Wednesday, December 29, 2021

புல்லாங்குழல்

மூங்கில் காட்டில் 

வீடிலந்த

குயிலின் அழுகை

புல்லாங்குழலில் கேட்கிறதுTuesday, December 21, 2021

மழை ...!

மழை மட்டும் என்றும் 

வெறும் மழையாக கடக்க

 முடிவதில்லை


சாரல் 

தூறல்

பெருமழை 

ஆலங்கட்டி மழை

மழை மண் மீது தரும் முத்தம்

மண் கூச்சத்தில் தரும் பதில் சத்தம்

 என 

எத்தனை முறை ரசித்தாலும் சலிப்பதில்லை குழந்தையின் முத்தம் போல


மழை புதிதல்ல 

ஒவ்வொரு மழைத்துளியும் புதிது ...


 

Monday, July 25, 2016

பின்தொடரும் கனவின் குரல்..கனவின் நாயகன்
கண்ணுறங்கி போனான்
விதையாய் மாறியே
மண்ணுறங்கி போனான்
...
கனவு காண கற்று தந்தவன்
கண்மூடும் வேளையிலும்
எங்களுக்கு வழிகாட்டி சென்றான்
...
ஊழல் தேசத்தில் பிறந்தோமே
என கூனி குறுகி நிற்கையில்
நம்பிக்கை ஒளி ஊட்டி சென்றான்
...
உறங்காமல் கனவு காண
கற்றுகொண்டோம் உன்னிடம்
இன்று நீ ஏன் உறங்கி மறைந்து
போனாய் விண்ணிடம்
...
அறிவியலில் சிகரம் தொட்டவர்
ஆயிரமுண்டு ,
உன் போல் எங்கள்
இதயம் தொட்டவர் யாருமுண்டா ?
...
விடிவெள்ளி நீ மறைந்தாலும்
உந்தன் வெளிச்சம் மட்டும்
இதயத்தில் என்றுமுண்டு
...
உன் இரு கண்கள் கண்டது
பல கோடி மக்களின் கனவு  ,
எங்கள் ஒவ்வொருவர்
இதயத்திலும்
பின்தொடரும்
உந்தன் கனவின் குரல்
...

Friday, July 1, 2016

கடவுள் தூவிய அட்சதை


அவர்கள்
வண்ணமில்லால் 
புரியமுடியாமல் 
கடவுள் வரைந்த 
புதுமை ஓவியங்கள் 
...
வளர்ந்தும் 
குழந்தையாக , 
பேச்சும் 
மழழையாக
...
முழுதாய் வளர்ந்த
பிறை நிலா ,
தனியோர் உலகத்தில்
அவர்கள் உலா
...

எப்போதும் சிரிக்கும்
பிள்ளை ,
சொன்னதை 
திரும்ப திரும்ப சொல்லும்
கிளிப்பிள்ளை
...

அந்த மாசற்ற புன்னகையில்
மகிழ்ச்சியில்லை ,
பூவுலகின் துன்பங்கள்
அந்த பூக்களுக்கு 
புரிவதுமில்லை
...
அவர்கள்
வரமுமில்லாமல்
சாபமுமில்லாமல்
கடவுள் தூவிய அட்சதை
...

Thursday, December 25, 2014

என்றும் போல அன்றும் ஒரு நாள்


என்றும் போல அன்றும் ஒரு நாள் 
அழகாய் விடிந்தது ,
ஆனால் பூமித்தட்டு 
மட்டும் சற்று அதிர்ந்தது ,
கடலும் தன் முகம் மாறி 
நிலம் வந்து புகுந்தது ...
அன்று மட்டும் 
கடலின் ஒவ்வொரு  அலைகளிளும்  
ஏனோ கொலைகள் விழுந்தன ,
பல உயிர்கள் மடிந்தன ..
உயிரற்ற உடல்களாக 
உயிர் மட்டும் கொண்ட பிணங்களாக
உணவற்ற ஜனங்களாக
உறவற்ற வெற்று மனங்களாக 
பல மக்கள் ..
ஆழிபேரலை வந்து ஆனது 
ஆண்டுகள் பத்து ,
அதன் துன்பியல் நினைவுகள் 
தொலைத்து போக முடியாத 
சோக சொத்து ..

Sunday, December 21, 2014

நான் யார்?
நான் யார்?

தான் ஒரு முட்டாள்
என்ற உண்மையை உணர்ந்த புத்திசாலி ..

பல நினைவுகளை மென்று தின்று
அதை சீரணிக்க முடியாமல்
இன்னும் மென்றுகொண்டிருப்பவன் ..

சில கவிதைகள் போல் சமயங்களில்
எத்தனை முறை படித்தாலும் புரியாதவன் ..

சோம்பலை துரத்தி துரத்தி
காதலிப்பவன் ..

இணையத்தில் மட்டும்
அநியாயம் கண்டு பொங்கும் போராளி ..

தன் மன-சன்னலை
சில கொசுக்களுக்கு பயந்து சாத்திவைப்பவன் ,
ஆனால் காற்றும் வருவதில்லை ..

Wednesday, November 5, 2014

தவிப்பு ..!பகலுடன்
ஓய்வெடுக்க
விடியலுக்காக
இரவெல்லாம் காத்திருக்கிறது
இருள்  ..

இரவுடன்
சேர்ந்துரங்க
இரவுக்காக
பகலெல்லாம் காத்திருக்கிறது
வெளிச்சம் ..

இரண்டும்
ஒன்றை ஒன்று சந்திக்கையில் ,
ஒன்றோடு
மற்றொன்று
தொலைந்து போகிறது ..
காத்திருப்பும்
தவிப்பாய்
தொடர்ந்து போகிறது ..