத்திற்கு ஓய்வு ..!

ஒண்டியாய் இருந்தேன்
உந்தன் துணையோடு ..!

சற்று குழம்பி போனேன்,
இங்கு எல்லாம்
தலைகீழ் ..!
என்னை தள்ளி விட்டாய்
அதனால் எல்லாம்
தலைகீழாக
மாறிவிட்டதோ ...!

பயமாயிருந்தது ,
வெளிச்சம்
கண்டு இமைதிறக்க
விழிகளும்
அஞ்சியது ...!

என்னை சுற்றி பலர் ,
யாரை நம்புவேன் நான்..!
அங்கும்
இருந்தாய்
எனக்காக நீ..!

இருளில்
சென்றால்
நிழலும் பயந்து
மறைந்து ஓடும் ..!
நீயே
இருளில் ஒளியாய்
வெளிச்சத்தில் வழியாய்
இருந்தாய் ...!

என்னை நீ முத்தமிட்ட
முதல் கணம்
உன்னை
பிடித்து
போயிற்று ..!
அப்போதுணர்ந்த
உந்தன் வெப்பம்
உந்தன் சுவரிசம்
நான்
சேமித்த
பொக்கிஷங்கள் ..!

அவை
உன்னை கூட்டத்தில்
காட்டி கொடுக்கும்
ஆட்காட்டி ..!
குருதியை
பாலாக தந்து
உருதியாக்கியவளே..!

நீ கொடுமைக்காரி
பாசமழையில்
பச்சை குழந்தையை
நனையவைத்த
கொடிய பாசக்காரி ..!

என்னகே புரியாத
அழுகை மொழி
உனக்கெப்படி புரிந்த்தது என்று
புரியவில்லை ..!

அழுதிட்ட
முதல் கணமே,
பசியறிந்து பாலூட்டி
ஓய்வறிந்து தாலாட்டி
நோய்யறிந்து குணமாக்கி ..!

விழிகளில்
கண்ணீர் வழிந்திட்டால்
உன் நெஞ்சில்
வெந்நீரை உணர்ந்திட்டாய் ..!

உன் வாய்மொழியில்
உணர்ந்தேன்
என் தாய் மொழியை ..!

தவழ்ந்திட்ட போது
உன் கை பிடித்து
நடை பழகிட்டபோது ,
அம்மா என
உன்னை அழைத்திட்ட போது
உந்தன் மகிழ்ச்சிக்கு இணை இல்லை,
அதை எழுதிட வானமே எல்லை ..!

என் உலகம்
ஆளாக்கி கொடுத்தது
இந்த உலகிற்கு
என்னை..!

நீ ஊட்டும்
பால் சோற்றிடம்
பிச்சை கேட்கும்
தேவலோக அமுதமும் ..!

நோயுற்றால்
உன் அன்பிடம்
பிச்சை கேட்கும்
குணமாக்கும் மருந்தும்..!

நீ பாடும்
தாலாட்டிடம்
பிச்சை கேட்க்கும்
சப்தசுவரங்களும் ..!

சோகமாக
உன்மடியில் படுத்தால்
வேகமாய்
சொர்க்கமே வந்து
மகிழ்வித்திடும்..!

கடவுள் யார் என
அடையாளம்
காட்டும்
என் கடவுள் நீ ...!

மந்திரங்களும்
செய்யும் ஜாலங்களும்
தோற்றுபோகும்,
எக்காலமும்
எல்லோரும்
முதன் முதலில்
சொல்லும் மூன்றெழுத்து
மந்திரம்
-அம்மா ..!